தில்லியில் 1 மணி நேரம் வெளியே போனால்கூட நுரையீரல் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம்...
BB Tamil 8 Day 41: `எனக்கு சவுந்தர்யா பார்த்து பயம்' - பதறிய முத்து; பவித்ராவின் கேள்விகள்
இந்த எபிசோடை விஜய்சேதுபதி இன்முகத்துடன் கூலாக கையாண்டார். யாரையும் அநாவசியமாக கடிந்து கொள்ளவில்லை. என்றாலும் நிகழ்ச்சியில் அதிக சுவாரசியமில்லை. உப்புச் சப்பற்ற வெற்ற விசாரணையாக இருந்தது.
சீக்ரெட் டாஸ்க் என்று தெரிந்த பிறகுதான் ராணவ்வை பலரும் பாராட்டினார்கள். எனில் ‘சிறந்த போட்டியாளர்’ தேர்வு ஆரம்பிப்பதற்கு முன்பே இந்த ரகசியத்தை பிக் பாஸ் உடைத்திருக்க வேண்டும். வர்ஷினி கேரக்டராகவே மாறி விட்டார் போல. VP சார் மீது உண்மையாகவே அவருக்கு கிரஷ் ஏற்பட்டிருக்கிறதாம். (வெளியில் வந்தால் ‘அர்ச்சனை’ கிடைக்கும்!).
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 41
கேஷூவல் டிரஸ்ஸில் கேஷூவலாக மேடைக்கு வந்தார் விஜய் சேதுபதி. “ஸ்கூல் டாஸ்க் பார்க்க நல்லாயிருந்துதுல… அந்த நாட்கள் பலருக்கும் மகிழ்ச்சியான அனுபவமா இருந்திருக்கும். ஆனா எனக்கு அப்படியில்ல. குள்ளமா இருப்பேன். அதனால ரொம்ப கிண்டல் பண்ணுவாங்க.. மக்கு வேற.. தாழ்வு மனப்பான்மை.. இந்த லைஃப்ல இருந்து தப்பிச்சு எப்படா பெரிய ஆளா வளருவேன்ற மாதிரிதான் இருந்தது” என்று வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டது நல்ல விஷயம். இளம் வயதில் எதிர்கொள்ளும் bullying பலரை வாழ்நாள் முழுக்க பாதித்து விடும்.
“வாங்க வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைப் பார்க்கலாம்” என்று அழைத்துச் சென்றார் விசே. ஒரு எளிய டாஸ்க்கை செய்ய வைப்பதற்காக தலையால் தண்ணி குடித்துக் கொண்டிருந்தார் அருண். அந்த அளவிற்கு அவரை பயங்கரமாக வெறுப்பேற்றினார் சவுந்தர்யா. ‘ஸ்கெட்சு சேகருக்கு இல்ல குமாரு.. உனக்குத்தான்’ என்பது போல் சவுந்தர்யாவிற்கு டாஸ்க் கொடுக்கிறேன் பேர்வழி என்று கடினமான டாஸ்க் செய்தது அருண்தான். சண்டிமாடு வண்டியோட்ட உதவாது.
“VP சார் மேல ஒரு கிரஷ் ஃபீல் வருது” என்று ஜெப்ரியிடம் தனியாக சொல்லிக் கொண்டிருந்தார் வர்ஷினி. “அதாவது கேரக்டர்படி சொல்றியா?” என்று நம்ப முடியாமல் கேட்டார் ஜெப்ரி. ‘இந்தப் பூனையா பீர் குடிக்குது?” என்று அவரால் நம்ப முடியவில்லை. “இல்ல. உண்மையாவே..மனசுல இருக்கறத ஓப்பனா சொல்லிடறதுதான்.. என் வழக்கம்” என்றார் வர்ஷினி, வெட்கத்துடன். இதில் தவறொன்றுமில்லை. ஆண்கள் இதை பெருமிதமாக வெளியே சொல்லிக் கொள்வார்கள். பெண்களால் அப்படிச் சொல்ல முடியாது. அப்படியொரு பாசாங்கு சமூகம். இந்த taboo மாற வேண்டும்.
