Adithya : `அந்த சம்பவம் நடந்து 3 வருஷத்துக்கு பின் இப்போ ரஹ்மான் சார் இசையில..!’ - ஆதித்யா ஷேரிங்ஸ்
பாடல்களை ரீ - கிரியேட் செய்வது எப்போதும் இருக்கும் ஒரு எவர்கிரீன் டிரண்ட்!
அப்படி பழைய மாஸ்டர்பீஸ் பாடல்கள் வெவ்வேறு காலகட்டங்களில் ரி- கிரியேட் செய்யப்பட்டிருக்கிறது. அப்படி சமீபத்தில் ரஹ்மானின் `காதல் சடுகுடு' பாடலை `மெட்ராஸ்காரன்' திரைப்படத்தில் ரி-கிரியேட் செய்திருக்கிறார்கள். இந்தப் பாடலை ரி-கிரியேட் செய்து பின்னணி பாடகர் ஆதித்யா பாடியிருக்கிறார். இதுமட்டுமல்ல, ரஹ்மான் இசையில் முதல் முறையாக ஒரு பாடலையும் பாடியிருக்கிறார் இந்த இளைஞர். ஜெயம் ரவியின் `காதலிக்க நேரமில்லை' திரைப்படத்தின் `லாவண்டர் நிறமே' பாடலை பாடியதும் ஆதித்யாதான். இந்தப் பாடலுக்கு வாழ்த்துகளைக் கூறி ஒரு குட்டி சாட் போட்டோம்.
`காதல் சடுகுடு' பாடலை ரீமிக்ஸ் பண்றதுக்கு உங்களைக் கூப்பிடும்போது என்னென்ன விஷயங்கள் உங்களுக்கு தோணுச்சு?
``அந்த பாடல் பற்றி சொன்னதுக்குப் பிறகு என் கையில ஒரு பொறுப்பு இருந்தது. பல கோடி பேருக்கு பிடிச்சு கேட்டுக் கொண்டிருக்கிற பாடல் அது. நம்ம அப்படியான மாஸ்டர்பீஸ் பாடலை ரீ-கிரியேட் பண்ணும்போது அதை மக்கள் ஏத்துக்குவாங்களானு ஒரு எண்ணம் இருந்தது. இதையெல்லாம் தாண்டி இசை துறையில நான் ஒரு பாடகர். எனக்கு கொடுத்த விஷயங்களை நான் கொடுத்தாகணும். என்னுடைய வேலையை பண்ணினேன். எனக்கு கம்போஸர் நந்தகோபாலன் இந்தப் பாடலைக் கொடுத்தார். ஒரிஜினல் வெர்ஷன் எப்போதும் ஒரிஜினல்தான். நான் ரி-கிரியேட் பண்ணின வெர்ஷனும் எனக்கு பிடிச்சிருக்கு. ஷேன் நிகாமுக்கான பாடல் இது. அதுமட்டுமல்ல, `இந்த பாடல் ஒரு டான்ஸ் நம்பர். இந்த உணர்வுக்கேற்ப உங்களால பாட முடியும்னு நம்புறோம்'னு சொன்னாங்க. இப்போ கம்போஸரும் ஹாப்பி!
``பொறுப்பை தாண்டி ஒரு பிரஷர் இருந்ததா?”
``பொதுவாக பிரஷர் இருக்காது. நான் ரொம்ப லக்கினு நினைக்கிறேன். என்னைவிட பெட்டரான பாடகர்கள் இருக்கும்போது என்னை தேர்ந்தெடுத்த விஷயம் மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஒரு மியூசிக் டைரக்டருக்கு ஒரு விஷயம் தோணியிருக்கு. அதுக்காக நம்முடைய 200 சதவீத உழைப்பைக் கொடுத்து சாத்தியப்படுத்தணும். சொல்லப்போனால், ரொம்ப பிரஷரை எடுத்துக்கிட்டால் வர்றதும் வராமல் போயிடும்னு ஒரு பயம்தான். இந்தப் பாடலை ரஹ்மான் சார் டீமுக்கு அனுப்பினேன். அவங்களுக்கும் பாடல் பிடிச்சிருந்தது.”
``ரஹ்மான் இசையில முதல் முறையாக `லாவண்டர் நிறமே' பாடலை பாடியிருக்கீங்களே...”
``ஆமா, இது சர்ரியலான மொமண்ட்தான். ரஹ்மான் சாரின் மிகப்பெரிய ரசிகன். ரஹ்மான் சார் எப்படி இந்தளவுக்கு மியூசிக் போடுறார்னு வியந்து பார்த்திருக்கேன். ஆனால், அவர் இசையில நான் பாடுவேன்னு நான் நினைச்சதுக்கூட இல்ல. இந்த `லாவண்டர் நிறமே' பாடல் ஒரு சாஃப்ட் தன்மைக் கொண்டது. இந்தப் பாடலுக்கு ரஹ்மான் சார் டீம்ல இருந்து கூப்பிட்டதும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அந்தளவுக்கு வேகமாக ரெக்கார்டிங் போயிட்டேன். ரஹ்மான் சார் `பாடல் ரொம்ப நல்ல வந்திருக்கு. உங்க குரல் நன்றாக இருக்கு'னு ஃபீட்பேக் கொடுத்தார். `உங்க குரலை வச்சு நீங்க பண்ற விஷயங்கள் எனக்கு ரொம்பவே புதுசாக இருக்கு'னு ரஹ்மான் சார் நான் சூப்பர் சிங்கர்ல அவர் முன்னாடி பாடும்போது சொல்லியிருந்தார்.
