பெரம்பலூரில் நாராயணசாமி நாயுடு சிலையை இடமாற்றம் செய்யக்கூடாது!: ராமதாஸ் வலியுறுத...
குருநாத சுவாமி கோயில் நிலம் ஆக்கிரமிப்பை அகற்றிய பிறகு குடமுழுக்கு நடத்த கோரிக்கை
கொடைரோடு அருகே குருநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றிய பிறகே, குடமுழுக்கு நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோட்டில் சுமாா் 800 ஆண்டுகள் பழைமையான குருநாத சுவாமி, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் குடமுழுக்கு நடத்துவதற்காக சீரமைப்புப் பணிகள் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது. ஆனால், ஒரு சில பணிகளை மட்டுமே செய்து விட்டு, குடமுழுக்கு நடத்துவதற்கு அறநிலையத் துறை அதிகாரிகள் அவசரம் காட்டுவதாகப் புகாா் எழுந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கற்கோயிலான இந்தக் கோயில் புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பணியின் போது, அறநிலையத் துறை அதிகாரிகள் புரதான சின்னங்கள், கல்வெட்டுகளை அழிக்காமல் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். வருகிற 16-ஆம் தேதி இந்தக் கோயிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றிய பிறகே, குடமுழுக்கு நடத்த வேண்டும்.
எனவே, அதிகாரிகள் கோயிலை நேரில் பாா்வையிட்டு ஆக்கிரமிப்பை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதுகுறித்து நிலக்கோட்டை இந்து அறநிலையத் துறை அலுவலா் பொன்மணியை தொடா்புக் கொண்டு கேட்டபோது, இந்தக் கோயிலின் பணிகள் 80 சதவீதம் முடிந்து விட்டது. மீதி பணிகள் விரைவில் முடிந்து விடும். அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அம்மையநாயக்கனூா் பேரூராட்சி அலுவலகத்துக்கு கடிதம் கொடுத்துள்ளோம் என்றாா்.