தலித் மாணாக்கர் வெளிநாட்டில் கல்விகற்க அம்பேத்கர் பெயரில் உதவித்தொகை: கேஜரிவால்
BB Tamil 8 Day 75: வன்மத்தைக் கொட்டிய அன்ஷிதா; திருப்பி அடித்ததா முத்துவின் தியாக டிராமா?
இந்த எபிசோடில் பிக் பாஸ் தந்த டிவிஸ்ட் இதுவரை தந்தவற்றில் எல்லாம் பெரியது. ‘உங்க விளையாட்டை உங்களோட வெச்சுக்கங்க.. என் கிட்ட கேம் ஆடாதீ்ங்க. நீங்க படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா’ என்கிற மாதிரி முத்துவை முன்னிட்டு பிக் பாஸ் தந்த கடுமையான எச்சரிக்கை ‘யம்மாடியோவ்’ ரகம். முத்து இத்தனை நாட்கள் வளர்த்து வைத்த பிம்பம் முழுவதும் ஒரே நொடியில் உடைந்து போனது.
முத்து உண்மையிலேயே தவறு செய்து தோற்றாரா? அல்லது பவித்ராவிற்கு விட்டுத் தந்தாரா? அல்லது உள்குத்தாக வேறு காரணங்கள் இருக்கின்றனவா?
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 75
ஆட்டம் ஆரம்பித்து எத்தனை நாட்கள் ஆகியிருக்கின்றன என்பது வெளியில் இருக்கும் நமக்கு கூட அத்தனை துல்லியமாகத் தெரியாது போலிருக்கிறது. காலம், நேரம் எதையும் அறிய முடியாமல் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பிக் பாஸ் வீட்டாருக்கு நன்றாகத் தெரிகிறது. அவர்கள்தான் இதைக் கூர்மையாக கவனிப்பார்கள் என்பது அடிப்படையான லாஜிக். எனவே 75 நாட்கள் கடந்திருப்பதை மக்கள் கொண்டாடினார்கள்.
மக்களின் கருத்துக்கணிப்பின் படி போட்டியாளர்களில் ஒருவருக்கு ‘ரெட் கார்ப்பரேட்’ வரவேற்பு தர வேண்டுமாம். அந்த நபர் ஜாக்குலின். ரெட் கார்ப்பரேட் என்பது ஒருவருக்கு சிறப்பாக தரப்படும் வரவேற்பைக் குறிக்கும் சொல். ஆனால் பிக் பாஸ் வீட்டைப் பொறுத்தவரை இதற்கு ‘நேர் மாறு’. ‘தம்பிய நல்லா கவனிங்கடா’ என்று சினிமாவில் வில்லன் சொன்னால் அதற்கு என்ன பொருள்?
ரெட் கார்ப்பரேட் என்றவுடனே சீசன் ஒன்றில் ஜூலியை வைத்து ஓவியா செய்த அநியாயமான சேட்டைகள்தான் உடனடியாக நினைவிற்கு வருகின்றன. பயங்கரமான ரிவேன்ஜ் காட்சி அது. எதிர்மறையான கோணத்தில் தெரிந்த ஜூலி அவஸ்தைப்பட்ட போது பார்வையாளர்கள் பலரும் அதற்காக பரிதாபப்படாமல் சிரிக்கவே செய்தார்கள். இதெல்லாம் ஒருவேளை ஜாக்குலினின் மனதில் வந்து போயிருக்கலாம். எனவே சந்தோஷப்படாமல் இறுக்கமான முகத்துடன் இருந்தார்.
ஜாக்கிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு என்பது தண்டனையா?
‘யார் ரெட் கார்ப்பரேட் விரிக்க வேண்டும்?’ என்ற போது பாதுகாப்பான தேர்வாக ரயானை அவர் தேர்ந்தெடுத்தது புத்திசாலித்தனம். சவுந்தர்யா என்றால் நிச்சயம் ஏதாவது கோக்குமாக்கான டிராமா செய்திருப்பார். “ஜாக்.. Make it interesting” என்று கோர்த்து விட்டார் தீபக். மனஉறுதியோடு இருப்பவர்கள் நிச்சயம் இதை சவாலாக எடுத்துக் கொண்டு தனது எதிரியை இதற்காக தேர்ந்தெடுப்பார்கள். ஜாக்குலின் அன்ஷிதாவை தேர்வு செய்திருந்தால் ரகளையாக இருந்திருக்கும். இதனால் ஆட்டத்தின் டிராமா அதிகமாகும். ஆனால் இது இமேஜ் பிரச்சினை என்பதால் சேஃப் பிளே ஆட ஜாக்குலின் செய்ததை புரிந்து கொள்ள முடிகிறது.
