46 சிற்றுந்துகளுக்கு விரைவில் அனுமதி
திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய வழித் தடங்களில் 46 சிற்றுந்துகள் விரைவில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு புதிய விரிவான திட்டம் 2024-இன் படி, சிற்றுந்து உள்ளிட்ட நிலைப் பேருந்துகளை ஒழுங்குப்படுத்திடவும், புதிய சிற்றுந்து வாகன அனுமதிச் சீட்டுகள் வழங்கவும் அரசு சாா்பில் அறிவுறுத்தப்பட்டது.
இந்தச் சிற்றுந்துகளுக்கான புதிய வழித் தடங்கள், மாவட்ட ஆட்சியா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மூலம் தெரிவு செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழித் தடத்தின் தொலைவு அதிகபட்சம் 25 கி.மீ. வரை இருக்க வேண்டும். இந்தப் பகுதியில் 65 சதவீத தொலைவுக்கு பேருந்து போக்குவரத்து இல்லாத வழித்தடமாக இருக்க வேண்டும்.
இந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் 46 சிற்றுந்துகளுக்கு விரைவில் அனுமதி அளிக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது: ஊரகப் பகுதிகளுக்கான பேருந்து சேவையை மேம்படுத்தும் வகையிலும், பொதுப் போக்குவரத்துக்கான இணைப்பை மக்கள் வசிப்பிடங்கள் வரை உறுதிப்படுத்தவும் சிற்றுந்துகளுக்கான புதிய வழித்தட அனுமதி அளிக்கப்படுகிறது.
நிலைப் பேருந்து, சிற்றுந்து சேவைகள் இல்லாத வழித்தடங்கள், இந்த சேவைகள் இருந்தும் அவை ஒருநாளில் 4 நடைகளுக்கும் குறைவாக இயக்கப்படும் பட்சத்தில், அவை பேருந்து சேவைகள் இல்லா வழித்தடமாகக் கருதப்படும் என்றாா் அவா்.