Sriram Krishnan: SRM மாணவர், யூடியூபர், மஸ்கின் நண்பர்... ட்ரம்பின் ஆலோசகர் - யா...
BB Tamil 8 Day 77: அன்ஷிதாவின் அவஸ்தையும் அழுகையும்; பவித்ராவுக்கு விட்டுக்கொடுத்தாரா முத்து?
பிக் பாஸ் தமிழ் வரலாற்றில் ரஞ்சித் அளவிற்கு ஒரு மர்மமான போட்டியாளர் இருந்திருப்பாரா என்று தெரியவில்லை. என்னதான் ஒருவர் நல்லவராக நடிக்க முயன்றாலும் தொடர்ந்த கண்காணிப்பும் சிக்கல்கள் நிறைந்த டாஸ்க்கும் சிறிதாவது காட்டிக் கொடுத்து விடும். அந்த வகையில் ரஞ்சித் சமநிலை தவறிய தருணங்கள் மிகச் சொற்பமானவை.
ரஞ்சித் இயல்பிலேயே கனிவும் பிரியமும் அன்பும் நிறைந்த மனிதராகவே தோன்றுகிறது. மாறாக, தன்னை கவனமாக ஒளித்து வைத்துக்கொண்டு நடித்தார் என்றால் அதுதான் ஆகச்சிறந்த நடிப்பு.
பிக் பாஸ் வீட்டில் என்ன நடந்தது? - நாள் 77
விஷாலின் கேப்டன்சி பற்றி ரயான் விமர்சித்துக்கொண்டிருக்க அந்த உரையாடலில் மஞ்சரியும் பவித்ராவும் இருந்தார்கள். ‘ராணவ் ஓகே என்று டாக்டர் சொன்னார் என்பதை விஷால் பொதுவில் சில முறை அழுத்தமாக சொன்னார். வீக்கெண்ட்ல இதைப் பத்தி தெரியும்ன்னு கூட சேர்த்துக்கிட்டார்’ என்று ரயான் சொல்வதை வைத்துப் பார்க்கும் போது ‘ராணவ் நடித்து மாட்டிக் கொள்ளட்டும்’ என்று விஷால் உள்ளூற விரும்பினாரா?
‘அவரோட கேப்டன்சி ஆரம்பத்துல நல்லாயிருந்தது. ஆனா போகப் போக சரியில்லை. குறிப்பா டாஸ்க்ல நிறைய சொதப்பினார்.’ என்று ரயான் சொன்னது ஆருடம் போல எபிசோடிற்குள் பலித்தது.
விசே என்ட்ரி. கோட், சூட், கூலிங் கிளாஸ் என்று மாஃபியா டான் மாதிரி பந்தாவாக வந்தார். “எதைக் கேட்டாலும் heat of the moment-ல பண்ணிட்டதா சொல்றாங்க. அவங்களுக்குப் புரிய வைப்போம்’ என்றபடி உள்ளே சென்றார். ‘சட்டை மேல எத்தனை பட்டன்?’ என்கிற மாதிரி அருணைப் பாராட்டினார்.
“இந்த வீட்டில் யார் அதிகமாக கவனத்தை ஈர்க்கும்படியாக நடந்து கொள்கிறவர்’ என்பது முதல் கேள்வி. இதில் பெரும்பாலும் ஜாக்குலினின் பெயர் உச்சரிக்கப்பட்டது. முத்து மற்றும் மஞ்சரியின் பெயரை ரயான் சொன்ன போது ‘இல்ல.. எனக்குப் புரியல..’ என்ற விசே, அதை விஷாலிடம் கோத்து விட்டார். தனக்குப் புரியும் வரை சம்பந்தப்பட்ட போட்டியாளரிடம் நேரடியாகப் பேசுவதுதான் முறை. மாறாக இன்னொருவரை கோத்து விட்டு ‘புரியும்படி அவருக்குச் சொல்லுங்க’ என்கிற பிராக்ஸி முறை தவறானது. “டாஸ்க் சமயங்கள்ல நான் ரொம்ப நல்லவன்னு காட்டிக்க அருண் ரொம்பவும் முயல்வார். வெளில எப்படித் தெரியறோம்ன்ற கவலை இருக்கும்” என்று அருணிற்கான காரணத்தைச் சொன்னார் மஞ்சரி.