‘இது தனக்கு தரப்பட்ட பெருமிதம் அல்ல. மக்களின் எதிர்ப்புணர்ச்சி ரெட் கார்ப்பரேட் வடிவில் வந்திருக்கிறதோ என்று எண்ணி தனிமையில் கண்கலங்கிய ஜாக்குலினுக்கு முத்து சொன்ன ஆறுதல் சிறப்பானது. “இத்தனை பேர் இந்த வீட்டில் நடித்துக் கொண்டிருக்கும் போது இறங்கி விளையாடிய எனக்கு இந்தத் தண்டனை தேவைதானா?” என்று வருத்தப்பட்ட ஜாக்கிடம் “இது எப்படி வெளியே இருக்குன்னு நமக்கு நிச்சயமாத் தெரியாது. அப்புறம் ஏன் எதை எதையோ நாமா நினைக்கணும்.. 11 வாரமும் தொடர்ந்து நாமினேட் ஆகி மக்களால் நீ காப்பாத்தப்பட்டிருக்கேன்னா என்ன அர்த்தம். இந்த டாஸ்க்கில் என்ன சுவாரசியம் பண்ண முடியும்ன்னு பாரு. நானா இருந்தா அப்படித்தான் பார்ப்பேன்’ என்று ஸ்போர்ட்டிவ்வாக சொன்னார் முத்து. (இப்படிச் சொன்ன முத்துவா பிற்பாடு கேப்டன் டாஸ்க்கில் அப்படி சொதப்பினார்?!) இதைப் போலவே ஜாக்கிற்கு மஞ்சரி சொன்ன ஆறுதலும் சிறப்பானது.
சொந்த அணியையே பாராட்டி பாரபட்சம் காட்டிய போட்டியாளர்கள்
‘இந்த வாரம் முழுவதும் சிறப்பாக பங்கெடுத்துக் கொண்ட இரண்டு நபர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்கிற வழக்கமான சடங்கு. வீக்லி டாஸ்க்கில் எப்படி விளையாடினார்கள் என்பதை மையமாக வைத்தே வழக்கம் போல் இந்தத் தேர்வு சுழன்றது. ஒவ்வொருவருமே தங்கள் அணியைச் சேர்ந்தவர்களையே ‘சிறந்த நபர்களாக’ சொல்லிக் கொண்டது அப்பட்டமான பாரபட்சமாக இருந்தது. எதிரணியில் ஒருவர் சிறப்பாக ஆடினால் அதை மனமார பாராட்டுவதுதான் உண்மையான ஸ்போர்ட்டிவ்னஸ். அந்த வகையில் சொன்னது மிகச்சிலர்தான் எதிர் டீம் ஆட்களைச் சொன்னார்கள்.
ஏறத்தாழ அனைவரும் சொந்த அணியின் உறுப்பினர்களையே பாராட்டிக் கொண்டார்கள். ஆட்டத்திலிருந்து முதலில் தோற்று வெளியேறிய சிவப்பு அணியின் உறுப்பினர்களான அருணும் விஷாலும் பிங்க் அணிக்கு முழுமையான ஆதரவைத் தந்தார்கள். அதை விடவும் சிறப்பாக விளையாடிய முத்து அணியை பாராட்ட அவர்களுக்கு மனம் வரவில்லை. விதிவிலக்காக சவுந்தர்யா மட்டும் முத்து, ஜெப்ரி, ரஞ்சித் என்று எதிரணி நபர்களின் பெயர்களைச் சொன்னார். அணியின் டிஃபென்சிவ் தூணாக நின்றார் என்று ரஞ்சித்தை பலரும் பாராட்டினார்கள். இதைப் போலவே துண்டு முயலையும் விட்டுக் கொடுக்காமல் போராடிய பவித்ராவிற்கும் நிறைய பாராட்டுக்கள் கிடைத்தன.
‘யாரையும் காயப்படுத்த முயற்சிக்காமல் பாதுகாப்பாக விளையாடினார்’ என்கிற நோக்கில் ‘மஞ்சுரி.. இஞ்சுரி’ என்று ரைமிங்கில் அடித்து விட்டார் முத்து. ஆகக் கடைசியில் ஜெப்ரி, முத்து, பவித்ரா ஆகிய மூவரும் சிறப்பான பங்கேற்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். கேப்டன் டாஸ்க்கில் இவர்கள் மோதுவார்கள்.
