செய்திகள் :

2024 - திருப்பங்களை ஏற்படுத்திய தீர்ப்புகள்!

post image

தேர்தல் நன்கொடை பத்திரம் ரத்து, அரசியல் தலைவர்களுக்கு ஜாமின், ஆளுநர்களுக்கு எதிரான உத்தரவு எனப் பல முக்கிய தீர்ப்புகள் இந்தாண்டு வெளியாகின.

குறிப்பாக, மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நேரத்தில், அரசியல் கட்சிகளுக்கு எதிரான நீதிமன்றங்களின் உத்தரவுகள், சில கட்சிகளுக்கு தேர்தல் முடிவுகளில் பின்னடைவை ஏற்படுத்தியது.

அரசியல் தலைவர்களின் பிணை

தில்லியில் புதிய மதுபானக் கொள்கையை அரசு அமல்படுத்தியதில், பண முறைகேடு நிகழ்ந்ததாக அமலாக்கத் துறையும் சிபிஐ காவல்துறையும் வழக்குப் பதிந்து துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை கடந்த 2023-ல் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலுக்கு இரு மாதங்களுக்கு முன்னதாக தில்லி முதல்வராக இருந்த அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டார். இந்திய வரலாற்றில் முதல்வரைக் கைது செய்தது இதுவே முதல்முறை.

இதே வழக்கில், தெலங்கானா முன்னாள் முதல்வரான சந்திரசேகர் ராவின் மகளும், சட்டமேலவை உறுப்பினருமான கே. கவிதாவும் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.

மேலும், 2022 ஆம் ஆண்டு அமலாக்கத் துறை பதிவு செய்த நில மோசடி தொடர்பான வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனையும் கைது செய்து சிறையில் அடைத்தனர் (கைதுக்கு முன்னதாக முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜிநாமா செய்தார்).

இவர்கள் அனைவரும் விசாரணை நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் பல முறை ஜாமீன் கேட்டு முறையிட்ட போதிலும் மக்களவைத் தேர்தல் முடியும் வரை யாருக்கும் ஜாமீன் வழங்கப்படவில்லை.

தமிழகத்தில் கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் திமுகவின் முக்கிய தலைவராக கருதப்படும் அமைச்சர் செந்தில் பாலாஜியும் இந்த வரிசையில் ஒருவர்.

இவர்களில் கேஜரிவாலுக்கு மட்டும் பிரசாரத்துக்காக நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. எனினும், ஜார்க்கண்ட் ஆளும் கட்சியின் தலைவரான ஹேமந்த் சோரனுக்கும், தெலங்கானா முதல்வரின் மகளுக்கும் பிரசாரத்துக்கான வாய்ப்பை நீதிமன்றம் வழங்கவில்லை.

மாநிலங்களில் ஆட்சியில் இருந்த முக்கியக் கட்சிகளின் தலைவர்களின் கைதால், மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சிகள் பெரும் பின்னடைவை சந்தித்தன.

தில்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளிலும் ஜார்கண்டில் 14-ல் 8 தொகுதிகளிலும் பாஜக வென்றது, தெலங்கானாவின் எதிர்க்கட்சியான பாரத ராஷ்டிர சமிதியால் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியவில்லை.

எதிர்க்கட்சிகளின் தலைவர்களை கைது செய்து பிரசாரத்தில் ஈடுபடவிடாமல் பாஜக தடுத்ததாகவும், தேர்தலில் சமநிலைப் போட்டி இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன், ஹேமந்த் சோரன், மணீஷ் சிசோடியா, கே. கவிதா, அரவிந்த் கேஜரிவால், செந்தில் பாலாஜி என அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வரிசையாக ஜாமீனில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நன்கொடை பத்திரம்

தேர்தல் நன்கொடை பத்திர திட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இந்தாண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி தீர்ப்பளித்தது.