“எனக்கு சவுந்தர்யா பார்த்து பயம்” - முத்து ஓப்பன் டாக்
“சவுந்தர்யா ரொம்ப கிளவரா கேம் ஆடறா.. அவளைப் பார்த்துதான் நான் ரொம்ப பயப்படறேன். எந்தப் பக்கம் இருக்கான்னே தெரியல” என்று முத்து சொல்லிக் கொண்டிருக்க “எல்லாமே பிளான் பண்ணி பண்றா’ என்று இதை ஆமோதித்துக் கொண்டிருந்தார் தர்ஷிகா. எதிரி இப்படித்தான் என்று தெரிந்து விட்டால் அவரிடம் மோதுவது எளிது. ஆனால் ஒருவர் unpredictable ஆக இருந்தால் அவரை எப்படி எதிர்கொள்வது என்பதில் குழப்பம் வந்து விடும். முட்டாள் மாதிரி ஆரம்பத்தில் தோற்றமளித்த சவுண்டு, இப்போது ரவுடியாக ஃபார்ம் ஆகி இருப்பதும், அவ்வப்போது வெள்ளந்தியாகப் பேசுவதும் என்று ஒரு மாதிரியான கலவையில் புரிந்து கொள்ள முடியாத குழப்ப கேஸாக இருக்கிறார்.
வீட்டிற்குள் நுழைந்தார் விசே. லேட்டாக வந்த ராணவ்வை ‘முட்டி போடுங்க’ என்று கலாய்த்தார். பிறகு “நீங்க ஆடின டான்ஸ் நல்லா இருந்தது. இன்னொருத்தன் காதலைக் கெடுத்துட்டு ஆடினீங்களே.. மனசுல இருந்ததையெல்லாம் கேரக்டர் வழியா கொண்டு வந்துட்டீங்க போல” என்று சர்காஸ்டிக்காக ராணவ்வை பாராட்டினார். ராணவ்விற்கு கைத்தட்டல் கிடைப்பதன் மூலம் மக்கள் அவரை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.
“ஸ்கூல் டாஸ்க்ல நீங்க எல்லோரும் பண்ணது. சிறப்பு. இந்த மாதிரி ஒரு லெங்க்த்தியான ஷாட் சினிமால கூட கிடையாது. ‘ஆக்ஷன்தான்.. அப்புறம் ரொம்ப நேரத்திற்கு கட் கிடையாது” என்று பள்ளிக்கூட டாஸ்க் பற்றிய நடிப்பை ஆத்மார்த்தமாக பாராட்டினார் விசே. “ஆமாம்.. சார்.. அந்தக் காலத்துல போய் வாழ்ந்த மாதிரி இருக்கு.. ஒரு தெரபி மாதிரி இருக்கு” என்று தானும் நெகிழ்ந்தார் ரஞ்சித்.
“சூப்பரா இருந்துச்சு சார்.. அதிலேயே இருக்கலாம்ன்ற மாதிரி இருந்தது” என்று வர்ஷினி புன்னகையுடன் சொல்ல “எது..? VP சார் கூட இருக்கறதா?” என்று விசே கிண்டலடிக்க ‘அதுவும்தான்’ என்று மனதில் இருந்ததை சிரிப்புடன் வர்ஷினி சொல்ல, அந்தச் சமயத்தில் அருண் தந்த எக்ஸ்பிரஷனை வார்த்தைகளில் சொல்ல முடியாது. பாண்டியராஜன் முழியுடன் அருண் அமர்ந்திருந்ததைப் பார்த்து விசே சிரித்தார். அருணை நோண்டுவதென்றால் விசேவிற்கு தனி குஷி வந்து விடுகிறது. “பர்த்டே விஷ்லாம் சொன்னீங்களே சார்” என்று வெளியில் இருந்த விஷயத்தையும் சேர்த்து வைத்து அருணைக் கலாய்த்தார்.
