Allu Arjun: "பகத் பாசில் என்னுடன் புரோமோஷனுக்கு வராதது வருத்தம்தான்; ஆனால்..." - அல்லு அர்ஜூன்
̀புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 5-ம் தேதி பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதையொட்டி இப்படத்திற்கான புரோமோஷன் பணிகளில் இறங்கியுள்ளனர் நடிகர் அல்லு அர்ஜூன் உள்ளிட்ட படக்குழுவினர். ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ஆரம்பித்து சென்னை, மும்பை, கேரளா என படக்குழு ஒவ்வொரு மாநிலமாக பயணித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தி வருகின்றனர். 'புஷ்பா' முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளதால் இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. நடிப்பில் அவேசமாக அசத்தி வரும் பகத் ஃபாசில் இப்படத்தில் அரக்கத்தனமான போலீஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் கூடுதல் எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே இருந்து வருகிறது.
பகத் ஃபாசில் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பெரிதாகக் கலந்துகொள்வதில்லை. எப்போதும் அடுத்தடுத்த பட வேலைகளில் பிஸியாக இருப்பவர். இந்நிலையில் நேற்று கேரளாவில் 'புஷ்பா -2' புரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பகத் ஃபாசில் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாதது குறித்து பேசியிருக்கும் அல்லு அர்ஜூன், "இப்போது நான் அல்லு அர்ஜுன் அல்ல, உங்களின் மல்லு அர்ஜூன். கேரளாவில் ரசிகர்கள் அனைவரது மத்தியிலும் நானும், பகத் ஃபாசிலும் ஒரே மேடையில் ஒன்றாக நின்றிருந்தால் அது காலத்துக்குமான சிறந்தத் தருணமாக இருந்திருக்கும். இங்கு, இன்று, இந்த மேடையில் பகத் ஃபாசிலை நான் ரொம்ப மிஸ் பண்றேன்.
ஆனால் கேரள ரசிகர்களுக்கு ஒன்றே ஒன்றுச் சொல்லிக் கொள்கிறேன் என்னுடைய பிரதர் பகத், 'புஷ்பா -2'வில் மிகப் பிரமாதமாக நடித்திருக்கிறார். அது அவருக்கு உலகமெங்கிலும் பேரும் புகழையும் வாங்கித்தரப் போகிறது. கேரள சினிமாவையும் உங்களையும் பகத் உலக அரங்கில் பெருமைப்படுத்துவார்" என்று பேசியிருக்கிறார்.