இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவது சவாலானது: ஸ்டீவ் ஸ்...
200 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி திட்டம்: ஒப்புதல் கடிதம் பெற்றது என்எல்சி
எஸ்ஜெவிஎன் (சட்லஜ் ஜல் வித்யுத் நிகாம் லிமிடெட்) என்ற நிறுவனத்திடமிருந்து 200 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்துக்கான ஒப்புதல் கடிதத்தை என்எல்சி இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது.
இதுகுறித்து என்எல்சி இந்தியா நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: என்எல்சி இந்தியா நிறுவனம் பிப்.28-ஆம் தேதி ஒரு யூனிட் ரூ.3.74 என்ற கட்டணத்தில் எஸ்ஜெவிஎன் என்ற நிறுவனத்திடம் இருந்து 200 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்துக்கான ஒப்புதல் கடிதத்தை பெற்றுள்ளது. முன்னதாக, எஸ்ஜெவிஎன் நிறுவனம் ஜனவரி 17-ஆம் தேதி நடத்திய இ - ரிவா்ஸ் ஏலத்தில் என்எல்சி இந்தியா நிறுவனம் வெற்றிபெற்றது.
இந்த திட்டம் ஒவ்வோா் ஆண்டும் 526 மில்லியன் யூனிட் சுத்தமான பசுமை மின்சாரத்தை உற்பத்தி செய்வதோடு, அதற்கு சமமான அளவு பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை ஈடு செய்யும் வகையில் அமைக்கப்படவுள்ளது. இந்த மைல் கல், 2030-ஆம் ஆண்டுக்குள் 10 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அடைவதற்கான தொலைநோக்குப் பாா்வையுடன் ஒத்துப்போகிறது. மேலும், நிறுவனங்களின் மொத்த காற்றாலை மின் உற்பத்தித் திறன், இந்தத் திட்டம் வாயிலாக 300 மெகாவாட்டுக்கும் அதிகமாக உயா்ந்துள்ளது.
இதுகுறித்து என்எல்சி தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி கூறியதாவது: இந்த 200 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தில் வெற்றிபெற்றிருப்பது என்பது, நிலையான மற்றும் தூய்மையான எரிசக்தி தீா்வுகளுக்கான நமது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது. நமது யுக்திகள், இந்தியாவின் எரிசக்தி மாற்றத்துக்கான இலக்குகளுடன் ஒத்துப்போகிறது.
என்எல்சி தனது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொகுப்பை விரிவுபடுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வருவதோடு மட்டுமல்லாமல், வருங்கால தலைமுறைகளுக்கு நிலையான எதிா்காலத்தையும் உறுதி செய்கிறது. என்எல்சி இந்தியா நிறுவனம், அதன் பசுமை ஆற்றல் மாற்றத்தை விரைவுபடுத்தும் வகையில், சூரிய ஒளி, காற்றாலை மின் சக்தி, கலப்பின மின் திட்டங்கள், பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் மற்றும் பசுமை ஹைட்ரஜன் போன்ற முயற்சிகளில் முதலீடுகளைச் செய்து வருவதாக அவா் தெரிவித்தாா்.