நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவ கொடியேற்றம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
“200 விக்கெட்டுகள்...” டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை!
டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 200 விக்கெட்டுகள் வீழ்த்தி ஜஸ்பிரித் பும்ரா சாதனை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: 2024 - டி20 சாம்பியன் முதல் உலக செஸ் சாம்பியன் வரை... முக்கிய நிகழ்வுகள் ஒரு பார்வை!
ஜஸ்பிரித் பும்ரா சாதனை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ள ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை ரவீந்திர ஜடேஜாவுடன் இணைந்து அவர் படைத்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டினை வீழ்த்தியபோது, ஜஸ்பிரித் பும்ரா இந்த சாதனையை படைத்தார்.
ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவருமே அவர்களது 44-வது டெஸ்ட் போட்டியில் அவர்களது 200-வது விக்கெட்டினைக் கைப்பற்றியுள்ளனர். வேகப் பந்துவீச்சாளர்களை பொருத்தவரையில், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிகவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை தன்வசமாக்கியுள்ளார் பும்ரா. இதற்கு முன்னதாக, இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ் 50 போட்டிகளில் 200 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்ததே சாதனையாக இருந்தது.
இதையும் படிக்க: முகமது சிராஜுக்கு நன்றி கூறிய நிதீஷ் ரெட்டியின் தந்தை!
அண்மையில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிகவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார். அவர் 37 போட்டிகளில் இந்த சாதனையை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.