Article 142 மூலம் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த உச்ச நீதிமன்றம் - விவாதிக்கப்படுவது ஏன்? | In-Depth
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கெதிரான தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் உரிமைகளை நிலைநிறுத்தும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை ஏப்ரல் 8-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தது. இதில், அம்பேத்கரின் வாக்கியத்தைக் குறிப்பிட்டு ஆளுநரைச் சாடியது, மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு கால வரம்பு நிர்ணயித்தது ஆகியவை பல தரப்பிலிருந்தும் வரவேற்கப்பட்டது.

அதேவேளையில், அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 142, தனக்கு வழங்கியிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றமே தாமாக ஒப்புதல் வழங்கியிருப்பது விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. இந்த வழக்கின் பின்னணி என்ன, மசோதாக்கள் மீது அரசியலமைப்புச் சட்டம் 200-ன் படி ஆளுநருக்கு இருக்கும் அதிகாரம் என்ன? உச்ச நீதிமன்றத்துக்கு அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 142 என்ன அதிகாரம் வழங்கியிருக்கிறது? இந்த வழக்கில் பிரிவு 142-ன் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் பயன்படுத்தியிருப்பது ஏன் விவாதப்பொருளாகியிருக்கிறது ஆகியவற்றை இனி விரிவாகப் பார்க்கலாம்.
வழக்கின் பின்னணி
கடந்த 2022-ல், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் உள்ளிட்டவை தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்கள் உட்பட பல மசோதாக்கள், அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 200-ன்படி முறையாக ஆளுநரின் ஒப்புதல் பெறுவதற்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டிருந்தது.
அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 200 ஆளுநருக்கு என்ன சொல்கிறது?
"சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதா, சட்டமாக்கப்படுவதற்கான ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்படும். அந்த மசோதாக்களுக்கு ஆளுநர் (1) ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது (2) நிறுத்தி வைக்க வேண்டும் அல்லது (3) குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும்.

அவ்வாறு, அனுப்பப்படும் மசோதா பண மசோதாவாக இல்லாதபட்சத்தில், அதில் திருத்தங்கள் தேவைப்படுமெனில் `as soon as possible' அதாவது முடிந்தவரை சீக்கிரமாக மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறு மாநில அரசுக்கே திருப்பியனுப்பலாம். அவ்வாறு அனுப்பப்படும் மசோதாவை மாநில அரசு, திருத்தம் செய்தோ அல்லது அப்படியேவோ இரண்டாவது முறையாக அனுப்பினால், ஆளுநர் அதைத் தடுத்து நிறுத்தமுடியாது. ஒப்புதல் வழங்கியே ஆக வேண்டும்.
ஒருவேளை, அந்த மசோதா சட்டமாக மாறினால் அரசியலமைப்புச் சட்ட அளித்த அதிகாரம் பறிபோகும் என்று ஆளுநர் கருதினால் அதனை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பலாம்."

ஆனால், ஒரு வருடமாக தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதலும் அளிக்காமல், நிராகரிக்கவும் செய்யாமல் கால வரம்பு இன்றி தாமதப்படுத்தினார் ஆளுநர் ஆர்.என். ரவி.
இதனால், மசோதாக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததற்காக 2023 அக்டோபர் 31-ம் தேதி ஆளுநருக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீது பதிலளிக்குமாறு ஆளுநருக்கு நவம்பர் 10-ம் தேதி உச்ச நீதிமன்றத்திலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அடுத்த மூன்றாவது நாளே (நவம்பர் 13) ஆர்.என். ரவி, எந்த பரிந்துரையோ, திருத்தமோ எதுவும் குறிப்பிடாமல் மசோதாக்களை மாநில அரசுக்கே திருப்பியனுப்பிவிட்டு, இரண்டு மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி தனது மேசையை சுத்தம் செய்தார். குறிப்பிட்டுச் சொன்னால், காரணமே இன்றி மசோதாக்களை ஆர்.என். ரவி நிராகரித்திருக்கிறார்.
பின்னர், இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 20-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வருவதற்கு முன்பாக, நவபார் 18-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி, ஆளுநர் திருப்பியனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி, ஒப்புதல் பெறுவதற்காக ஆளுநர் மாளிகைக்கு மீண்டும் அனுப்பினார்.
அதைத்தொடர்ந்து, நவம்பர் 20-ம் தேதி நடைபெற்ற விசாரணையில், மீண்டும் அனுப்பப்பட்ட மசோதாக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அறிவிக்குமாறு ஆளுநர் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பருக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
அடுத்த வாரத்திலேயே, இரண்டாவது முறையாக அனுப்பப்பட்ட மசோதாக்களை அமைச்சரவையின் எந்த ஆலோசனையுமின்றி நவம்பர் 28-ம் தேதியன்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் ஆர்.என். ரவி.
இதனால், தமிழக அரசு இந்த விவகாரத்தில் ரிட் மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதனை, நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் அடங்கிய நீதிமன்ற அமர்வு விசாரித்தது.