‘ஸ்கூல் டாஸ்க்கில் வெறும் இரைச்சல்தான் இருந்தது’
ஜெப்ரி எழுந்த போது பலத்த கைத்தட்டல். “பிடி மாஸ்டரா நீ பண்ணத ரொம்ப ரசிச்சேன்” என்று பாராட்டினார் விசே. “டீச்சர் வேலை எத்தனை சிரமம்ன்றது இப்பத்தான் புரியது” என்றார் மஞ்சுரி.. ஸாரி.. மஞ்சரி. “செல்ஃப் கேரக்டர்ல என்னென்னமோ குழப்பியடிச்சு பண்ணேன்” என்று பம்மிக் கொண்டே சொன்னார் சவுந்தர்யா. எல்லோரும் சொல்லி முடித்ததும் “யார்னா மிச்சம் இருக்கீங்களா.. ஓ.. VP சாரா?.. அவர விடுங்க.. அவரைப் போய் என்னத்த கேட்டுட்டு?” என்று கலாய்த்தார் விசே.
பிரேக் முடிந்து திரும்பியதும் பார்வையாளர்களிடம் “உங்க கிட்ட கருத்து ஏதாவது இருக்கா.. சொல்லுங்க.. விசாரிச்சுடுவோம்” என்று விசே கேட்க, வரிசையாக கேள்விகள் வந்தன. “ஜாக்குலின் தீபக்கை டார்கெட் பண்ணி சில விஷயங்கள் பேசினாங்க” என்று ஒரு பெண்மணி எழுந்து சொல்ல “இல்லம்மா.. கேக்கற விதம்ன்னு ஒண்ணு இருக்கில்ல.. நான் ஜாக்குலினை சப்போர்ட் பண்ணலை..” என்று அந்தப் பஞ்சாயத்தை விசேவே முடித்து விட்டார். தீபக்கின் மேட்டிமைத்தனம் குறித்து விசேவிற்கும் சற்று நெருடல் இருந்திருக்க வேண்டும். அதற்கு அவர் இளம் வயதில் எதிர்கொண்ட கி்ண்டல்கள் காரணமாக இருக்கலாம்.
“ஸ்கூல் டாஸ்க்கை நாஸ்டால்ஜியா நினைவுகளோட நல்லா பண்ணியிருக்கலாம். ஆனா வெறும் இரைச்சல்தான் இருந்தது’ என்று இன்னொரு பெண்மணி புகாராகச் சொன்னது சரியான அப்சர்வேஷன். “கேப்டனோட கயிறுகளை வேண்டுமென்றே காரணம் சொல்லி அவிழ்த்த மாதிரி இருந்தது” என்றார் இன்னொருவர்.
உள்ளே சென்ற விசே, “எனக்கு கிடைச்ச ரோலுக்குப் பதில், இந்த ரோல் கிடைச்சா நல்லா பண்ணியிருப்பேன்ற மாதிரி இருக்கும்ல. அது என்னன்னு சொல்லுங்க” என்று சம்பிரதாயமான உரையாடலை ஆரம்பித்தார்.
பவித்ராவின் கிடுக்கிப்பிடி கேள்விகள் - சமாளித்த அருண்
“நான் ஸ்கூல்ல பயந்த பொண்ணு. சத்யா மாதிரி ஒரு ரெபல் கேரக்டர் கிடைச்சா நல்லா பண்ணியிருப்பேன்” என்றார் சவுண்டு. பலரும் பிரின்சிபல் மேடத்தின் பதவிக்கு குறி வைத்தார்கள். பவித்ராவும் அதில் ஒருவர். “ஓகே.. அந்தக் கேரக்டரா மாதிரி இப்ப விபி சார் கிட்ட பேசுங்க” என்று விசே டாஸ்க் கொடுக்க பவித்ராவின் கிடுக்கிப்பிடி கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் விழித்தார் அருண். பின்பு சுதாரித்துக் கொண்டு ‘உனக்காக எப்பவும் கூடவே இருப்பேன்..” என்று அதிக ரொமான்ஸைப் பிழிந்ததில் பவித்ராவிற்கே வெட்கம் வந்து விட்டது. (இந்த விஷயத்துல ஆளு கில்லி போல!)