மேலும், இதுவரை விநியோகிக்கப்பட்ட பத்திரங்கள் மூலம் எந்தெந்த நிறுவனங்கள் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு நன்கொடை, எந்த காலகட்டத்தில் அளிக்கப்பட்டது என்பது உள்பட முழு விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பிக்கவும், அதனை தேர்தல் ஆணையம், தனது வலைதளத்தில் வெளியிடவும் உத்தரவிட்டிருந்தது.

இதன்படி, தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலில், மொத்த நன்கொடையில் 50 சதவிகிதத்துக்கு மேல் பாஜகவுக்கு கிடைத்தது அம்பலமானது. நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு 11 சதவிகிதம் நன்கொடை மட்டுமே கிடைத்திருந்தது.

இந்த நிலையில், அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளை வைத்து தனியார் நிறுவனங்களை மிரட்டி, தேர்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் பெரும் தொகையை பாஜக பெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

தேர்தல் நன்கொடை பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டதன் மூலம், மக்களவைத் தேர்தலில் மத்தியில் மற்றும் மாநிலங்களில் ஆளும் கட்சிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் பெயரைக் குறிப்பிடாமல் பெரும் அளவிலான நிதி அளிப்பது தவிர்க்கப்பட்டது.

பில்கிஸ் பானு வழக்கு

கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் மதக் கலவரம் நடைபெற்றபோது, 21 வயதான பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். ஐந்து மாத கா்ப்பிணியாக இருந்த அவரின் 3 வயது மகள் உள்பட குடும்ப உறுப்பினா்கள் 7 பேரை வன்முறை கும்பல் கொலை செய்தது.

இந்த சம்பவம் தொடா்பாக 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவா்கள் அனைவரையும் கடந்த 2022 ஆம் ஆண்டு சுதந்திர நாளன்று குஜராத் அரசு விடுதலை செய்தது.

கடந்த 1992-ஆம் ஆண்டு குஜராத்தில் அமல்படுத்தப்பட்ட சிறைக் கைதிகள் தண்டனைக் குறைப்பு கொள்கையின் அடிப்படையில், அவா்கள் விடுதலை செய்யப்பட்டதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், குஜராத் அரசின் முடிவை எதிர்த்து பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு உள்பட பலர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் பி வி நாகரத்னா மற்றும் நீதிபதி உஜ்ஜல் புயான் அமர்வு, குஜராத் அரசின் தண்டனைக் குறைப்பு உத்தரவை ஜனவரி 8ஆம் தேதி ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இதனைத் தொடர்ந்து, விடுவிக்கப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிக்க : 2024 - டி.ஒய். சந்திரசூட் முதல் சேகர் யாதவ் வரை... நீதிபதிகளும் நீதித்துறையும்!

பொன்முடி பதவிப் பிரமாணம்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது உயா்நீதிமன்றம் . இதையடுத்து அவர் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அமைச்சர் பதவியையும் இழந்தார்.

இதனைத் தொடர்ந்து, தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த பொன்முடி தடை உத்தரவு பெற்றார். பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ பதவி வழங்கி தமிழக சட்டப்பேரவை செயலகம் உத்தரவிட்டதை தொடர்ந்து, அவருக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநருக்கு கடிதம் எழுதினார்.

ஆனால், முதல்வரின் கோரிக்கையை ஏற்க மறுத்த ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது.

தமிழக அரசின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் மூன்று பேர் அடங்கிய அமர்வு, நாளை வரை அவகாசம் அளிக்கிறோம், உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் விட்டால், ஆளுநர் அரசியல் சாசனத்தின்படி செயல்படுமாறு உத்தரவிட நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக பொன்முடியின் அமைச்சர் பதவியேற்புக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

எஸ்.சி., எஸ்.டி. உள்ஒதுக்கீடு

ஆந்திர மாநிலத்தில் எஸ்.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கி மாநில அரசு பிறப்பித்த உத்தரவை எதிா்த்து இ.வி. சின்னையா என்பவா் தொடா்ந்த வழக்கில், ‘ஒரே மாதிரியான சமூக பிரிவுக்குள், துணை வகைப்படுத்துதல் செய்ய அனுமதிக்க முடியாது’ என்று உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமா்வு கடந்த 2014-ஆம் ஆண்டு அளித்த தீா்ப்பை தள்ளுபடி செய்தது.