தமிழ்நாடு அரசு vs ஆளுநர்
விசாரணையில், "அரசியமலமைப்புச் சட்டம் 200-ஐ ஆளுநர் மீறினார். மசோதாக்களை நிராகரிப்பதற்கான காரணம் சொல்லவில்லை. இரண்டாவது முறையாக மசோதாவை அனுப்பும்போது அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது" என்று தமிழ்நாடு அரசு வாதிட்டது.

மறுபக்கம், "ஆளுநருக்கு உள்ள அதிகாரத்தின்படி, ஒரு மசோதாவை எந்த ஒரு நிலையிலும் அவரால் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும். அவ்வாறு அனுப்பிவிட்டால், அந்த மசோதா மீதான ஆளுநரின் முடிவெடுக்கும் அதிகாரங்கள் முடிவுக்கு வந்துவிடும்.
அதற்குப் பிறகு மசோதா மீது முடிவெடுப்பது குடியரசு தலைவர்தான். பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களின் நியமிப்பது தொடர்பான மசோதாவில், ஆளுநருக்கு இருக்கும் அதிகாரத்தை அகற்றும் வகையில் அதன் அம்சங்கள் இருந்தது.
அதனால்தான் அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை." என்று ஆளுநர் தரப்பு வாதிட்டது. இறுதியாக, இதில் விசாரணைகள் கடந்த பிப்ரவரி மாதத்தோடு நிறைவடைந்து, தேதி குறிப்படாமல் தீர்ப்பு ஒத்துவைக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பு!
மசோதாக்களை கால வரம்பின்றி நிறுத்திவைத்த ஆளுநரின் செயலைக் கண்டித்த உச்ச நீதிமன்றம், "பிரிவு 200-ன் படி ஆளுநருக்கு தன்னிச்சையாக செயல்படக்கூடிய அதிகாரமில்லை.
மசோதாவை நிறுத்திவைப்பதாக இருந்தாலும், `as soon as possible' என்பதன்படி கட்டாயம் செயல்பட்டாக வேண்டும். `வீட்டோ (எதேச்சதிகாரமாக மசோதாவை நிராகரித்தல்)' பவர் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது.

பிரிவு 200-ன் கீழ் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதன் அடிப்படையில் மட்டும்தான் மசோதா மீது ஆளுநர் செயல்பட முடியுமே தவிர, வெறுமனே அந்த மசோதா மீது உட்கார்ந்து கொண்டிருக்க முடியாது.
ஆளுநரின் நடவடிக்கை விதிமீறல் செயல். ஆளுநர் இதில் நேர்மையாகச் செயல்படவில்லை. `ஒரு அரசியல் சாசனம் எவ்வளவு நன்மை வாய்ந்ததாக இருந்தாலும் அதை செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால் அது மோசமானதாகவே இருக்கும்' " என்று சாடியது.
கால வரம்பு நிர்ணயித்த உச்ச நீதிமன்றம்!
பிரிவு 200-ல் மசோதா மீது நடவடிக்கை எடுக்க கால வரம்பு எதுவும் இல்லாமல், `as soon as possible' என்று குறிப்பிடப்பட்டிருப்பதால், இவ்வாறு கால வரையின்றி மசோதாக்களை நிறுத்திவைக்கிறார்கள் என்று கருதிய உச்ச நீதிமன்றம், தனது தீர்ப்பில் இதற்கான கால வரம்பை நிர்ணயித்தது.

