Elon Musk: 'டிகிரிலாம் வேண்டாம்... ஆட்கள் தேவை' - வேலைக்கு அழைக்கும் எலான் மஸ்க்...
22 ஆண்டுகளுக்குப் பின்.. வெகுசிறப்பாக நடைபெற்ற நடராஜர் கோயில் தெப்போற்சவம்!
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில், சுமார் 22 ஆண்டுகளுக்குப் பின் நடராஜர் கோயில் தெப்போற்சவம் புதன்கிழமை இரவு வெகுசிறப்பாக நடைபெற்றது.
கடலூர் மாவட்டம். சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன திருவிழாவின் போது நிறைவு நாளன்று சிதம்பரம் ஞானப்பிரகாசர் குளத்தில் தெப்போற்சவம் நடைபெற்று வருவது தொன்று தொட்டு வழக்கமாக இருந்து வந்தது.
இந்நிலையில் தற்போது குளம் சீரமைக்கப்பட்டு சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தெப்போற்சவம் விமரிசையாக புதன்கிழமை இரவு நடைபெற்றது.
ஞானபிரகாசம் குளம்
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் தென் கிழக்குப் பகுதியில் சுமார் இரண்டு கி.மீ. தொலைவில், ஞானபிரகாசம் நகர் எனும் பகுதியில் ஞானபிரகாசம் குளம் பெரிய நீர்நிலையாக விளங்குகிறது. இந்தப் பெருங்குளத்தில் ஆனி மற்றும் மார்கழி ஆருத்ரா தரிசன மஹோத்ஸவ காலத்தின் முத்துப்பல்லக்கு திருவிழாவிற்கு அடுத்த நாளில் தெப்பம் அமைக்கப்பெற்று, அதில் ஸ்ரீ நடராஜர் கோயிலின் ஸ்ரீ சந்திரசேகரர் எழுந்தருளி குளத்தை வலம் வரும் தெப்பல் உற்சவம் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெறும்.
பெயர்க்காரணம்:
ஏறக்குறைய நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை நாட்டில் உள்ள நல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி நகரைச் சேர்ந்தவரும் ஜீவகாருண்யம் மிக்கவராகவும் தமிழிலும் வடமொழியிலும் பெரும் புலமைப் பெற்றவராகவும், ஆறுமுக நாவலரின் முன்னோர் வம்சத்தில் தோன்றியவராகவும் புகழப்படும் ஞானபிரகாசர் எனும் பெருமானார் தில்லைத் திருத்தலத்தின் மீது பெரும்பற்று கொண்டு சிதம்பரம் வந்து தங்கியிருந்து, சிவகாமி அம்மன் ஆலயத்தின் திருப்பணிகளிலும், ஞானபிரகாசம் குளம் திருப்பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார் என வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இச்சிறப்பு வாய்ந்த குளம் பராமரிப்பின்றி பாழடைந்து போனதால், கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக தெப்போற்சவம் நடைபெறாமல் நின்று போனது.
இந்நிலையில் தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், சிதம்பரம் நகரமன்ற தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் ஆகியோர் தீவிர முயற்சியால் தெப்ப உற்சவம் நடைபெறும் ஞானப்பிரகாசர் குளம், சிதம்பரம் நகராட்சி சார்பில் ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குளம் தூர்வாரப்பட்டு, நான்கு புறமும் மின்விளக்குகளுடன் நடைபாதையும், குளத்தின் நடுவே நீராழி மண்டபம் அமைக்கப்பட்டு அண்மையில் திறக்கப்பட்டது.
தெப்பல் உற்சவத்தை முன்னிட்டு கோயில் கமிட்டி செயலாளர் உ.வெங்கடேச தீட்சிதர், கட்டளை தீட்சிதர்கள் நி.பாலதண்டாயு தீட்சிதர், பட்டு தீட்சித,ர் கட்டளைதாரர்கள் சி.ஏ.நடராஜன், வனஜா, என்.குமரகுரு கண்ணன் ஆகியோரால் நீராழி மண்டபம் அமைக்கப்பட்டு அண்மையில் திறக்கப்பட்டது.
இந்நிலையில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு ஜன.15-ம் தேதி புதன்கிழமை இரவு தெப்பல் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. தெப்பல் உற்சவத்தில் நடராஜர் கோயில் உற்சவரான சிவகாமசுந்தரி அம்பாள் சமேத சந்திரசேகரர் எழுந்தருளி குளத்தை வளம் வந்து நீராழி மண்டபத்தில் வீற்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். நீராழி மண்டபத்தில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் நகரமன்ற தலைவர் கே.ஆர்.செந்தில்குமார், ஆணையாளர் டி.மல்லிகா, பொறியாளர் சுரேஷ், மூத்த மருத்துவர் கே.ஆர்.முத்துக்குமரன், நகரமன்ற துணைத் தலைவர் முத்துக்குமார், நகரமன்ற உறுப்பினர்கள் அப்புசந்திரசேகரன், தில்லை ஆர்.மக்கீன், ஏஆர்சிமணிகண்டன், பூங்கொடி தியாகராஜன், திமுக மாவட்ட பிரதிநிதிகள் ரா.வெங்கடேசன், வி.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, நகர துணைச் செயலாளர்கள் பா.பாலசுப்பிரமணியன், ஆர்.இளங்கோ, மக்கள் அருள், சிதம்பரம் நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் சமூகப்பணி சங்க அமைப்பாளர் மு.செங்குட்டுவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தெப்பல் உற்சவத்தை முன்னிட்டு ஞானப்பிரகாசர் குளம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.