“பிடி சார் பாத்திரம் கிடைச்சிருந்தா அன்னியன் மாதிரி டபுள் ரோல் பண்ணியிருப்பேன்” என்று முத்து சொன்னது நல்ல ஐடியா. “வெளிய வெறுப்பைக் காட்டினாலும் உள்ளுக்குள்ள காதலை ஒளிச்சு வெச்சிக்கிட்டு செஞ்சிருப்பேன்” என்று பிரின்சிபல் ரோலை முன்வைத்து தர்ஷிகா சொல்ல “இந்த லைன் நல்லாயிருக்கு” என்று பாராட்டினார் விசே.
“கேரக்டரா பண்ணீங்க ஓகே.. ஆனா இதை ஒரு கதையா டெவலப் பண்ணீங்களா.. எனக்கு அது மிஸ் ஆன மாதிரி இருந்தது” என்று விசே சொல்ல, “சத்யாவை ஒன்சைடா லவ் பண்ணேன்” என்றார் ரியா. “இது என்ன புதுக்கதையா இருக்கு. இந்த விஷயம் எனக்கே தெரியாது” என்றார் சத்யா.
“யாருக்கெல்லாம் ஸ்கூல் வாழ்க்கைக்கு திரும்பிப் போக வேணாம்?”ன்னு தோணுது?” என்று விசே கேட்க நாலைந்து பேர் கை தூக்கினர். ‘என் இனமய்யா நீங்கள்’ என்று சேம் பின்ச் சொன்ன விசே அதைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.
சிலருடைய நாஸ்டால்ஜியாவில் சோகம்தான் இருக்கிறது
ஜாக்குலின் சொன்ன கதை பரிதாபமாக இருந்தது. “ஸ்கூல்ல இருந்து திரும்ப லேட் ஆயிடும். ஷேர் ஆட்டோ வர வரைக்கும் பஸ் ஸ்டாண்ட் தூண் பின்னாடி ஒளிஞ்சிருப்பேன். தனியா நிக்க பயமா இருக்கும்” என்றார் ஜாக். “ஸ்கூல்ல எனக்கு பிரெண்ட்ஸே கிடையாது. பாடி ஷேமிங் பண்ணுவாங்க. தனியா உக்காந்திருப்பேன்..” என்று வர்ஷினி சொல்ல, தன்னுடன் அதை ரிலேட் செய்து பரிதாபப்பட்டார். ரியாவும் நிறைய bullying பிரச்சினைகளை எதிர்கொண்டு மனஉளைச்சல் அடைந்ததை பகிர்ந்தார்.
“நானும் அப்படித்தான்.. குள்ளமா இருப்பேன்.. கிண்டல் பண்ணுவாங்க. எந்தப் பொண்ணும் என்னைப் பார்க்க மாட்டாங்க. சந்தோஷமான நாட்களாக இல்லாமல் இருந்தது. ஆனா அந்த அனுபவம்தான் பின்னாடி நான் வளர்றதுக்கு காரணமா இருந்தது. ஒரு விஷயம் இன்னொருத்தருக்குப் புரியுதுன்னா. நமக்கு ஏன் புரியாதுன்னு கேள்வி வந்தது.. தேட ஆரம்பிச்சேன்..” என்று விசே பகிர்ந்த சுயஅனுபவக் குறிப்பு நன்று.
