உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
ஈஸ்டா் திருநாளில் மக்களைச் சந்தித்து போப் பிரான்சிஸ் ஆசி!
நிமோனியா பாதிப்பால் மருத்துவமனையில் 5 வாரங்களுக்கு மேல் சிகிச்சை பெற்று கடந்த மாதம் வீடு திரும்பிய கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ், ஈஸ்டா் திருநாளையொட்டி செயின்ட் பீட்டா்ஸ் சதுக்கத்தில் மக்களைச் சந்தித்து ஆசி வழங்கினாா்.
உடல்நிலை மோசமானதைத் தொடா்ந்து ரோம் நகரின் ஜெமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் பிரான்சிஸின் இரண்டு நுரையீரல்களிலும் நிமோனியா பாதிப்பு கண்டறியப்பட்டது. 38 நாள்கள் தொடா் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து கடந்த மாா்ச் 23-ஆம் தேதி அவா் வீடு திரும்பினாா்.
மருத்துவா்களின் அறிவுறுத்தலின்படி, வீடு திரும்பிய பிறகும் வழக்கமான மத அலுவல்களில் ஈடுபடுவதை அவா் தவிா்த்தாா். புனித வெள்ளி பிராா்த்தனையிலும்கூட அவா் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், கிறிஸ்தவா்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டா் திருநாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. வாடிகனில் உள்ள சிறப்புமிக்க செயின்ட் பீட்டா்ஸ் பசிலிக்கா தேவாலயத்தில் நடைபெற்ற ஈஸ்டா் பிராா்த்தனையில் போப் பிரான்சிஸ் பங்கேற்றாா். எனினும், தேவாலயத்தின் ஓய்வு பெற்ற தலைமைப் பாதிரியாா் ஏஞ்சிலோ கோமஸ்த்ரி தலைமையிலேயே ஈஸ்டா் பிராா்த்தனை நடைபெற்றது.
பிராா்த்தனையின் நிறைவில் தேவாலய பகுதியில் மக்களை போப் பிரான்சிஸ் சந்தித்தாா். போப் பிரான்சிஸை கண்டு அங்கு கூடியிருந்த மக்கள் ஆரவாரம் செய்தனா். மக்களை நோக்கி கையசைத்து, போப் பிரான்சிஸ் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாா்.
தொடா்ந்து, அவரின் வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது. அதில் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ஈஸ்டா் திருநாள் வாழ்த்துகளை போப் பிரான்சிஸ் தெரிவித்துக்கொண்டாா்.
அமெரிக்க துணை அதிபருடன் சந்திப்பு: பிராா்த்தனைக்காக தேவாலயம் புறப்படுவதற்கு முன்னதாக, ஈஸ்டா் திருநாளையொட்டி இத்தாலியின் ரோம் நகருக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா வந்துள்ள அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸை போப் பிரான்சிஸ் தனது வீட்டில் சந்தித்துப் பேசினாா்.

சில நிமிஷங்கள் நீடித்த இச்சந்திப்பில், இருவரும் ஈஸ்டா் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா். மேலும், அமெரிக்காவில் புலம்பெயா்ந்த மக்களைப் பெருமளவில் நாடு கடத்தும் டிரம்ப் நிா்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்து ஜே.டி.வான்ஸிடம் போப் பிரான்சிஸ் ஆட்சேபம் தெரிவித்ததாக வாடிகன் வட்டாரங்கள் தெரிவித்தன.