அவர் இசை துறையில பல ஆண்டுகளாக இருக்கிறார். அவருக்கு இந்த விஷயம் தோன்றியது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குது. அந்த சம்பவம் நடந்து மூணு வருடங்களுக்குப் பிறகு இப்போ ரஹ்மான் சார் இசையில பாடிட்டேன். என்னுடைய குரலை ரஹ்மான் சாரின் டீம் அவர்கிட்ட காட்டியிருக்காங்க. ரஹ்மான் சார் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்துல நான் பதிவிட்டிருக்கிற பாடல்களையெல்லாம் கேட்டிருக்கார். அவங்க அந்த குரலை காமிச்சதும் என்னுடைய இன்ஸ்டாகிராம் மூலமாக என்னை அடையாளம் கண்டிருக்கார். நம்ம ரீல்ஸை பார்க்க வேண்டிய ஒரு நபர் பார்த்தால் நம்முடைய லைஃப் மாறும்.”
``டாப் மியூசிக் டைரக்டர்ஸோட கான்சர்ட்ல இப்போ உங்களை அதிகமாக பார்க்க முடியுதே! அவங்க உங்களை தொடர்ந்து தேர்ந்தெடுப்பதற்கான காரணம் என்னனு நினைக்குறீங்க?”
``அந்த காரணம் எனக்கு தெரில. ஆனால், என்னை அடையாளப்படுத்திக் கூப்பிடுறது ரொம்பவே சந்தோஷம். அவங்க என்ன விஷயங்கள் கொடுத்தாலும் ஸ்டேஜ்ல என்னால பண்ண முடியும்னு நம்பிக்கை எனக்கு இருக்கு. நான், `ஸ்டேஜ்ல இருக்கோம். இத்தனை பேர் பார்க்கிறாங்க'னு நினைக்கவே மாட்டேன். அந்த விஷயங்கள் எல்லோருக்கும் பிடிச்சிருக்கலாம். அனிருத் ப்ரதர் ஒரு ஸ்டேஜ்ஜை ஒரு டீம்கூட சேர்ந்து என்ஜாய் பண்ணுவார். அந்த விஷயங்களை நான் அவர்கிட்ட இருந்துதான் கத்துக்கிட்டேன். இப்போ யுவன் சார், விஜய் ஆண்டனி சார், ஷான் ரோல்டன் அண்ணாகிட்ட பல விஷயங்கள் கத்துக்கிட்டேன். இப்போ சமீபத்துல யுவன் சார் கான்சர்ட் நடந்தது, சிம்பு சாரும், யுவன் சாரும் அந்த கான்சர்ட் ஸ்டேஜ்ல பயங்கரமாக பண்ணியிருந்தாங்க. அது எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. இந்த கான்சர்ட்ல நான் `High on love' பாடல் பாடினேன். அந்தப் பாடல் வந்ததும் யுவன் சார் `டேக் ஓவர் ஆதித்யா'னு சொன்னாரு.”
``ரஹ்மான் சாருடைய வேற எந்தப் பாடல்களை ரி-கிரியேட் பண்ணனும்னு ஆசை இருக்கு?”
```நிலா காய்கிறது', `உயிரே', `பார்க்காதே ஒரு மாதிரி' போன்ற பாடல்களையெல்லாம் ரி-கிரியேட் பண்ணனும்னு ஆசை இருக்கு. ரஹ்மான் சார் எந்தப் பாடலை எனக்கு கொடுத்தாலும் நான் போயிடுவேன். டிராக் பாடுறதுக்கு கூப்பிட்டாலும் முழு மனதோட போயிடுவேன்.”
``பொதுவாக ஒரு பாடகர் வெளில தெரிய ஆரம்பிக்கும்போது அவங்க குரலை மற்ற பாடகர்களோட ஒப்பிட்டு பேசுற விஷயங்கள் நடக்கும். அப்படி உங்க குரலை யாருடன் ஒப்பிட்டு பேசியிருக்காங்க?”
``உலகத்திலேயே எனக்கு பிடிச்ச குரல் ரஹ்மான் சாருடையதுதான். இதை நான் அவர்கிட்டையே சொல்லியிருக்கேன். ஹை ரேஞ்ச்ல பாடும்போது ரஹ்மான் சார் குரலுடன் ஒப்பிட்டு பதிவிட்டிருக்காங்க. இதுமட்டுமில்லாமல், சித் ஸ்ரீராம் சாருடைய குரல்கூட ஒப்பிட்டு பேசியிருக்காங்க. அவர் எனக்கு சீனியர். அவங்ககிட்ட இருந்தும் பல விஷயங்கள் கத்துக்கிட்டு இருக்கேன். நான் அவங்ககிட்ட பாடுற ஸ்டைல்லை எடுத்துக்கிறேன். இதை தாண்டி பலர் உங்க குரல் ஃப்ரஷாக இருக்குனு சொல்லியிருக்காங்க.”