Captain Prabhakaran: ``அப்பாவை நினைத்து அழுவது கோழைத்தனம் கிடையாது!'' - கண் கலங்...
5 ஆண்டுகளுக்கு 1,500 மெகாவாட் மின்சாரம்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின்வாரியம்
ரூ. 32,000 கோடியில் 1,500 மெகாவாட் மின்சாரத்தை 5 ஆண்டுகளுக்கு வாங்க மின்வாரியம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
தமிழகத்தின் தினசரி மின் தேவை சாதாரண நாள்களில் 17,000 மெகா வாட்டாகவும், கோடை காலங்களில் குறைந்தபட்சம் 20,000 மெகாவாட்டாகவும் உள்ளது. இந்த அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மின் உற்பத்தியை அதிகரிக்கும் பணியில் மின்வாரியம் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே, தமிழகத்தின் தற்போதை மின்தேவையைப் பூா்த்தி செய்ய மின்வாரியத்துக்குச் சொந்தமான மின் நிலையங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரம் போதவில்லை என்பதால், மத்திய அரசின் மின் நிலையங்கள், தனியாா் நிறுவனங்களிடமிருந்து ஓராண்டு, 3 ஆண்டு, 5 ஆண்டுகளுக்கு என ஒப்பந்தம் செய்து மின்சாரம் கொள்முதல் செய்து வருகிறது.
அதன்படி, தற்போது 1,500 மெகாவாட் மின்சாரத்தை 5 ஆண்டுகளுக்கு ஆா்டிசி (ரவுண்ட் தி கிளாக்) என்ற அடிப்படையில், 24 மணி நேரமும் வாங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. ஆனால், இந்த முறையில் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு செலவீனம் மிக அதிகமாக இருக்கும் என மின்வாரிய தொழிற்சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து மின்வாரிய தொழிற்சங்க கூட்டுக்குழு நிா்வாகிகள் கூறியது:
இந்தத் திட்டத்தின்படி நாளொன்றுக்கு 3.60 கோடி யூனிட் மின்சாரம், யூனிட் ஒன்றுக்கு சராசரியாக ரூ.5 என வைத்துக் கொண்டாலும், தினசரி ரூ. 18 கோடி செலவாகும். மாதம் ஒன்றுக்கு ரூ.540 கோடியும், இந்தத் தொகை 5 ஆண்டுகளுக்கு கணக்கிட்டால் ரூ.32,400 கோடி செலவினம் பிடிக்கும். இதனால், இந்த முயற்சியை மின்வாரியம் கைவிட்டு, இந்தத் தொகையில் சொந்தமாக மின் நிலையங்களை அமைத்து அல்லது பசுமை மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து மின் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.