Article 142, உச்ச நீதிமன்றம் : "ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணை" - ஜக்தீப் தன்கர் காட்டம்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காததையடுத்து, திமுக அரசு தாக்கல் செய்த ரிட் மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஏப்ரல் 8-ம் தேதியன்று ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்பில், ஆளுநர் ஆர்.என். ரவி விதிகளை மீறி செயல்பட்டதாகக் கண்டித்த உச்ச நீதிமன்றம், மசோதாக்கள் நடவடிக்கை எடுக்க கால வரம்பை நிர்ணயித்து, தற்போது நிலுவையில் இருக்கும் 10 மசோதாக்களுக்கும் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 142-ன் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியது.

அப்போதே, சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்துக்குரிய சட்டம் இயற்றும் அதிகாரத்தில் உச்ச நீதிமன்றம் எப்படி அதிகாரம் செலுத்த முடியும், மசோதாக்கள் மீது முடிவெடுக்கக் குடியரசுத் தலைவருக்கு எப்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியும் என்று கேள்விகள் எழுந்தது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் செயல் மீது குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், காட்டமாகப் பேசியிருக்கிறார்.
டெல்லியில் ராஜ்யசபா தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா கட்டுக்கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகப் பேசத் தொடங்கிய ஜக்தீப் தன்கர், "மார்ச் 14, 15-க்கு இடையிலான இரவில் டெல்லியில் ஒரு நீதிபதியின் வீட்டில் இந்த சம்பவம் நடந்தது. ஏழு நாள்களுக்கு இதைப் பற்றி யாருக்கும் தெரியாது. மார்ச் 21-ம் தேதி செய்தி வெளியானது. மக்கள் அதிர்ச்சியாகினர். இந்த தாமதம் ஏன் என்று விளக்க முடியுமா? இது விசாரிக்கப்பட வேண்டிய ஒன்று. எல்லோரும் மதிக்கக்கூடிய அரசின் நிறுவனங்களில் ஒன்று (நீதித்துறை) கூண்டில் நிறுத்தப்பட்டிருப்பதால் நாடு பதட்டத்தில் இருக்கிறது.

சட்டத்தின் ஆட்சிப்படி இந்த நாட்டில் யார் மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யலாம். அதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. ஆனால், ஒரு நீதிபதி மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்ய முடியாது. நீதித்துறையிலிருந்து அனுமதி கிடைத்தால்தான் நீதிபதி மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்ய முடியும். ஆனால், அதுவுமே அரசியலமைப்பில் இல்லை. குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் மீது மட்டும்தான் வழக்கு தொடுப்பதிலிருந்து அரசியலமைப்பில் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது, சட்டத்திற்கு அப்பாற்பட்டு ஒரு பிரிவு (நீதிபதிகள்) எப்படி இந்த விதிவிலக்கைப் பெற்றது?
இப்போது இந்த விவகாரத்தில் ஒரு குழு அமைத்திருக்கிறார்கள். அந்தக் குழுவால் பரிந்துரை மட்டும்தான் வழங்க முடியும். ஆனால், அந்தப் பரிந்துரை யாருக்கு வழங்குவார்கள்? எதற்காக வழங்குவார்கள்? நீதிபதிகளுக்கு நம்மிடம் உள்ள வழிமுறை, இறுதியாக நாடாளுமன்றத்தால் நடவடிக்கை எடுப்பது மட்டுமே. பதவிநீக்க நடவடிக்கைகள் தொடங்கும்போது ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் காலம் கடந்துவிடும். இது சட்டத்தின் ஆட்சியை நீர்த்துப்போகச் செய்யவில்லையா?

சமீபத்திய ஒரு தீர்ப்பில் (தமிழக அரசு மசோதாக்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு) குடியரசுத் தலைவருக்கு உத்தரவு (மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான கால வரம்பு) பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. நாடு எங்கு சென்றுகொண்டிருக்கிறது. இதில், மறுஆய்வு தாக்கல் செய்கிறார்களா இல்லையா என்பது பிரச்னை அல்ல.
குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் (மசோதாக்கள்) என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. அப்படி செய்யவில்லை என்றால் இல்லையென்றால் அது சட்டமாகிறது. அப்படியென்றால், சட்டம் இயற்றுதல், ஆட்சி செய்தல் என சூப்பர் நாடாளுமன்றமாகச் செயல்படும் நீதிபதிகளை நாம் கொண்டிருக்கிறோம். குடியரசுத் தலைவரை நீங்கள் (நீதிபதிகள்) வழிநடத்தும் சூழ்நிலையை நாம் கொண்டிருக்க முடியாது.

அரசியலமைப்பின் கீழ் உங்களுக்கு உள்ள ஒரே உரிமை, பிரிவு 145(3)-ன் கீழ் சட்டத்தில் குறுக்கிடத்தான் முடியும். அந்த அமர்விலும், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகள் இருக்க வேண்டும். பிரிவு 142-ஆனது ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணையாக மாறியிருக்கிறது. அது அவர்களுக்கு 24 மணிநேரமும், வாரத்தின் ஏழு நாள்களிலும் கிடைக்கிறது" என்று காட்டமாகப் பேசினார்.