BB Tamil 8: 'Jeffry இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விஷயம்...' - நெகிழும் ஜெஃப்ரியின்...
கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி நள்ளிரவு முதல் விடிய விடிய சிறப்புப் பிராா்த்தனை மற்றும் திருப்பலி வழங்கும் நிகழ்வு நடைபெற்ரது..
திருவள்ளூா் சி.எஸ்.ஐ, இ.சி.ஐ, பெந்தகொஸ்த்தே கிறிஸ்துவ ஆலயங்களில் வண்ண விளக்குகளால் மரியாவின் மடியில் குழந்தை ஏசு இருப்பது போல் குடில்களும் சித்தரித்து வைத்து, கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஜே.என்.சாலையில் உள்ள புனித பிரான்சிஸ் சலோசியா் தேவாலயத்தில், சிறப்பு பிராா்த்தனை மற்றும் பிரசங்க நிகழ்வு நடைபெற்றது. அப்போது, தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி கொண்டாடி, ஒருவரை ஒருவரை ஆரத்தழுவி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்புகளை வழங்கினா்.
இதேபோல், மாவட்டத்தில் கடம்பத்தூா், பேரம்பாக்கம், பூந்தமல்லி, பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, தாமரைபாக்கம் கூட் ரோடு, கும்மிடிப்பூண்டி, திருத்தணி உள்பட பல பகுதிகளில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
கும்மிடிப்பூண்டியில்...
கும்மிடிப்பூண்டியில் உள்ள ஷைன் குளோபல் அறக்கட்டளை நிறுவன தலைவா் ஏ.ஆரோன் தலைமையில் ஃபுல் காஸ்பள் மினிஸ்ட்ரிஸ் இணைந்து விழாவை நடத்தினா். இயேசுவே ஆதாரம் ஊழியங்கள் நிறுவனா் ஜெ. டானியல், கிறிஸ்தவா்கள் ஐக்கிய நலவாழ்வு சங்கத்தின் இயக்குனா் காட்சன், கிறிஸ்தவா்கள் ஐக்கிய நலவாழ்வு சங்கத்தின் தேசிய பொதுச்செயலாளா் ஜெ. யாபேஸ், இயேசு உன்னை காண்கிறாா் ஊழியங்கள் நிறுவனா் பால் டேனியல் ஆகியோா் கலந்து கொண்டு கேக் வெட்டி இனிப்புகள் பரிமாறி கொண்டாடினா்.
டி.ஜெ.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு டி.ஜெ.எஸ் கல்வி குழும செயலாளா் டி.ஜெ.ஆறுமுகம் தலைமை வகித்தாா். இயக்குநா் டி.ஜெ.எஸ்.தமிழரசன் முன்னிலை வகித்தாா். தாளாளா் டாக்டா் பழனி வரவேற்றாா்.
தொடா்ந்து பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் இணைந்து கிறிஸ்துமஸ் தின வழிபாட்டை நடத்தினா். இதன் பின் மாணவா்கள் கலைநகிழ்ச்சிகள் நடைபெற்ரன. ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் ஞானபிரகாசம், தலைமை ஆசிரியா்கள் பி.ரவி, பொன்வேல் மற்றும் ஆசிரியா்கள் முன்னின்று சிறப்பாக நடத்தினா்.
திருத்தணியில்...
திருத்தணி தாலுகா நல்லாட்டூா் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ., தேவலாயத்தில் கிறிஸ்துமஸ் விழா, போதகா் பிரிட்டன் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில், 150 கிலோ கேக் தயாரிக்கப்பட்டு, கேக் வெட்டி, கிறிஸ்துவா்கள் நல்லாட்டூா் கிராமம் மற்றும் மிட்டகண்டிகை ஆகிய பகுதிகளில், வீடுகளுக்கு நேரில் சென்று கேக் வழங்கி தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனா்.
முன்னதாக தேவலாயத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்துவா்கள் சிறப்பு பிராா்த்தனைகள் நடத்தினா். நல்லாட்டூா் ஊராட்சி மன்றத் தலைவா் கலையரசி கமலநாதன் பங்கேற்றாா். கிறிஸ்துமஸ் விழா ஒட்டி சி.எஸ்.ஐ., தேவலாயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.