வன்மத்தை தாரளமாகக் கொட்டிய அன்ஷிதா
அடுத்தது சிறப்பாக பங்கேற்காத இரண்டு நபர்களின் தேர்வு. இதில் சவுந்தர்யாவின் பெயர் பெரும்பான்மையாக வந்தது சரியான சாய்ஸ். ஏனெனில் மற்றவர்கள் முட்டி மோதி போராடிக் கொண்டிருக்கும் போது அதிகம் வருத்திக் கொள்ளாமல் ‘என்ன வேணா நடக்கட்டும்.. நான் சந்தோஷமா இருப்பேன்’ என்கிற மோடில் இருந்தார்.
அன்ஷிதா தன் சாய்ஸை சொல்ல வரும் போது எல்லா வன்மத்தையும் வஞ்சனையின்றி கொட்டி விட்டுச் சென்றார். ஜாக், ரயான் ஆகிய இருவரோடு சேர்த்து மஞ்சரியின் பெயரைச் சொன்ன அன்ஷிதா ‘கேவலமா இருந்தது’ என்று ஜாக்குலினையும் ‘ஆடாம ஜெயிச்சோமடா’ என்று ரயானையும் ‘பொய்க்காரி’ என்று மஞ்சரியையும் வெறுப்பால் குளிப்பாட்டி விட்டுச் சென்றார்.
இதைச் சொல்லும் போது அவரது உடல்மொழி பார்க்கவே அசூயையாக இருந்தது. மோசமான பங்கேற்பாளர்களாக அன்ஷிதா மற்றும் சவுந்தர்யாவின் பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இவர்களுக்கான தண்டனை இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
‘கோல் மால்’ என்பது கேப்டன்சி டாஸ்க்கின் தலைப்பு. கோல் அடித்து வெற்றி பெற வேண்டும் என்பதால் இந்தப் பெயரை வைத்திருந்தார்கள். ஆனால் ‘கோல் மால்’ செய்யலாம் என்று முத்து தவறாகப் புரிந்து கொண்டாரோ என்னமோ. ‘இது கேப்டன் டாஸ்க் மட்டுமல்ல, 12 வாரங்களைக் கடந்து 13வது வாரத்தில் நுழைவதற்கான என்ட்ரி பாஸ்’ என்று இந்த ஆட்டத்தின் முக்கியத்துவத்தை ஆரம்பத்திலேயே அடிக்கோடிட்டுக் காட்டினார் பிக் பாஸ்.
பேக் பயர் ஆனதா முத்துவின் தியாக டிராமா?
ஆட்டம் ஆரம்பித்தது. களத்தில் ஜெப்ரி, முத்து, பவித்ரா என்று மூவர் இருந்தார்கள். எளிமையான ஆட்டம்தான். இன்னொருவர் ஏரியாவில் கோல் போடுவதோடு தன் ஏரியாவையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஜெப்ரி வேகமாக அடித்த பந்து முத்துவின் காலில் பட்டு ஜெப்ரியின் ஏரியாவிற்குள் சென்று டிவிஸ்ட் ஆனதால் ஜெப்ரி வெளியேற வேண்டிய நிலைமை.
இப்போது ஆட்டம் பவித்ராவிற்கும் முத்துவிற்கும் என்றான போது முத்துதான் எளிதில் ஜெயிப்பார் என்று பலரும் யூகித்திருப்பார்கள். பவித்ரா பந்தை எடுத்து வைத்துக் கொண்டு ஆட்டம் காட்டி விட்டு ஒரு பக்கமாக தூக்கிப் போட்ட போது, அதைத் தடுப்பதற்கான எந்தவித முயற்சியும் செய்யாமல் புன்னகைத்த முகத்துடன் அப்படியே நின்றிருந்தார் முத்து. ‘பவித்ராவிற்காக விட்டுக் கொடுத்தார்’ என்பது அப்பட்டமாகத் தெரியும்படியாக முத்துவின் பாடி லேங்வேஜ் இருந்தது.
பவித்ராவால் தனது வெற்றியை நம்பவே முடியவில்லை. மூன்று முறை இறுதி வரைக்கும் சென்று பிறகு தோற்று கேப்டன் பதவி என்பது கனவாகவே போய் விடுமோ என்கிற ஆதங்கத்தில் இருந்தவருக்கு பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும். ஆனால் இந்த வெற்றியை அவரால் கொண்டாட முடியவில்லை. தங்கத் தட்டில் வைத்து தரப்பட்டது போன்ற வெற்றி அவருக்கு நெருடலை அளிக்கவே “முத்து.. நீங்க சரியா விளையாடினீங்களா..?” என்று ஆரம்பத்திலேயே கேட்டது நேர்மை. “பாஸூ… பவித்ரா வின்னு பாஸூ” என்று கேப்டன் விஷால் அறிவிக்க காட்டமான முகத்துடன் சீனில் நுழைந்தார் பிக் பாஸ்.
