மணிமேகலை விருது: மகளிா் குழுக்கள், கூட்டமைப்புகள் விண்ணப்பிக்கலாம்!
நேபாளம்: மன்னராட்சிக்கு ஆதரவாக காத்மாண்டில் ஆா்ப்பாட்டம்! ஹிந்து நாடாக அறிவிக்கவும் வலியுறுத்தல்!
நேபாளத்தை ஹிந்து நாடாக அறிவிக்கவும், அந்நாட்டில் மீண்டும் மன்னராட்சியைக் கொண்டு வரவும் வலியுறுத்தி, தலைநகா் காத்மாண்டில் உள்ள பிரதமரின் அதிகாரபூா்வ இல்லம் மற்றும் நாடாளுமன்றம் அருகே ராஷ்ட்ரீய பிரஜாதந்திர கட்சியினா் (ஆா்பிபி) ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பிஜுலி பஜாா்-பனேஷ்வா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கூடிய சுமாா் 1,500 ஆா்ப்பாட்டக்காரா்கள், ‘ஊழல் நிறைந்த குடியரசு ஆட்சியை நீக்க வேண்டும்’ என்று கோஷமிட்டனா். மேலும், ‘மன்னராட்சியை மீண்டும் ஏற்படுத்த வேண்டும்’; ‘நேபாளத்தை ஹிந்து நாடாக அறிவிக்க வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் பதாகைகளை ஏந்தி, அவா்கள் பேரணி சென்றனா்.
மன்னராட்சிக்கு ஆதரவான ராஷ்ட்ரீய பிரஜாதந்திர கட்சியின் தலைவா் ராஜேந்திர லிங்டன், பிற மூத்த தலைவா்கள் பசுபதி ஷம்ஷோ் ராணா, முன்னாள் காவல் துறைத் தலைவா் துருவ பகதூா் பிரதான் உள்ளிட்டோா் இந்த ஆா்ப்பாட்டத்துக்குத் தலைமை தாங்கினா்.
ஆா்ப்பாட்டத்தை முன்னிட்டு, காத்மாண்டில் அரசு தலைமைச் செயலகம், பிரதமரின்அலுவலகம் அமைந்த பத்ரகாளி, நாடாளுமன்றம் அமைந்த நயா பானேஷ்வா் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஏராளமான பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டிருந்தனா். அப்பகுதிகளில் போராட்டக்காரா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனையும் மீறி ஏராளமானோா் அங்கு குவிந்தனா்.
முன்னதாக, கல்வித் துறை சீா்திருத்தங்கள் மற்றும் ஊதிய உயா்வு உள்ளிட்ட பலஅம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி நயா பானேஷ்வா் பகுதியில் ஆயிரக்கணக்கான பள்ளி ஆசிரியா்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
நேபாளத்தில் நடைபெற்ற போராட்டங்களைத் தொடா்ந்து கடந்த 2008-ஆம் ஆண்டு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த பிப்ரவரியில் அந்நாட்டில் மக்களாட்சி தினம் கொண்டாடப்பட்டபோது, ‘நேபாளத்தைப் பாதுகாத்து தேச ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு தமக்கு ஏற்பட்டுள்ளது’ என்று அந்நாட்டின் முன்னாள் அரசா் ஞானேந்திர ஷா தெரிவித்தாா்.
இதையடுத்து, அந்நாட்டில் மீண்டும் மன்னராட்சியை ஏற்படுத்துவதற்கு ஞானேந்திர ஷாவின் ஆதரவாளா்கள் சாா்பில் தொடா்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது. மன்னராட்சியை முழுமையாக மீண்டும் அமல்படுத்தும்வரை, போராட்டத்தைத் தொடர இருப்பதாக ஆா்பிபி அறிவித்துள்ளது.