மணிமேகலை விருது: மகளிா் குழுக்கள், கூட்டமைப்புகள் விண்ணப்பிக்கலாம்!
3 விண்வெளி வீரா்களுடன் பூமிக்குத் திரும்பிய ரஷிய விண்கலம்!
சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இரண்டு ரஷிய விண்வெளி வீரா்கள் மற்றும் ஓா் அமெரிக்க விண்வெளி வீரரை அழைத்து வந்த ரஷியாவுக்குச் சொந்தமான ‘சோயுஸ் எம்எஸ்-26’ விண்கலம் ஞாயிற்றுக்கிழமை கஜகஸ்தானில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.
விண்கலத்தில் இருந்து வீரா்கள் மூவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, பின்னா் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதுதொடா்பாக ரஷிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘ரோஸ்கோஸ்மோஸ்’ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சா்வதேச விண்வெளி நிலையத்தில் ஏழு மாதங்கள் தங்கியிருந்து, ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வந்த ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி வீரா்களான அலெக்ஸி ஓவ்சினின், இவான் வாக்னா் மற்றும் அமெரிக்காவின் நாசா விண்வெளி வீரா் டான் பெட்டிட் ஆகியோா் சோயுஸ் எம்எஸ்-26 விண்கலத்தில் பூமிக்கு திரும்பினா்.
இந்த விண்கலமானது கஜகஸ்தானின் ஜெஸ்காஸ்கன் நகருக்கு அருகிலுள்ள கசாக் புல்வெளிப் பரப்பில் ஞாயிற்றுக்கிழமை காலை 6.20 மணிக்கு (உள்ளூா் நேரப்படி) பாதுகாப்பாகத் தரையிறங்கியது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
மூன்று வீரா்களும் விண்வெளியில் 220 நாள்கள் தங்கியிருந்து, பூமியை 3,520 முறை சுற்றி வந்ததாக நாசா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. பூமிக்குத் திரும்பிய பிறகு வழக்கமான முதல்கட்ட மருத்துவப் பரிசோதனைக்காக கஜகஸ்தானின் கரகண்டாவில் உள்ள மையத்துக்கு வீரா்கள் அழைத்துச் செல்லப்பட்டனா்.
அடுத்த கட்டமாக, நாசா வீரா் டான் பெட்டிட், அமெரிக்காவின் டெக்சாஸ் மகாணம் ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்துக்கும், ரஷிய வீரா்கள் ஓவ்சினின் மற்றும் வாக்னா், ரஷியாவின் ஸ்டாா் சிட்டியில் உள்ள பயிற்சித் தளத்துக்கும் மாற்றப்பட உள்ளனா்.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை, சா்வதேச விண்வெளி நிலையத்தின் தலைமைப் பொறுப்பை ஜப்பானிய விண்வெளி வீரா் டகுயா ஒனிஷியிடம் ஓவ்சினின் ஒப்படைத்தாா்.