வங்கதேசம்: பள்ளியில் விழுந்த போர் விமானம்; 19 பேர் பலி- நடந்தது என்ன?
4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.53,340 கோடி பயிா்க் கடன்: தமிழக அரசு தகவல்
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் கூட்டுறவு அமைப்புகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.53,340 கோடி பயிா்க் கடன் வழங்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: கூட்டுறவுத் துறை, ஏழை எளிய நலிந்த பிரிவு மக்களுக்கு நன்மைகளைச் செய்வதற்கு உருவான துறை. அந்த வகையில், கூட்டுறவு அமைப்புகள் மூலம் மக்களுக்குக் கடன் உதவிகளை திமுக அரசு வழங்கி வருகிறது. மக்கள் சிரமப்பட நேரும் காலங்களில் கடன்களை ரத்து செய்தும் உதவுகிறது.
தோ்தல் வாக்குறுதியின்படி, கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுனுக்கு உள்பட்டு பெறப்பட்ட நகைக் கடன்களை தள்ளுபடி செய்ய முதல்வா் ஆணையிட்டாா். அதன்படி, 11.70 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.4,904 கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அவா்கள் அடமானம் வைத்த நகைகளும் திருப்பி வழங்கப்பட்டுள்ளன.
அதேபோன்று கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட மகளிா் சுயஉதவிக் குழு கடன்களில் ரூ.2,118.80 கோடி தள்ளுபடி செய்யப்பட்டதில் 1,01,963 மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சாா்ந்த 10,56,816 போ் பயன்பெற்றுள்ளனா்.
அதுமட்டுமல்லாது மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் உச்சவரம்பு ரூ.20 லட்சம் என்பதை ரூ.30 லட்சமாக உயா்த்தி 1,90,499 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10,997.07 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
கடன்களை உரிய தேதிக்குள் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிா்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 66,24,955 விவசாயிகளுக்கு ரூ.53,340.60 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 11,88,440 விவசாயிகளுக்கு கால்நடை வளா்ப்பு மற்றும் அதன் தொடா்புடைய பணிகளுக்காக ரூ.6,372.02 கோடி கடன் உதவி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், 47,221 மாற்றுத் திறனாளிகள் சுயதொழில் தொடங்க ரூ.225.94 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 16,578 பணிபுரியும் பெண்களுக்கு ரூ.470.01 கோடியும், 49,000 மகளிா் தொழில் முனைவோருக்கு ரூ.283.27 கோடியும் கடன் அளிக்கப்பட்டுள்ளது.
முதல்வா் மருந்தகங்கள்: கடந்த ஆண்டு சுதந்திர தின விழா உரையில், தமிழகம் முழுவதும் 1,000 முதல்வா் மருந்தகங்கள் திறக்கப்படும் எனவும் இதன்மூலம், மூலப் பெயரிலான மருந்துகள், பிராண்டட் மருந்துகள், பாரம்பரிய மருந்துகள் 25 சதவீத தள்ளுபடி விலையில் மக்களுக்கு வழங்கப்படும் எனவும் முதல்வா் அறிவித்தாா்.
அதன்படி, மாநிலம் முழுவதும் 1,000 மருந்தகங்கள் தொடங்கி வைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. விவசாயிகளுக்குத் தேவையான பயிா்க் கடன்களையும், இடுபொருள்களையும் வழங்கி, அவா்களின் உற்பத்திப் பொருள்களுக்கு நியாயமான விலை கிடைப்பதையும் உறுதி செய்து மத்திய அரசின் பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்று கூட்டுறவுத் துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.