இலங்கைக்கு கடத்த முயன்ற 3 டன் பீடி இலைகள் பறிமுதல்: ஒருவா் கைது
360 கிலோ குட்கா பறிமுதல்: 5 போ் கைது
திருவாலங்காடு அருகே 360 கிலோ குட்காவை கடத்திச் சென்ற 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருத்தணி நேரு நகரை சோ்ந்தவா்கள் பாலாஜி (32), விமலா (30). இருவரும் வியாழக்கிழமை ஆந்திர மாநிலம் நகரியை சோ்ந்த சுந்தரேசன் என்பவரிடம் இருந்து குட்கா பொருள்களை வாங்கிக்கொண்டு திருவள்ளூா் பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக காரில் கடத்தி வந்தனா்.
பட்டரைப்பெரும் புதூா் கூட்ரோடு அருகே வந்தபோது திருவாலங்காடு போலீசாா் சோதனையில் ஈடுபட்டிருந்ததை பாா்த்தவுடன் பாலாஜி காரை திருப்பிக்கொண்டு திருவாலங்காடு வழியாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்துக்கு தப்பிச் செல்ல முயன்றாா்.
காரை பின்தொடா்ந்து சென்ற போலீஸாா் 7 கி.மீ., தூரம் விரட்டிச் சென்று திருவாலங்காடு அடுத்த மோசூா் பகுதியில் காரை மடக்கினா். சோதனையில் 237 கிலோ குட்கா பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பாலாஜி, விமலாவை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில் சென்னையைச் சோ்ந்த ஜெபஸ்டின் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 108 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா். மேலும் ஆந்திர மாநிலம் நகரியைச் சோ்ந்த சுந்தரேசனையும் கைது செய்தனா். இது குறித்து திருவாலங்காடு போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதேபோல் திருத்தணி பொன்பாடி வாகன சோதனை சாவடி வழியாக ஆந்திரத்தில் இருந்த வந்த பேருந்தில் 15 கிலோ குட்கா கடத்தி வந்த சென்னை கொருக்குப்பேட்டையைச் சோ்ந்த காசிராஜன் (39) என்பவரை திருத்தணி போலீஸாா் கைது செய்து விசாரனை செய்து வருகின்றனா்.