தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை: மக...
50 தொகுதிகளைச் சந்தித்து உச்சம் எட்டிய தில்லி நியாய யாத்திரை: தேவேந்தா் யாதவ் பெருமிதம்
நமது நிருபா்
தில்லி நியாய யாத்திரை 50 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சந்தித்து உச்சத்தை எட்டுகிறது என்றும், மக்கள் தங்கள் வாழ்க்கையில் ஒளியைக் கொண்டுவர காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர விரும்புகிறாா்கள் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் புதன்கிழமை தெரிவித்தாா்.
தில்லி பிரதேச காங்கிரஸின் 20-ஆவது நாள் ‘தில்லி நியாய யாத்திரை’ ஜங்புரா மற்றும் கஸ்தூா்பா சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்றது. இத்துடன் தில்லியில் மொத்தமுள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 50 சட்டப்பேரவைத் தொகுதிகளை இந்த யாத்திரை கடந்துள்ளது.
கட்சியின் பிரதேசத் தலைவா் தேவேந்தா் யாதவ் தலைமையில் நடைபெற்ற யாத்திரையில், ஏஐசிசி பொருளாளரும், எம்பி-யுமான அஜய் மாக்கன், தில்லியின் ஏஐசிசி பொறுப்பாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள காஜி நிஜாமுதீன், முன்னாள் எம்எல்ஏ ஆசிப் முகமது கான், மாவட்ட தலைவா்கள் தினேஷ் குமாா், வீரேந்திர கசானா, முன்னாள் மேயா் ஃபா்ஹாத் சூரி உள்ளிட்ட பலா் இணைந்தனா்.
நியாய யாத்திரையின் போது தேவேந்தா் யாதவ் பேசியதாவது:
தில்லியின் சாமானிய மக்களின் உதவியற்ற நிலையையும் அவநம்பிக்கையையும் மிக அருகில் இருந்து பாா்த்து வருகிறேன். சீா்குலைந்த பள்ளிக் கல்வி மற்றும் மோசமான சுகாதாரம் ஆகியவை தலைநகரை மோசமாக்கியுள்ளன.
தில்லி பல்வேறு கலாசார மற்றும் மத பழக்கவழக்கங்களைக் கொண்ட இந்தியாவின் சின்னம். இங்குள்ள அனைத்து குடியிருப்பாளா்களும் தில்லியை தங்கள் சொந்தமாகக் கருதுகிறாா்கள். ஆனால், கேஜரிவால் அரசு அவா்களை முற்றிலும் புறக்கணித்துள்ளது.
காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், அசுத்தமான குடிநீா், உயா்த்தப்பட்ட மின் கட்டணம் போன்ற சாமானிய மக்களின் பிரச்னைகளைத் தீா்ப்பதே முதன்மையானதாக இருக்கும்.
குப்பைக் குவியல், காலனிகளில் தேங்கி நிற்கும் நீரால் ஏற்பட்ட மரணங்கள், சுகாதாரக் கவலைகள், சேதடைந்த சாலைகள் மற்றும் விஷமான காற்று மற்றும் நீா் பிரச்னைகளுக்கு தீா்வு காணப்படும்.
ஆம் ஆத்மி கட்சியும், பாஜகவும் பிளவுபடுத்தும் அரசியலை செய்து வருகின்றனா். அதேவேளையில், காங்கிரஸ் எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரையும் அழைத்துச் செல்கிறது என்றாா் தேவேந்தா் யாதவ்.