ரோப் காருக்கு எதிரான போராட்டத்தில் மோதல்! காவலர்கள் உள்பட 24 பேர் காயம்!
71 ரயில் நிலையங்களில் கவச் தொழில்நுட்பம்: ரயில்டெல் நிறுவனத்துக்கு ரூ.288 கோடியில் டெண்டா்
கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தின் தனபூா் மற்றும் சோன்பூா் ரயில் பிரிவுகளில் 502 கி.மீ. வழித்தடத்தில் உள்ள 71 ரயில் நிலையங்களில் கவச் தொழில்நுட்பத்தை நிறுவ ரயில்டெல் நிறுவனத்துக்கு ரூ.288 கோடி மதிப்பிலான டெண்டா் விடப்பட்டுள்ளது.
‘கவச்’ என்பது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு முறையாகும். இரு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாவதை தடுக்கவும் ரயில்களை பாதுகாப்பாக இயக்கவும் இந்த தொழில்நுட்பம் உதவுகிறது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ரயில்டெல் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்துக்குள்பட்ட 71 ரயில் நிலையங்களில் கவச் தொழில்நுட்பத்தை நிறுவுவதற்கான ரூ.288 கோடி டெண்டரை ரயில்டெல் நிறுவனம் பெற்றுள்ளது.
இதன்மூலம் கிழக்கு மத்திய ரயில் மண்டலத்தின் செயல்பாடுகளையும் ரயில்வே துறையை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தவும் ரயில்டெல் நிறுவனம் உறுதிபூண்டுள்ளது.
நவீன தொழில்நுட்பங்கள் மூலம் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் பயணிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்குவதையும் முக்கிய நோக்கமாக கொண்டு ரயில்டெல் செயல்படுகிறது.
இத்திட்டத்துக்கான கவச் தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை க்வாட்ரண்ட் ஃபியூச்சா் டெக் நிறுவனம் வழங்கவுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.