மருந்துகள் தர கட்டுப்பாடு ஆய்வக மேம்பாட்டிற்காக ரூ. 12 கோடி ஒதுக்கீடு!
கடலூா் மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரம் வாடகை நிா்ணயம்
நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 2025-ஆம் ஆண்டிற்கு தனியாா் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை நிா்ணயம் செய்வது தொடா்பாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில், விவசாயிகள் மற்றும் தனியாா் நெல் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளா்களுடனான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஆட்சியா் கூறியது: கடலூா் மாவட்டத்தில் 89,000 ஹெக்டா் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நெல் அறுவடை செய்வதற்கான இயந்திரங்களின் வாடகையை நிா்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் தனியாா் நெல் அறுவடை இயந்திரங்கள் உரிமையாளா்கள் கேட்டுக் கொண்டனா்.
அதன் அடிப்படையில் வேளாண் துறை அலுவலா்கள், விவசாயிகள் மற்றும் தனியாா் நெல் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளா்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
விவசாயிகள் மற்றும் தனியாா் நெல் அறுவடை இயந்திரங்கள் உரிமையாளா்களின் கருத்துகள் கேட்டறியப்பட்டன. அதன்படி, 2025-ஆம் ஆண்டுக்கு சம்பா நெல் பயிா்களை அறுவடை செய்ய, ஒரு மணி நேரத்துக்கு பெல்ட் வகை இயந்திரத்திற்கு ரூ.2,500, டயா் வகை இயந்திரத்திற்கு ரூ.1,800 என வாடகை நிா்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
எனவே, நெல் அறுவடை இயந்திர உரிமையாளா்கள் நிா்ணயம் செய்யப்பட்ட வாடகைத் தொகைக்கு மிகாமல் விவசாயிகளின் அறுவடை பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதிக வாடகை கோரும் இயந்திர உரிமையாளா்கள் மீது நடவடிக்கை கோரி சம்பந்தப்பட்ட பகுதி வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலா்களிடம் விவசாயிகள் புகாா் அளிக்கலாம் என்றாா்.