கிருஷ்ணகிரியில் மாணவி பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை! -...
`கொஞ்சநாள் ஊர்ல போய் இருன்னு தலைவர் சொல்லிட்டார்' - வைகோவின் உதவியாளரை விசாரித்த கியூ பிரான்ச்
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் இன்று காலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் இங்கு, வைகோவின் உதவியாளர் வீட்டுக்கு சீல்; அவரை கியூ பிராஞ்ச் அதிகாரிகள் விசாரணை என செய்தி சமூக வலைதளங்களில் ஓடிக்கொண்டிருந்தது.
என்ன விவகாரம்? வைகோவிடம் சில வாரங்களுக்கு முன்பு வரை உதவியாளராக இருந்த மதுரையைச் சேர்ந்த ஜெயபிரசாந்திடமே பேசினோம்.
''பத்து வருஷத்துக்கும் மேல தலைவர்கிட்ட உதவியாளரா இருக்கேன். கடந்த நவம்பர் 14ம் தேதி தான் அண்ணன் துரை வைகோ தலைமையில் தான் என் கல்யாணம் நடந்துச்சு.
இப்படியிருக்க ரெண்டு நாளா என்னைப் பற்றி எப்படி இப்படி தப்பான செய்தி கிளம்புச்சுன்னே தெரியலை. நாலு மாசத்துக்கு முன்னாடி கியூ பிரான்ச் அதிகாரிகள் எனக்குப் போன் பண்ணிருந்தாங்க. அதாவது ரெண்டு இலங்கைத் தமிழர்களைக் கைது செய்ததாகவும், அவங்ககிட்ட என் நம்பர் இருந்ததால என்னைக் கூப்பிட்டாங்க. அந்த ரெண்டு பேரையும் எனக்குத் தெரியும்.
யூ டியூப் சேனல் நடத்தறோம்னு வந்த அவங்களுக்கு எடிட்டிங் வேலைகளைச் செய்து கொடுத்திருக்கேன். எனக்கு மாசம் ரூ.13,000 தான் சம்பளம். அதனால் சைடுல இந்த மாதிரி சில வேலைகளை ரொம்ப நாளாகவே செய்து தந்துட்டு வரேன்.
அதிகாரிகள் 'இவங்களைத் தெரியுமா'ன்னு கேட்டதும், தெரியும்னு சொன்னதோட, அவங்களுக்கு நான் செஞ்ச வேலைகள் குறித்த விவரங்களையும் கேட்டாங்க. என் கம்ப்யூட்டரை நானே எடுத்து அதிகாரிகள் கிட்டக் கொடுத்துட்டேன்.
அவங்க ரெண்டு பேர் முன்னாடி என்னை விசாரிச்சாங்க. அவங்களும் இவருக்கு எங்களோடு வேறெந்தத் தொடர்பும் இல்லைன்னும் சொல்லிட்டாங்க. இருந்த போதும் ஏன் இப்ப திடீர்னு இப்படி செய்திகள் கிளம்புதுன்னு தெரியல" என்றவர், மேலும் சில விஷயங்களையும் பகிர்ந்தார்.
``கைதான ரெண்டு பேர்ல இலக்கியன்ங்கிறவர் முன்னாடி புலிகள் இயக்கத்துல இருந்தவர்னு சொல்றாங்க. ஆனா அது பத்தியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. என்னைப் பத்தி ரெண்டு நாளா வந்த செய்தி பத்தி கியூ பிரான்ச் அதிகாரிகள்கிட்டக் கேட்டதுக்கு, 'நாங்க எதுவும் தகவல் கொடுக்கல'ன்னு சொல்லிட்டாங்க. இது யார் பார்த்த வேலைனு தெரியல" என்கிறார் ஜெயபிரசாந்த்