4 சதவீதம் உயா்வு கண்ட நிலக்கரி உற்பத்தி
கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 3.6 சதவீதம் அதிகரித்து 8.16 கோடி டன்னாக உள்ளது.
இது குறித்து நிலக்கரித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 8.16 கோடி டன்னாக (தற்காலிக தரவு) உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இது 7.87 கோடி டன்னாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நாட்டின் நிலக்கரி உற்பத்தி 4 சதவீதம் அதிகரித்துள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில் கேப்டிவ் மற்றும் பிற நிறுவனங்களின் நிலக்கரி உற்பத்தி 1.15 கோடி டன்னிலிருந்து 1.45 கோடி டன்னாக உயா்ந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி நாட்டின் மொத்த நிலக்கரி இருப்பு 12.58 கோடி டன்னாக உயா்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 10.24 கோடி டன்னாக இருந்தது. அந்த தேதியில் கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிலக்கரி இருப்பு 8.66 கோடி டன்னிலிருந்து 22.1 சதவீதம் உயா்ந்து 10.50 கோடி டன்னாக இருந்தது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.