கூட்டுப் பாலியல் வன்முறை: பாஜக எம்எல்ஏ உள்பட 16 பேர் மீது வழக்குப்பதிவு!
Ashwin: "வெற்றிக்கு பின்னால் இருந்த கண்ணீர்..."- அஷ்வின் மனைவி ப்ரீத்தியின் உருக்கமான பதிவு
ஓய்வை அறிவித்த அஷ்வின் குறித்து அவரின் மனைவி ப்ரீத்தி உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் பதிவில், " கடந்த இரண்டு நாட்களாக எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இதை எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரருக்கான அர்ப்பணிப்பாக எழுதலாமா? அல்லது வாழ்க்கைத் துணை என்ற கோணத்தில் எழுதலாமா? அல்லது ஒரு ரசிகையின் காதல் கடிதமாக எழுதலாமா? என எனக்குத் தெரியாமல் இருந்தது. தற்போது இந்தப் பதிவு எல்லாவற்றின் கலவையாக இருக்கும் என நினைக்கிறேன்.
அஷ்வினின் பத்திரிக்கையாளர் சந்திப்பை இரண்டு நாட்கள் முன்பு பார்த்த போது நான் பல நல்ல தருணங்களை எல்லாம் யோசித்துப் பார்த்தேன். கடந்த 13 - 14 ஆண்டுகளில் பல நினைவுகள் உள்ளன. பெரிய வெற்றிகள், தொடர் நாயகன் விருதுகள், ஒரு ஆக்ரோஷமான போட்டிக்குப் பின் அறையில் நிலவும் நிசப்தம், தனது எண்ணங்களை ஒரு காகிதத்தில் பென்சிலால் அவர் எழுதுவது, போட்டித் திட்டங்களை மேற்கொள்வதற்காக இடைவிடாமல் கிரிக்கெட் வீடியோக்களை பார்த்துக்கொண்டு இருப்பது, ஒரு போட்டிக்குச் செல்லும்போது மூச்சுப் பயிற்சி செய்வது, சில பாடல்களை இடைவிடாமல் கேட்பது, சில வெற்றிகளுக்குப் பின்னால் இருந்த கண்ணீர்,
குறிப்பாக சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டி (2013), மெல்போர்ன் கிரிக்கெட் போட்டியின் வெற்றி, சிட்னி போட்டி டிரா, காபா போட்டி வெற்றி, டி20 அணியில் மீண்டும் இடம் பிடித்தது. உங்களுடன் உலகின் அனைத்து கிரிக்கெட் மைதானங்களுக்கும் சென்றது என பல நினைவுகள் அற்புதமானவை. நீங்கள் எனக்கு அறிமுகப்படுத்திய உலகம், நான் விரும்பிய விளையாட்டை மிக அருகில் இருந்து பார்க்கவும், கொண்டாடுவதற்கும் எனக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.
உங்களுடைய சுமையை இறக்கி வைப்பதற்கு இதுதான் நேரம். உங்களுக்கு பிடித்தது போல வாழ்க்கையை வாழுங்கள். உங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுங்கள். எதுவுமே செய்யாமல் இருப்பதற்கும் நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மீம்ஸ்களை நாள் முழுவதும் பகிர்ந்து கொண்டே இருங்கள். புதிய பவுலிங் வேரியேசனைக் கண்டுபிடியுங்கள். நம் குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள்" என்று பதிவிட்டிருக்கிறார்.