America: அமெரிக்க வெளியேற்றிய இந்தியர்கள்... அமிர்தசரஸில் தரையிறங்கிய சி17 விமானம்!
அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய இந்தியர்களை சி17 ராணுவ விமானம் மூலம் அமெரிக்க அரசு இந்தியாவிற்கு அனுப்பியுள்ளது.
சட்டத்திற்கு புறம்பாக குடியேறியுள்ள வெளிநாட்டவரை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்ற தொடங்கியுள்ளது ட்ரம்ப் அரசு. அதன் படி, தற்போது, இந்தியர்களை ராணுவ விமானத்தில் ஏற்றி அனுப்பியுள்ளது அமெரிக்க அரசு. ஆனால், இதுக்குறித்து இந்திய அரசாங்கத்திடம் அமெரிக்க அரசு எதுவும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இவர்கள் இன்று காலை பஞ்சாப் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், மதிய வேளையில் சுமார் 2 மணியளவில் சி17 விமானம் தரையிறங்கியுள்ளது.
104 இந்தியர்கள் இந்த விமானத்தில் வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றனர். இவர்கள் பஞ்சாப், ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், சண்டிகர் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.
இது வெறும் முதல் கட்டம் தான். இப்படி நிறைய இந்தியர்கள் இனி அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படலாம் என்கிறார்கள். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் மத்திய அரசு அமைதியாக இருப்பதாக சாடுகின்றன.