இனி, மசோதாவை நிறுத்தி வைக்க முடிவுசெய்தாலோ, குடியரசுத் தலைவருக்கு தலைவருக்கு அனுப்ப முடிவுசெய்தலாலோ ஒரு மாதத்துக்குள் ஆளுநர் அதைச் செய்ய வேண்டும்.
மேலும், மசோதாவை நிறுத்தி வைப்பது அல்லது குடியரசு தலைவருக்கு அனுப்புவது என்பது, மாநில அரசின் முடிவுக்கு முரணானதாக இருந்தால், அதிகபட்சம் மூன்று மாதங்களுக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்.
இந்த வழக்கில் ஆளுநரின் செயல்பாட்டால் கடும் அதிருப்தியான உச்ச நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 142, தனக்கு வழங்கியிருக்கும் உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி, கிடப்பில் இருக்கும் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கியது.
அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 142: ஒரு வழக்கில் முழுமையான நீதியை வழங்குவதற்காக, உச்ச நீதிமன்றம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தேவையான உத்தரவைப் பிறப்பிக்கலாம். அந்த உத்தரவு நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும்.

பிரிவு 142, அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழங்கிய சில முக்கிய வழக்குகள்!
பாபர் மசூதி இடிப்பு வழக்கு: 1992-ல் மிகப்பெரிய அளவிலான மதவாத குழு, அயோத்தியாவில் அமைந்திருந்த பாபர் மசூதியை ராமர் பிறந்த இடம் என்று கூறி இடித்தனர்.
இதில், சுமார் 500 ஆண்டுகளாக மசூதி அங்கு இருக்கிறது என்று வரலாற்றுபூர்வமான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், அது ராமர் பிறந்த இடம் என்று நிரூபிக்க வரலாற்றுப்பூர்வமான ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை.

இருப்பினும், இந்த வழக்கு பல வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு வரவே, 2019-ல் உச்ச நீதிமன்றம் இதில் பிரிவு 142 அதிகாரத்தைப் பயன்படுத்தி, அந்த சர்ச்சைக்குரிய இடத்தில் இந்துக்கள் கோயில் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது.
மேலும், முஸ்லிம்கள் தொழுகை நடத்த அதே அயோத்தியில் வேறு பகுதியில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என்று தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
பேரறிவாளன் விடுதலை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ல் கொலைசெய்யப்பட்ட வழக்கில் சுமார் 30 ஆண்டுகாலம் சிறையில் தண்டனை அனுபவித்துவந்த பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுவிக்க 2018-லேயே தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதும், ஆளுநர் அதில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்ததால் அவர்கள் தொடர்ந்து விடுதலை செய்யப்படாமல் இருந்தனர்.

2021-ல் அவர்களை விடுதலை செய்யுமாறு குடியரசுத் தலைவருக்கும் தமிழக அரசு கடிதம் எழுதியது. மறுபக்கம், பேரறிவாளன் விடுதலை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2022 மே 18-ம் தேதி அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 142-ன்படி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆளுநரின் தாமதத்தைச் சுட்டிக்காட்டி பேரறிவாளனை விடுவித்தது. அவரைத்தொடர்ந்து, மற்ற ஆறு பேரும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
சமீபத்திய விவாகரத்து வழக்கு: இவை மட்டுமல்லாது, மிகச் சமீபத்தில், திருமணமாகி ஓராண்டு கூட ஆகாத நிலையில் கணவன் - மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் பல்வேறு குற்றச்சட்டுகளை வைத்து விவாகரத்து கோரி நீதிமன்றத்துக்குச் சென்றனர். மொத்தமாக இரு தரப்பினருக்கும் இடையே 17 வழக்குகள் பதியப்பட்டிருந்தன. மொத்த வழக்கும் முடிவடைய பல ஆண்டுகள் ஆகும்.

