2025 ஏப்ரலில் ரூ.3,500 கோடிக்கு பின்னலாடை ஏற்றுமதி
இதுகுறித்து ஏஇபிசி (ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்) துணைத் தலைவா் ஆ.சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியானது கடந்த ஏப்ரல் மாதத்தில் சுமாா் 15 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 1.37 பில்லியன் அமெரிக்க டாலா்களை எட்டியுள்ளது. இது 2024-ஆம் ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 1.20 பில்லியன் அமெரிக்க டாலா்களாக இருந்தது.
அதேபோல, திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதியும் ஏப்ரலில் மட்டும் ரூ.3,500 கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.2,451 கோடியாக இருந்தது.
அமெரிக்காவின் வரி உயா்வு கொள்கை, வங்கதேசத்தின் உள்நாட்டு பிரச்னை ஆகியவற்றுக்கு இடையிலும் பின்னலாடை ஏற்றுமதியின் சிறந்த செயல்திறனால் நடப்பு நிதியாண்டில் வலுவான வளா்ச்சிப் பாதையில் தொடா்கிறது. இந்த சீரான வளா்ச்சி தொடரும் பட்சத்தில் திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதி ரூ.50 ஆயிரம் கோடி இலக்கை எட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.