5 நீதிபதிகள் அமா்வு அளித்த தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி ஆந்திர மாநில அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதுபோல, எஸ்.சி. பிரிவில் உள்ஒதுக்கீட்டை அனுமதிக்கக் கோரி பஞ்சாப் மாநில அரசு தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு ஆகஸ்ட் 1ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

அந்த தீர்ப்பில், ‘பட்டியலின, பழங்குடியின (எஸ்.சி., எஸ்.டி.) பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது’ என்ற முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவை பிறப்பித்தது.

சண்டீகர் மேயர் தேர்தல்

சண்டீகர் மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஜனவரி 30-ஆம் தேதி நடைபெற்றது.

மொத்தம் பதிவான 36 வாக்குகளில் பாஜக 16 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தது. இந்தியா கூட்டணியின் 8 கவுன்சிலர்களின் வாக்குகள் செல்லாது, ஆகையால் அவர்கள் 12 வாக்குகள் மட்டுமே பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அனில் மாசிஹ் தெரிவித்தார். மேலும் பெரும்பான்மைக்கு குறைவாக இடங்களை பெற்ற பாஜக வெற்றி பெற்றதாகவும் அறிவித்தார்.

இந்த முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது.

தேர்தலின்போது எடுக்கப்பட்ட விடியோ ஆதராங்களை ஆராய்ந்த நீதிபதிகள், தேர்தல் அதிகாரியால் செல்லாததாக அறிவிக்கப்பட்ட 8 வாக்குகளும் செல்லும் என்று தீர்ப்பளித்தனர். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது துறை ரீதியிலான நடவடிக்கைக்கு பரிந்துரைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, இந்தியா கூட்டணி மேயர் வேட்பாளர் குல்தீப் குமார் 20 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

கொல்கத்தா மருத்துவர் கொலை

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி 31 வயது முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து மருத்துவமனையிலுள்ள கருத்தரங்கு கூடத்திலேயே கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் காவல்துறைக்கு உதவும் தன்னார்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் முறையான விசாரணை நடவடிக்கை கோரி நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்தனர். கொல்கத்தா இளநிலை மருத்துவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கி அழுத்தம் கொடுத்தனர்

நிலைமை மிகவும் மோசமடைவதை கண்ட உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, சிறப்பு புலனாய்வுக் குழுவின் (சிபிஐ) விசாரணைக்கு உத்தரவிட்டு, மருத்துவர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப அறிவுறுத்தியது.

தற்போது உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகின்றது.

புல்டோசா் நடவடிக்கைக்கு தடை

உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளை அரசு அதிகாரிகள் இடிக்கும் ’புல்டோசர் நீதி’ நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் அமர்வு, குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் வீடுகளை இடிப்பது அரசமைப்புக்கு எதிரானது எனத் தெரிவித்தது.

சட்டத்தை செயல்படுத்தக்கூடிய அதிகாரிகள், தன்னிச்சையாக தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தக் கூடாது, அதிகாரிகளே, நீதிபதிகளாக மாறி, குற்றம்சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகளாக்கி, அவர்களது வீடுகளை இடித்துத்தள்ளக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

வழிபாட்டுத் தலங்கள்

உத்தரப் பிரதேசம் மாநிலம், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, மதுராவில் உள்ள ஈத்கா மசூதி, சம்பலில் உள்ள ஜாமா மசூதி ஆகியவை தொன்மையான ஹிந்து கோயில்களை இடித்து கட்டப்பட்டவை என்று ஹிந்துக்கள் தரப்பில் நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

சம்பல் மசூதியில் தொல்லியல்துறை ஆய்வுக்கு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது வன்முறைக்கு வழிவகுத்தது.

