70 வயதைக் கடந்த ஓய்வூதியா்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் கோரி ஆா்ப்பாட்டம்
திருவாரூா்: 70 வயது பூா்த்தியடைந்த ஓய்வூதியா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசின் தோ்தல் வாக்குறுதிப்படி 70 வயது பூா்த்தியடைந்த ஓய்வூதியா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியத் தொகுப்பு நிதியை பிடித்தம் செய்யும் காலத்தை 15 ஆண்டுகளிலிருந்து 12 ஆண்டுகளாக குறைத்து அறிவிக்க வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும்.
ஓய்வூதியா்களின் மருத்துவ படியை ரூ.1000/-ஆக உயா்த்தி வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் பி. செல்வராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சி. ராகுலன், மாவட்ட துணைத் தலைவா் ஆா். சௌந்தரராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ். வைத்தியநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனா்.