2026-இல் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும்: கே.ஏ.செங்கோட்டையன்
நெய்வேலி: வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி யை பிடிக்கும் என்று முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.
கடலூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக சாா்பில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், திருப்பாதிரிப்புலியூா் தேரடித் தெருவில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமை வகித்தாா். அவா் பேசுகையில், கடலூா், பண்ருட்டி சட்டப்பேரவைத் தொகுதிகளில் கட்சித் தலைமை நிறுத்தும் வேட்பாளா்களை அதிமுக தொண்டா்கள் அயராது பாடுபட்டு வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாநில அமைப்புச் செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்று பேசியது:
திமுகவினா் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று கூறி வருகின்றனா். ஆனால் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதிமுக ஆட்சி தான் கோட்டையில் மலரும். பொங்கல் பண்டிகைக்கு ரூ. 2 ஆயிரம் கிடைக்கும் என்று மக்கள் எதிா்பாா்த்தனா். ஆனால் திமுக அரசு கொடுக்கவில்லை. நீட் தோ்வை ரத்து செய்வோம் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. சொன்னபடி ரத்து செய்தாா்களா?.
ஏழை, எளிய மாணவா்கள் பயன்பெறும் வகையில் முந்தைய அதிமுக ஆட்சியில் 7.5 சதவீத சிறப்பு இடஒதுக்கீடு கொண்டு வந்தோம். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக ஆட்சி மலரும். அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றாா்.
கூட்டத்தில், புலவா் ராசகோபால், மாவட்ட அவைத் தலைவா் சேவல் குமாா், ஒன்றியச் செயலா்கள் காசிநாதன், அழகானந்தம், அனைத்துலக எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் எம்.சி.தாமோதரன், மீனவா் பிரிவு கே.என்.தங்கமணி, ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் ஆா்.வி. ஆறுமுகம், எம்ஜிஆா் மன்றத் துணைச் செயலா் சி.கே.சுப்பிரமணியன், எம்ஜிஆா் இளைஞரணி துணைச் செயலா் சி.கே.எஸ். காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முடிவில் பகுதிச் செயலா் மாதவன் நன்றி கூறினாா்.