இந்நிலையில், வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டத்தின் 2, 3 மற்றும் 4 பிரிவுகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு விசாரணைக்கு எடுத்தது.

மனுக்களை ஆய்வு செய்த நீதிபதிகள், 1991-வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் செல்லத்தக்க தன்மையை உச்சநீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை, பிற நீதிமன்றங்கள் இந்த விவகாரம் தொடா்பாக நிலுவையில் உள்ள வழக்குகளில் மசூதியில் ஆய்வுக்கான இடைக்கால உத்தரவு அல்லது இறுதி உத்தரவு உள்பட எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று உத்தரவிட்டனா்.

நீதித் துறையின் செயல்பாடுகளில் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க கடைசி வாய்ப்பாக நீதிமன்றத்தையே மக்கள் நாடுகின்றனர்.

2025 தொடக்கத்திலேயே உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள வழிபாட்டுத் தலங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

2024 - இந்தியத் தேர்தல் களத்தில் வென்றதும் வீழ்ந்ததும்!

2024! யாருக்கு சிறப்பான ஆண்டாக அமைந்ததோ, இல்லையோ? இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு மிக முக்கியமான ஆண்டாகவே அமைந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஆம்.. அனைவரும் எதிர்பார்த்திருந்த மக்களவைத் தேர்தல் ஒருபுறம்,... மேலும் பார்க்க

அதிகாரத்திற்கு அடங்காத போராளி கவிஞர் ஹபீப் ஜாலிப்! கவிதைதான் குற்றம்- 10

‘ஒன்று இரண்டானது; இரண்டு, துண்டாகி மூன்றானது’ என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் 1947 ஆகஸ்டுக்குப் பிந்தைய நிகழ்வுகளின் மிகச் சுருக்கமான, ஒற்றைவரி அரசியல் வரலாறு. காலங்காலமாக ஒன்றாக இருந்தாலும் ஒன்றிணைய... மேலும் பார்க்க

நானறிந்த மன்மோகன் சிங்

எம்.ஆா். சிவராமன் மன்மோகன் சிங் என்னை 1978-இல் பொருளாதார விவகாரத் துறை இயக்குநராக நியமிக்கச் செய்தாா். சில மாதங்களுக்குப் பிறகு, 1979 டிசம்பரில், என் அறைக்கு வந்த அவா், எப்போது இணைச் செயலாளராகப் போகி... மேலும் பார்க்க

2024 - டி20 சாம்பியன் முதல் உலக செஸ் சாம்பியன் வரை... முக்கிய நிகழ்வுகள் ஒரு பார்வை!

இந்த ஆண்டு விளையாட்டுத் துறையில் இந்திய அணி 11 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை வென்றது முதல் தமிழக வீரர் குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றது வரை பல்வேறு முக்கிய வரலாற்று நிகழ்வுகள் அரங்கேறியு... மேலும் பார்க்க

2024 பேசும் பொருளான சர்ச்சைகள்: 'மோடி' முதல் 'அம்பேத்கர்'

2024 வேகமாக கடந்து இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், நடப்பாண்டில் நாடு முழுவதும் சர்ச்சைக்குள்ளாகி பேசும் பொருளான தலைவர்களின் முக்கியமான சர்ச்சையான பேச்சுகள், கண்டனங்கள், கருத்துகள் நாட்டு மக்க... மேலும் பார்க்க

2024 - மீண்டும் அறிமுகமான தென்னிந்திய ஜான்சிராணி! யார் இந்த அஞ்சலை அம்மாள்?

தமிழகத்தில் அனைவரும் எதிர்பார்த்த தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டின் அரங்கைக் கட் அவுட்களாக அலங்கரித்த ஐந்து பெருந் தலைவர்களில் ஒருவர் இந்த அஞ்சலை அம்மாள். பலரும் பெரிதாக அறிந்திராத இந்த ... மேலும் பார்க்க