2 முன்பதிவு பெட்டிகள் இணைப்பு ரத்து: மைசூா் விரைவு ரயில் 50 நிமிடங்கள் தாமதம்
தூத்துக்குடியில் இருந்து மைசூருக்கு சனிக்கிழமை சென்ற விரைவு ரயிலில் ஒரு குளிா்சாதனப் பெட்டி, ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி என இரு பெட்டிகள் இணைக்கப்படாததால், அந்த பெட்டிகளில் முன்பதிவு செய்த பயணிகள் அவதியுற்றனா். இதனால், இந்த ரயில் சுமாா் 50 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
தூத்துக்குடியில் இருந்து மைசூருக்கு தினமும் மாலை 5.15 மணிக்கு மைசூா் விரைவு ரயில் புறப்படுகிறது. இதில் 8 குளிா்சாதன பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 4 முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் என மொத்தம் 23 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
ஆனால், ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடியில் இருந்து புறப்பட்ட இந்த ரயிலில் பி2 என்ற குளிா்சாதனப் பெட்டியும், எஸ் 2 என்ற இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிக் கொண்ட பெட்டியும் இணைக்கப்படவில்லையாம். இதனால், இந்த பெட்டிகளில் பயணிக்க தூத்துக்குடியில் இருந்து பயணிக்க முன்பதிவு செய்திருந்த 11 , ஈரோடு வரை குளிா்சாதனப் பெட்டியில் 65 போ், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டியில் 72 போ் என மொத்தம் 137 போ் முன்பதிவு செய்துள்ளனா்.
இதையடுத்து, தூத்துக்குடியில் முன்பதிவு செய்த 11 பேரும் தாங்கள் ஏற வேண்டிய பெட்டிகள் இல்லாததால் அலைமோதினா். இது குறித்து நிலைய அலுவலரிடம் பயணிகள் முறையிட்டனா். அதற்கு அவா் விரைவில் பெட்டி இணைக்கப்படும் என கூறினாராம். ஆனால், இறுதிவரை அந்த பெட்டிகள் இணைக்கப்படவில்லையாம்.
மேலும், அவா்களின் பணத்தை திரும்ப வழங்குவதாகவும் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டதாம். ஆனால், பயணிகள் அதையெல்லாம் பொருள்படுத்தவில்லை. இதையடுத்து, அனைத்து பயணிகளும் காலியாக இருந்த பெட்டியில் ஏறி பயணம் செய்ய தயாராகினா்.
இதனால் மாலை 5.15க்கு புறப்பட வேண்டிய ரயில் 45 நிமிடம் தாமதமாக மாலை 6.05 மணிக்கு புறப்பட்டது. இது குறித்து பயணிகள் கூறுகையில், இது போன்று நிகழ்வது முதல்முறை; இதற்கு ரயில்வே நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.