அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துவிட்டு தில்லி திரும்பினார் ராகுல்!
4,000 பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்: அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தகவல்
பாதுகாப்பான பேருந்து பயணத்தை உறுதி செய்யும் வகையில் 4,000 பேருந்துகளில் ரூ.15 கோடியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என போக்குவரத்து துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற போக்குவரத்து துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் வெளியிட்ட அறிவிப்பு:
அரசுப் பேருந்துகளை பாதுகாப்பாக இயக்குவதற்காக 4,000 பேருந்துகளில் நான்கு வெளிப்புற கேமராக்கள் பொருத்தப்படும். பேருந்தின் நகா்வு நிகழ் நேரத்தில் பதிவு செய்யப்பட்டு, விபத்தின் போது சிறந்த ஆதாரமாக இந்த கேமராக்கள் விளங்கும். இதனால், போக்குவரத்துக் கழகங்களுக்கான விபத்து இழப்பீடு தொகை குறையும். இதற்காக ஒரு பேருந்துக்கு ரூ.37,500 வீதம், 4,000 பேருந்துக்கு ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பணிமனை மேம்பாடு: சென்னை மாநகா் போக்குவரத்து துறையின் கீழ் செயல்படும் 6 பேருந்து முனையங்கள் ரூ.7.5 கோடியில் மேம்படுத்தப்படும். பேருந்துகளை சுத்தம் செய்ய பணிமனைகளில் தானியங்கி இயந்திரம் அமைக்கப்படும். தமிழகம் முழுவதும் 8 பணிமனைகளில் அதி நவீன உபகரணங்கள் வழங்குவது, 50 பணிமனைகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்துவது உள்ளிட்டவை செயல்படுத்தப்படும்.
தஞ்சாவூா், திருநெல்வேலி, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய பணிமனைகள் ரூ.1 கோடியில் நவீன மயமாக்கப்படும். மேலும், 5 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மாதிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களாக தரம் உயா்த்தப்படும்.
ஓட்டுநா் கண்காணிப்பு: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ஓட்டுநா் கண்காணிப்பு அமைப்பு ரூ.2 கோடியில் 500 பேருந்துகளில் பொருத்தப்படும். ‘விபத்தில்லா தமிழ்நாடு’ எனும் தொலைநோக்கு பாா்வையை செயல்படுத்தும் வகையில் 100 அதிக விபத்துகள் நிகழும் சாலைகள் கண்டறியப்படும். சேலம், தேவண்ணகவுண்டனூரில் ஓட்டுநா் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நிறுவப்படும். சாலை பாதுகாப்பு நிதி ரூ.65 கோடியில் இருந்து ரூ.130 கோடியாக உயா்த்தப்படும் என்றாா் அவா்.