8 ஆண்டுகள் கழித்து தவறுகளை உணர்ந்த மோடி அரசை பாராட்டுகிறேன்: ப. சிதம்பரம்
மதுரை: 8 ஆண்டுகள் கழித்து தவறுகளை உணர்ந்து அத்தியாவசியப் பொருள்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தை குறைத்துள்ள மோடி அரசை பாராட்டுகிறேன் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.
சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் செய்தியாளர்களுடன் பேசினார்.
அப்போது, மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி வரி வகிதங்களில் கொண்டு வந்துள்ள மாற்றங்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் 8 ஆண்டுகள் கழித்து தவறுகளை உணர்ந்து அத்தியாவசியப் பொருள்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தை குறைத்துள்ள மோடி அரசை பாராட்டுகிறேன்.
2007 இல் ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்தும்போது இது தவறு இதுபோன்ற பல்வேறு வரி விகிதங்களை வைக்காதீர்கள் என்று அறிவுறுத்தினோம். தலைமை பொருளாதார ஆலோசகர் அர்ஜுன் சுப்பிரமணியம் இது தவறு என அறிவுறுத்தினார்.
ஆனால், நிதி அமைச்சரோ, மற்ற அமைச்சர்களோ நாங்கள் சொல்வதைக் கேட்கவில்லை. இது குறித்து நாடாளுமன்றத்தில் பலமுறை பேசியுள்ளோம்.
பல தலைவர்களும் பொருளாதார நிபுணர்களும் ஜிஎஸ்டி வரி விகிதங்களில் உள்ள தவறுகளை திருத்த வேண்டும் என வலியுறுத்தினார்கள். ஆனால் அவற்றை எல்லாம் பாஜக அரசு கேட்கவில்லை. இப்போதாவது தவறுகளை உணர்ந்து தற்போது திருத்தியதற்காக நான் நன்றி சொல்கிறேன். 8 ஆண்டுகள் நடுத்தர மக்களை, ஏழை மக்களை வரிகளால் கசக்கிப் பிழிந்தனர். 12 சதவீதம் மற்றும் 18 சதவீதமாக இருந்த வரியை 5 சதவீதமாக குறைத்துள்ளதாக கூறியுள்ளார்கள்.
இத்தனை ஆண்டுகளாக அதே மக்கள் தானே 18 சதவீதம் வரியை செலுத்தினார்கள். இப்போது அது பொருத்தம் என்றால் கடந்த ஆண்டும் இதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எல்லாம் பொருந்தாதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களின் பணத்தை எல்லாம் வாரியாக வசூல் செய்து மக்களை கசக்கிப் பிழிந்த மத்திய அரசு, இப்போதாவது மனம் திருந்தி வரி விகிதங்களை குறைத்து உள்ளார்கள். அதற்காக நான் பாராட்டுகிறேன் என்று சிதம்பரம் கூறினார்.