“பவித்ரா.. இந்த ஆட்டம் உங்களுக்கு கன்வின்ஸ்ங்கா இருந்ததா?” என்று அவர் கேட்க “இல்லை பிக் பாஸ்” என்று பவித்ரா சொல்வதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. ‘அந்த டாஸ்க் லெட்டரை மீண்டும் படிங்க’ என்று முத்துவிற்கு ஹோம் ஒர்க் தந்த பிக் பாஸ், இந்த ஆட்டத்தின் முக்கியதுவத்தைப் பற்றி சொல்லியும் ‘கேம் ஆடிய’ முத்துவை வார்த்தைகளால் கடுமையாக விசாரித்தார். விட்டுக் கொடுத்து ஆடும் மற்றவர்களுக்கும் கடுமையான எச்சரிக்கையாக அது இருந்தது.
போட்டியாளர்களை வெளுத்து வாங்கிய பிக் பாஸ்
‘காலைலதான் 75வது நாளைக் கொண்டாடி மக்களுக்கு நன்றில்லாம் சொன்னீங்க.. உள்ளே வரும் போது என்னல்லாம் சொல்லிட்டு வரீங்க.. ஆனா வாய்ப்பு கிடைச்சதும் எல்லாத்தையும் மறந்துடறீங்க.. உங்களுக்காக 500 நபர்கள் கொண்ட குழு அல்லும் பகலுமா உழைக்குது.. நான் சமயங்கள்ல விளையாட்டா பேசினாலும் குறிக்கோள்ல இருந்து மாறினதில்லை. இதை லேசா எடுத்துக்க முடியாது. எனவே இந்த கேப்டன்சி டாஸ்க் ரத்து செய்யப்படுகிறது. இனிமேல் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் என்கிற விஷயமும் கிடையாது. ரயானுக்கு கிடைச்சதுதான் கடைசி” என்று அதிர்ச்சியான அறிவிப்பை பிக் பாஸ் சொல்ல அனைவரும் திகைப்படைந்தார்கள். தன் மீதே வெட்கம் கொண்டு குற்றவுணர்ச்சியால் கூனிக்குறுகியபடி கலங்கிய முத்து பிறகு வாய் விட்டு கதறி அழுத காட்சியைப் பார்க்க நெகிழ்வானதாக இருந்தது.
பெண்கள் அழக்ககூடிய காட்சி என்பது பரிதாபத்தை ஏற்படுத்துவது என்றாலும் அதை அடிக்கடி பார்க்க நேர்வதால் பாதிப்பு குறைவாக இருக்கும். ஆனால் ஆண் அழக்கூடிய காட்சி என்பது விதிவிலக்கானது. அதிலும் தன் உணர்ச்சிகளை அதிகம் வெளிப்படுத்தாமல் கவனமாக இருக்கும் முத்து உடைந்து அழுதது பலரையும் நெகிழ்வூட்டுவதாக இருந்தது. ‘எல்லோரும் பாவம். இந்த முறை ஒரு மன்னிச்சிடுங்க பாஸ். தெரியாம பண்ணிட்டேன்’ என்று மீண்டும் மீண்டும் அவர் மனமுருகி இறைஞ்சினாலும் பிக் பாஸ் மசியவில்லை. முத்து இப்படி அழுவதைக் காணச் சகிக்காத பலரும் ஆறுதல் கூறினார்கள். கோரஸாக மன்னிப்பு கேட்டார்கள்.
“நீ விட்டுக் கொடுத்தது நல்லாத் தெரிஞ்சது. ஆனா.. உன் மனச்சாட்சிப்படி ஆடினேன்னு சொன்னா.. ரைட்டு விடு” என்று முத்துவிற்கு ஆறுதல் சொன்னார் தீபக். நான்காவது முறையும் தன் கனவு நெருக்கத்தில் கலைந்தது குறித்து பவித்ராவும் அழுது கொண்டிருந்தார். போதாக்குறைக்கு முத்துவின் கெஞ்சுதலும் அவரை உருக்கி விட்டது. “நான்காவது முறையா தோத்தாலும் பரவாயில்லை. பெஸ்டைக் கொடுத்து தோத்திருந்தா அது சரியா இருந்திருக்கும்” என்கிற மாதிரி கலங்கிய பவித்ராவின் கோணம் சரியானது.
முத்துவின் ஸ்ட்ராட்டஜிக்கு ஸ்பேஸ் தரக்கூடாதா?