‘கெட்ட பய சார் அவன்’ - ராணவ்வின் சுயபெருமிதம்
முத்துவைச் சொன்ன ராணவ், அந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளப்படாததால் தன்னையே சொல்லிக் கொண்டு ‘தன்னை நிரூபிக்க அவன் போராட்டிடே இருக்கான். கெட்ட பய சார் அவன்’ என்கிற மாதிரி third person-ல் சொன்னதற்கு ‘அந்தப் பையனுக்கு வாழ்த்துகள் சொன்னேன்னு சொல்லிடுங்க’ என்று விசே சொன்னது சுவாரசியமான காட்சி. டல்லாக இருந்த முத்துவை விசே உற்சாகப்படுத்த, ‘இந்த வீட்லயே attention seeking queen என்றால் அது சவுந்தர்யாதான். இன்னொருத்தன் ராணவ். ‘தட்டில் சோறு போடட்டுமா.. அட்டென்ஷன் வேணுமான்னு கேட்டால் ரெண்டாவதைத்தான் சொல்லுவான்” என்று வழக்கம் போல் நகைச்சுவையுணர்வு பொங்க வித்தியாசமாகப் பேசினார் முத்து.
ஜாக்குலினுக்கு அடுத்தபடியாக முத்துவின் பெயர் அதிகமாக வந்தது. “அவசியமான இடங்களில் என் கருத்தை நிச்சயமாகச் சொல்லுவேன். அதுக்குத்தானே இந்த வீட்டிற்கு வந்திருக்கோம்.. ஒருத்தர் அழும்போது ஆறுதல் சொல்றதுல என்ன தப்பு?” என்கிற மாதிரி ஜாக்குலின் விளக்கம் கொடுக்க “ஒரு டிஸ்கஸன் சரியா போச்சுன்னா நான் உள்ளே வரவே மாட்டேன்.” என்றார் முத்து. போட்டி நிறைந்த இந்த வீட்டில் எதையாவது செய்து காட்டிக் கொள்வதுதான் முக்கியமான பங்கு. எனவே ராணவ் போல எல்லோரும் தன்னையே சொல்லிக் கொள்வதுதான் சரியாக இருக்கும். அது மிகையாகவோ செயற்கையாகவோ மாறினால்தான் பிரச்சினை.
‘ஜவுளிக்கடை பொம்மையா ஓனரு?” - விமர்சனங்களுக்கு விசே பதில்
பிரேக் முடிந்து திரும்பிய விசேவிடம் ஒரு பெண்மணி கேள்வி கேட்டார். “வெளில உங்களையும் டிரோல் பண்றாங்க. யாராவது எலிமினேட் ஆனா உங்களைத் திட்டறாங்க. அதையெல்லாம் பார்க்கறீங்களா?” என்று அவர் கேட்க “அதெல்லாம் எங்களுக்கு புரமோஷன்தான். இதெல்லாம் நடக்கும். விஜய்சேதுபதி வெளியேறினார்ன்னு கூட போடறாங்க. இதையெல்லாம் பார்த்துட்டு இருந்தா நம்ம வேலையை பார்க்க முடியாது. நம்ம மனச்சாட்சிக்கு அது தெரியும். ஒருத்தர் எலிமினேட் ஆகறதுல என் பங்கு எதுவும் கிடையாது. ஜவுளிக்கடை வெளில நிக்கற பொம்மையா ஓனரு? இங்க பெரிய டீம் இருக்கு. ரவீந்தரும் ஆனந்தியும் வெளிய போனது எனக்கே ஷாக்கிங்காதான் இருந்தது. என்ன சார். பண்றது.. ஓட்டு அந்த மாதிரி வந்திருக்குன்னு சொன்னாங்க. இதுல என் தனிப்பட்ட கருத்து எதுவுமில்ல. உங்களைத்தான் புரிஞ்சுக்கவே முடியலை. சுமாரா ஆடறவங்களைக் கூட வீட்ல வெச்சிருக்கீங்க” என்று இதற்கு விளக்கம் சொல்லி முடித்தார் விசே.
