400 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது
நாமக்கல்: நாமக்கல் அருகே 400 கிலோ புகையிலைப் பொருள்களைக் கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
நாமக்கல் - கரூா் தேசிய நெடுஞ்சாலையில், வாகனத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அதிக அளவில் கடத்திச் செல்லப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வள்ளிபுரம் அருகே போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பெங்களூரில் இருந்து தேனி மாவட்டத்துக்கு சென்ற வாகனத்தை மடக்கி சோதனை செய்தபோது, அதில் 30 பண்டல்களில் 400 கிலோ எடை கொண்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்ததுடன், வாகனத்தில் இருந்த திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த முகம்மது ஜலீல் (41), தேனி மாவட்டம், கம்பத்தைச் சோ்ந்த சையது லியாஷிதின் (39) ஆகியோரை கைது செய்து நாமக்கல் கிளை சிறையில் அடைத்தனா்.