பிரேக் முடிந்து திரும்பிய விசே “மஞ்சரி.. நீங்க அழுதிட்டீங்களே.. ஏன்..” என்று விசாரிக்க “ராணவ் வந்து ஒரே புலம்பினான் சார்.. என்னை எல்லோரும் ஒதுக்கறாங்க. நான் இந்த வாரம் வெளியே போயிடுவேன்.. அது இதுன்னு.. இன்னொரு பக்கம் மாணவர் போராட்டம்ன்னு ஒரு மாதிரி டென்ஷன் ஆயிடுச்சு” என்று அவர் சொல்லி முடிக்க, அடுத்த அழுகாச்சியான ஜாக்குலினை விசாரித்தார் விசே. நடந்த சம்பவங்களை ஜாக்குலின் விவரித்த விதம் நகைச்சுவையாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. “ரொம்பவும் ரசிச்சேன்” என்று கைத்தட்டி பாராட்டினார் விசே. “சண்டைக்கு நடுவுல சுடுதண்ணி எடுத்துட்டு வாங்கன்னு ராணவ் சொன்னான் சார்.. லைஃப்ல மறக்க மாட்டேன்” என்று ஜாக் சொல்ல குலுங்கி குலுங்கி சிரித்தார் ராணவ்.
ராணவ்வின் ‘சதுரங்க வேட்டை நடிப்பு’
“ராணவ் காரெக்ட்டரில் இருக்கவில்லை. பர்சனல் விஷயங்களையும் ரொம்ப கலந்துட்டார். குழப்பமா இருந்தது” என்பதை பலரும் ஒரு புகாராகச் சொன்னார்கள். ஆனால் அது ராணவ்வின் தனியான திறமையாக இருக்கலாம். வெறுமனே ‘லாஸ்ட் பென்ச் ஸ்டூடண்ட். மக்கு’ என்கிற கேரக்டரில் அவர் நின்று ஆடியிருந்தால் இந்த அளவிற்கு கவனத்தைக் கவராமல் போயிருக்கலாம். ஆனால் தான் தொடர்ந்த ஒதுக்கப்படுவதின் வலியையும் கலந்ததால் அவர் செய்வது நடிப்பு என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியாமல் போனது. தொடர்ந்த நிராகரிப்பிற்குப் பின்பு தன்னை நிரூபித்துக் கொள்ள அவர் நடத்திய ‘நடிப்பு போராட்டம்’ அது.
சதுரங்க வேட்டை படத்தின் வசனம் மாதிரி “என்னதான் பொய்யா இருந்தாலும் அதுல உண்மை கொஞ்சம் கலந்திருக்கணும். அப்பத்தான் நெஜம் மாதிரி தெரியும்” என்கிற ஃபார்முலாவைத்தான் ராணவ் பின்பற்றியிருக்கிறார் என்று தோன்றுகிறது. “ரொம்ப கன்ஃப்யூஸ் பண்ணிட்டான் சார்.. அவனை மட்டும் வெளில அனுப்பிடாதீங்க சார்..’என்று ஜாக்குலின் சொல்ல, “ஓகே.. நீங்களா.. ராணவ்வான்ற நெலம வந்தா உங்களை வெளியே அனுப்பிட்டு அவரை வெச்சுக்கறோம்” என்று கலாய்த்தார் விசே.
ஒருவழியாக சீக்ரெட் டாஸ்க் பற்றிய மூடியை உடைக்க ஆரம்பித்தார் விசே. ‘ஸ்டாப்ஸ் எல்லோரும் எழுந்திருங்க” என்று அவர்களை நிற்க வைத்து “தீபக் இப்போது பேசுவார்” என்று அறிவிக்க தீபக்கும் உற்சாகமாக எழுந்து ‘ஒரு அசரிரீ வந்துச்சு. அது என்ன சொல்லுச்சின்னா.. மேனேஜ்மெண்ட் ஆட்களை திக்குமுக்காட வைக்கணும். அதுக்கு உண்டான வேலைகளைப் பாருங்கன்னு மாணவர்களுக்கு ஆர்டர்.” என்று சொல்ல அப்போதுதான் ஸ்கூல் நிர்வாகத்தினருக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. ஆனால் இந்த ‘அதிர்ச்சி நாடகம்’ ஓப்பன் ஆன விதம் அத்தனை சுவாரசியமானதாக இல்லை. ‘ஓ.. அப்படியா..’ என்கிற மாதிரிதான் அவர்களின் ரியாக்ஷன் இருந்தது.
