கெத்து தினேஷின் புதிய படம்: போஸ்டர் வெளியிட்டு பொங்கல் வாழ்த்து!
435 ரன்கள் குவித்த இந்திய மகளிரணி! வாணவேடிக்கை காட்டிய ஸ்மிருதி, பிரதிகா!
அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிரணி 435 ரன்கள் குவித்தது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி இன்று குஜராத்தின் ராஜ்கோட்டில் நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.
இதில், டாஸ் வென்ற இந்திய மகளிரணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
ஆட்டம் தொடங்கிய முதலே பந்தை எல்லைக்கோட்டுக்குப் பறக்கவிட்ட ஸ்மிருதி 70 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 233 ரன்கள் சேர்த்த நிலையில், 135 ரன்களுக்கு (12 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்) விளாசி அவுட்டாகி வெளியேறினார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஹர்மன்பிரீத் கௌரின், 87 பந்துகளில் சதமடித்த சாதனையை முறியடித்து, ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதமடித்த இந்திய வீராங்கனை என்ற புதிய சாதனையைப் படைத்தார் ஸ்மிருதி மந்தனா. மேலும், இது மந்தனாவுக்கு 10-வது ஒருநாள் சதமாக அமைந்தது. அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் டாமி பேமோண்ட்டுடன் 3-வது இடத்தில் உள்ளார் ஸ்மிருதி.
அவரைத் தொடர்ந்து அவருக்குப் பின்னர் வந்தவர்களும் அயர்லாந்தின் பந்துவீச்சை பதம்பார்த்தனர். பிரதிகா ராவல் அதிரடி காட்ட ரிச்சா கோஷும் சிக்ஸர்-பவுண்டரிகள் விளாசினார். பிரதிகா விளையாடியதைப் பார்க்கும் போது இரட்டைசதம் விளாசுவார் என்றே தோன்றியது. இருப்பினும், அவர் 154 ரன்களில் (20 பவுண்டரி, 1 சிக்ஸர்) வீழ்ந்தார்.
இவர்களின் பங்களிப்பால் இந்திய அணி முதல்முறையாக 400 ரன்களைக் கடந்தது. கடந்த 45 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே 350 ரன்கள் குவித்திருந்த இந்திய அணி, வெறும் 20 நாள்களில் அது ஒரே தொடரில் 3 முறைக்கு மேல் 350 ரன்களைக் குவித்து அசத்தியுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 435 ரன்கள் குவித்தது. மேலும், அயர்லாந்து அணிக்கு ரன்கள் 436 இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.