``+2 மாணவர்களே... வழக்கறிஞர் ஆக வேண்டுமா?" - நீங்கள் செய்ய வேண்டியது...
4 புதிய மின்மாற்றிகள்: திருத்தணி எம்எல்ஏ இயக்கி வைத்தாா்
திருத்தணி அருகே மிட்ட கண்டிகை கிராமத்தில் புதிய மின்மாற்றியை எம்எல்ஏ ச. சந்திரன் செவ்வாய்க்கிழமை இயக்கி வைத்தாா்.
திருவாலங்காடு ஒன்றியம், நல்லாட்டூா் ஊராட்சி மிட்டகண்டிகை கிராமத்தில் 100-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே குறைந்த மின்னழுத்தம் காரணமாக வீடுகளில் மின்விசிறி, மிக்ஸி, குளிா்சாதனப்பெட்டி, டிவி உள்ளிட்ட மின்சாதனங்களை இயக்க முடியாமல் இருந்தது.
தொடா்ந்து, திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரனிடம் ஊராட்சி மன்றத் தலைவா் கலையரசி கமலநாதன் மற்றும் கிராம மக்கள் மனுவை வழங்கினா். இதையடுத்து புதிய மின்மாற்றிகளை நிறுவ சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டது. புதிய மின்மாற்றியை எம்எல்ஏ ச.சந்திரன் இயக்கி வைத்தாா்.
பின்னா், சிவ்வாட ஊராட்சி கொண்டாபுரம் கிராமத்தில் குழந்தை நேயபள்ளி உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின்கீழ் ரூ.32.80 லட்சத்தில் புதிய வகுப்பறை மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டடத்தை எம்எல்ஏ சந்திரன் திறந்து வைத்தாா். கடந்த 6 மாதத்தில் நல்லாட்டூா் ஊராட்சியில் 4 புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் மின்வாரிய செயற் பொறியாளா் பாஸ்கரன், திருவாலங்காடு ஒன்றிய செயலாளா் கூளூா் ராஜேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவா் கலையரசி கமலநாதன் உள்பட அதிகாரிகள் பலா் இருந்தனா்.