இந்தச் சமயத்தில் சரியாக பிரேக் விட்டு கிளம்பினார் விசே. எனில் இந்த அதிர்ச்சியை அவர்கள் எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பது வேடிக்கையாக இருக்கும் என்கிற பொருளில். “இனிமே நீ என்ன அழுதாலும் நான் வந்து ஏன்னு கேட்க மாட்டேன்” என்று ராணவ்வை செல்லமாக கோபித்துக் கொண்டிருந்தார் ஜாக்குலின்.
இந்த வாரம் வெளியேறுகிறவர்…
பிரேக் முடிந்து திரும்பிய விசே, இந்த சீக்ரெட் டாஸ்க் பற்றி கேட்க “எல்லோருமே நல்லாப் பண்ணாங்க. ஆனா ராணவ் மட்டும் கொஞ்சம் பர்சனலா போயிட்டான்” என்று புகார் மாதிரியாகச் சொன்னார் அருண். பலரும் இதையே சொன்னார்கள். விளக்கம் அளிக்க ராணவ் எழுந்த போது பார்வையாளர்களின் பலத்த கைத்தட்டல் கேட்டது. “பார்த்தியா..’ என்பது மாதிரி தலையாட்டினார் முத்து. எனவே இதுதான் ராணவ்விற்கான பதில். “மிக்ஸ் பண்ணி கொடுத்தாதான் நம்புவாங்கன்னு தோணுச்சு” என்று ராணவ் சொல்ல “மிக்சிங் ஓவரா போயிடுச்சு சார்” என்றார் ஜாக்குலின். “சுடுதண்ணி கேட்டான் சார்.. அப்பத்தான் லைட்டா சந்தேகம் வந்தது”
“அப்போ புரியலை.. இப்போ புரியது” என்ற ஜெப்ரி “இனிமே ராணவ் எது பண்ணாலும் நம்ப மாட்டேன்” என்றார். “இந்த டாஸ்க்கை சண்டை போட்டுத்தான் பண்ணணுமா. வேற மாதிரி ஐடியா தோணலையா?” என்று விசே கேட்க தான் தயார் செய்து வைத்திருந்த திரைக்கதையை மிக நீளமாக விவரித்தார் முத்து. “ஒரு மாதிரி நல்லாத்தான் ஆரம்பிச்சுச்சு.. ஆனா ராணவ் பய சொதப்பிட்டான். பயந்து போய் நிறுத்திட்டம்” என்றார் அவர்.
விஷாலும் ஜெப்ரியும் இணைந்து பாடிய பாடலில் ஜாக்குலின் பற்றிய கிண்டல்கள் விமர்சனமாக இருந்தன. இது குறித்து ஜெப்ரியிடம் ஜாக் விளக்கம் கேட்க வந்த போது ‘முடிஞ்ச கதையை ஏன் பேசணும்?” என்று விளக்கம் தருவதற்கு அவர் மறுத்து விட்டார். இந்த விஷயத்தை பஞ்சாயத்தில் எழுப்பிய விசே “ஏன்.. அவங்களுக்கு எக்ஸ்பிளெயின் பண்ணலை?’ என்று கேட்டு சற்று நேரத்திற்கு இழுத்தார். “அது போன வாரம். பாட்டு இந்த வாரம்” என்று சொன்ன ஜெப்ரி, விசேவின் கடுப்பான முகத்தைப் பார்த்ததும் “ஸாரி.. சார். என் மேலதான் தப்பு” என்று சரண் அடைந்து விட்டார்.
தான் செய்த ஆக்டிங் பற்றி மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்ட ராணவ் “இது வெளில எப்படி போயிருக்கும்?” என்று கவலையோடு கேட்க “அதான் கைத்தட்டினாங்களே.. தலைவன் வேற லெவல்” என்று பாராட்டினார் ரியா.
ஆனால் அப்படிப் பாராட்டியவர்தான் இந்த வாரம் வெளியேற்றப்பட விருப்பதாக சொல்கிறார்கள். உண்மையா? பார்த்து விடுவோம்.