இதைக் கவனித்த இதே உச்ச நீதிமன்ற அமர்வு, இந்த வழக்கை அவ்வளவு காலம் இழுத்தடிபதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதை உணர்ந்து, இளம் வயதுடைய இவர்களின் வீணாவதற்குப் பதில் விவாகரத்து வழங்கிவிடலாம் என்று எண்ணி, பிரிவு 142-ஐ பயன்படுத்தி அவர்களுக்கு விவாகரத்து வழங்கியது. மேலும், தனது தீர்ப்பில், "திருமண வாழ்க்கை தோல்வியடைந்துவிட்டால் அதுவே வாழ்வின் முடிவாகாது. அடுத்தகட்டத்துக்கு நகர்ந்து புதிய வாழ்வைத் தொடங்குங்கள்" என்று உச்ச நீதிமன்றம் அறிவுரையும் வழங்கியது.
இப்போது தமிழ்நாடு vs ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் விவாதம் ஏன்?
* இந்த வழக்கில் ஆளுநரைக் கண்டித்தது, மசோதா மீது நடவடிக்கை எடுக்க கால வரம்பு நிர்ணயித்தது வரை எல்லாம் சரிதான்.
ஆனால் இதுவரை இல்லாத வகையில், சட்டம் இயற்றுதல் (Policy Making) விஷயத்தில், பிரிவு 142 அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் தாமாக மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்திருப்பது, ஆட்சியதிகாரத்தில் கை வைப்பதாக இருக்கிறது எனப் பேச்சுக்கள் எழுகிறது.
பிபிசி தமிழ் ஊடகத்திடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம், ``ஆளுநர்கள் தங்களின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும்போது, உச்ச நீதிமன்றம் அந்த அதிகாரத்தை தானே எடுத்துக் கொள்ளும் என்பது தான் இதில் கவனிக்க வேண்டிய விஷயம். அது ஜனநாயகத்துக்கு சரியானதாக இருக்குமா என்பது பிரதான கேள்வி. தனக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி மறைமுக ஆட்சி அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் செலுத்துவதுபோல இந்த உத்தரவு உள்ளது.
தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. அவ்வாறு சீராய்வு மனுவை தாக்கல் செய்யவில்லை என்றால் இது சட்டமாகிவிடும். இந்த தீர்ப்பு குடியரசுத் தலைவருக்கும் பொருந்தும். ” என்றிருக்கிறார்

* இந்த வழக்கில் ஓராண்டு காலமாக மசோதாக்களை ஆளுநர் கிடப்பிலேயே வைத்திருந்தது அரசியலமைப்புக்குப் எதிரானது என்பதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது சரி என்று வரவேற்கப்பட்டாலும், சட்டம் இயற்றுவது சட்டமன்றம்/நாடாளுமன்றத்தின் அதிகாரம், அதற்குள் செல்லாமல், மசோதாக்களுக்கு உடனடியாடிய ஒப்புதல் அளிக்குமாறு குறிப்பிட்டு காலக்கெடுவை நிர்ணயித்து ஆளுநருக்கோ குடியரசுத் தலைவருக்கோ உத்தரவிட்டிருக்கலாம் என்றும் கருத்துக்கள் சொல்லப்படுகிறது. இப்போது இல்லையென்றாலும் பின்னாளில் இதேபோன்று சட்டமியற்றும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிகாரத்தைப் பயன்படுத்தவும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
* அதேபோல், இப்போது சட்டமன்றத்திலோ நாளுமன்றத்திலோ நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம். ஆனால், உச்ச நீதிமன்றம் இதேபோன்று பிரிவு 142-ஐப் பயன்படுத்தி ஒப்புதல் அளித்த மசோதாக்களுக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடியுமா என்ற கேள்வி பொதுவாக எழுகிறது.

* மசோதா மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க ஒரு மாதம், மூன்று மாதங்கள் கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதே தவிர, அந்தக் கால வரம்பு மீறி ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்தால் அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
* மேலும், இந்தத் தீர்ப்பை இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிருப்பதால், `சட்டம் இயற்றுதலில் பிரிவு 142 அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் பயன்படுத்த முடியுமா?' என்ற கேள்வியை மத்திய அரசு முன்வைத்து இந்தத் தீர்ப்புக்கெதிராக ஐந்து அல்லது அதற்கு மேலான நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் (constitution bench) மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பிருக்கிறது. அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டுக்குச் செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, தற்போது இந்த வழக்கில் மத்திய அரசு மேல்முறையீட்டுக்குச் சென்றால் அப்போது இத்தகைய கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் உச்ச நீதிமன்றம் தெளிவான விளக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.