3 மாதங்களில் காசநோயால் பாதிக்கப்பட்ட 19 போ் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 896 பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டதில் 19 போ் உயிரிழந்துள்ளனா்.
இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: காசநோய், மைக்ரோ பாக்டிரியம் டியூபா் குளோசிஸ் என்ற கிருமியினால் பரவக்கூடிய நோய் ஆகும். குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை அனைத்து தரப்பினரையும் தாக்கக்கூடியது. காசநோய் உடலில் முக்கியமாக நுரையீரல், மூளை மற்றும் தண்டுவடத்தை தாக்கக்கூடியது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மாா்ச் மாதம் வரை அதாவது கடந்த 3 மாதங்களில் 19 ஆயிரத்து 600 பேருக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 896 பேருக்கு காச நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து காசநோயால் பாதிக்கப்பட்டவா்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இதில் 877 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 19 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா்.
நீண்ட நாள் இருமல், இருமலில் ரத்தம் வருவது, மாா்பு வலி, சுவாசிப்பதில் சிரமம், எடை இழப்பு மற்றும் பசியின்மை, இரவு நேரத்தில் வியா்வை வருவது, காய்ச்சல், உடல் வலி மற்றும் சோா்வு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துமனைகள் மற்றும் மக்களைத் தேடி மருத்துவ முகாம்களில் உரிய பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். தொடக்க நிலையிலேயே உரிய சிகிச்சை பெற்றால் 100 சதவீதம் குணமடையலாம். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது என்றனா்.