“பவித்ரா எந்தப் பக்கம் அடிப்பான்னு யோசிச்சிக்கிட்டே இருக்கும் போதே அடிச்சிட்டா..” என்று முத்து விளக்கம் சொன்னாலும் அது நம்பும்படியாக இல்லை. குறைந்தபட்சம் எதிர்பக்கமாவது அவர் பாய்ந்திருக்க வேண்டும். ‘நான் விட்டுக் கொடுத்தேன்’ என்பது நன்றாக தெரியும்படியாகத்தான் அவரது உடல்மொழி இருந்தது. பரிதாபம் பார்த்து பவித்ராவிற்கு விட்டுக் கொடுப்பதன் மூலம் தனக்கு அனுதாப மைலேஜ் அதிகமாக கிடைக்கும் என்று முத்து நினைத்தாரா? அல்லது பவித்ரா மீது உண்மையிலேயே இரக்கம் எழுந்ததா?
எது எப்படியோ, பிக் பாஸ் ஆட்டத்திற்காக தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஒப்படைத்துக் கொண்டது போல் வெறியுடன் ஆடிக் கொண்டிருக்கும் முத்து, இப்படி ‘வித்தியாசமாக’ யோசித்தது அவருக்கே பேக் பயர் ஆகி விட்டது. “நான் தோத்ததை விட நீங்க அழுததுதான் கஷ்டமா இருந்தது” என்றார் பவித்ரா.
“நான் என் வீட்டைப் பத்தி கூட தினமும் அஞ்சு நிமிஷம் மட்டும்தான் யோசிப்பேன். மத்தபடி இந்த கேமில்தான் முழுக்க முழுக்க என் கவனம் இருக்கும். என்னை மாதிரி பல இளைஞர்கள் இந்த இடத்திற்கு வரலாம்ன்ற நம்பிக்கையைத் தர வேண்டிய பொறுப்புல இருக்கேன்.. இந்த வாய்ப்பு நிறைய பேருக்கு கிடைக்காது” என்று இந்த ஆட்டத்தின் முக்கியத்துவத்தை அலட்சியமாக கையாண்டதின் குற்றவுணர்ச்சியில் விதம் விதமாக புலம்பிக் கொண்டிருந்தார் முத்து. “இந்த ஷோவிற்காக 500-க்கும் மேற்பட்டவர்கள் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்று பிக் பாஸ் சொன்ன விஷயமும் ‘டச்சிங்காக’ இருந்தது என்றாலும் அந்த உழைப்பு மதிக்கப்பட வேண்டியது என்றாலும் கடைசியில் இதுவொரு பிஸ்னஸ்தானே? சமூக சேவையா என்ன?
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். முத்து ஒருவேளை உண்மையாகவே விட்டுக் கொடுத்தது அவருடைய ஸட்ராட்டஜி என்றால் அதில் இத்தனை அதிகாரமாக பிக் பாஸ் எப்படி தலையிட முடியும்? இதற்கு முத்துவிற்கு பல்வேறு காரணங்கள் இருந்திருக்கலாம். உத்திகள் இருந்திருக்கலாம். அந்தச் சந்தேகத்தின் பலனை ஏன் அளிக்கக்கூடாது. முத்துவை தனியாக அழைத்து காரணத்தைத் தெரிந்து கொண்டு பிறகு எச்சரிக்கையை விட்டிருக்கலாம்.
கால்பந்து, கிரிக்கெட் போல பிக் பாஸ் என்பது பொதுவான விதிகளைக் கொண்டதல்ல. நேரத்திற்கு நேரம் மாறும் தன்மையைக் கொண்டது. அவற்றில் பல விதிகள் கோக்குமானதாக இருக்கும். எனில் போட்டியாளர்களும் அவற்றிற்கேற்ப தன் உத்திகளை அமைத்துக் கொள்ள பிக் பாஸ் ஏன் ஸ்பேஸ் தரக்கூடாது? தன் அதிகாரத்தை இத்தனை மூர்க்கமாக செலுத்த வேண்டுமா? விட்டுத் தந்தாலும் அதில் ஏதோவொரு ஆதாயம் இருப்பதால்தானே முத்து இதைச் செய்திருக்க வேண்டும்? அதுவும் அவரது வெற்றிக்கான இலக்கின் ஒரு தந்திரம்தானே? இந்தக் கோணமும் யோசிக்கப்பட வேண்டுமில்லையா?
முத்துவின் இந்த டிராமா பற்றி என்ன நினைக்கிறீர்கள்? கமெண்ட்டில் வந்து சொல்லுங்கள் மக்களே!..