வீட்டிற்குள் நுழைந்த விசே ‘ரயான் நீங்க ஒரு தீர்க்கதரிசி. அடுத்ததாக கேப்டன்சி பத்திதான் பேசப் போறோம்’ என்று கிண்டலடித்து விட்டு விஷாலின் கேப்டன்சி பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். “உன் கிட்ட ஸ்டார்ட்டிங்லாம் நல்லாயிருக்குது. ஆனா ஃபினிஷிங் சரியில்லையேப்பா” என்கிற மாதிரியே பலரும் கருத்து சொன்னார்கள். அன்ஷிதாவிடம் காட்டிய பாரபட்சம், ஜாக்குலின் மற்றும் பவித்ராவை உரத்த குரலில் அதிகாரமாகஅழைத்து விட்டு அன்ஷிதாவை ‘அசின்’ என்று மிருதுவாக அழைத்தது. இந்த விஷயம் மட்டும்தான் விஷாலின் மீது பிரதான குற்றச்சாட்டாக பெரும்பாலோனோரால் சொல்லப்பட்டது.
பிக் பாஸ் வீட்டில் அன்ஷிதாவிற்கும் விஷாலுக்கும் இருக்கிற நட்பு பற்றி தெரியும். தர்ஷிகா சென்ற பிறகு இந்த நட்புணர்ச்சி கூடி விட்டது. தர்ஷிகாவின் லல் டிராக் ஆரம்பித்த போது ‘உனக்கு பொசசிவ்வா இருக்கா?’ என்று கூட அன்ஷிதாவிடம் ஆனந்தி நேரடியாக கேட்டு விட்டார். ஆக, இப்படியொரு சூழலில் விஷால் அன்ஷிதாவிடம் காட்டும் பாசமும் பாரபட்சமும் வேறு கோணத்தில் பார்க்கப்படலாம் என்கிற சங்கடம் அன்ஷிதாவின் முகத்தில் தெரிந்தது. எனவே அது குறித்த அவஸ்தையுடனும் அழுகையுடனும் அவர் இருந்தார்.
விஷாலுக்கு நெருக்கடி தந்தாரா விசே?
விஷாலும் அன்ஷிதாவும் மற்றவர்களின் புகார்களால் அதிகமாக சங்கடம் அடைவதைப் பார்த்த விசே, கேப்டனிடம் தெரிந்த நல்ல விஷயங்களைப் பற்றி கேட்க நிறைய விஷயங்கள் வெளியே வந்தன. எனில் அன்ஷிதாவிடம் காட்டிய பாரபட்சம் மட்டுமே பெரிய மைனஸ். ஆனால் இதையும் கூட விஷாலால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ஆனால் விசேவின் கிடுக்குப் பிடியாலும் சூழலின் அழுத்தமும் தாங்காமல் அரைமனதுடன் தலையாட்டினார். “இத்தனை பேருமா உங்களுக்கு எதிர்ப்பா பேசுவாங்க.. நிறைகளை கேட்கும் போது இனிமையா இருந்ததுல.. அதை ஏத்துக்க முடிஞ்சதுல.. அப்ப இதையும் ஏத்துக்கங்க” என்று நெருக்கடி தந்தார் விசே.
பிரேக் சமயத்தில் அருணிடம் இதைப் பற்றி புலம்பினார் விஷால். “டாஸ்க் சமயத்தில் சூழலுக்கு ஏற்ற மாதிரி செயல்பட வேண்டியிருந்தது. ஜாக்குலின் கிட்ட கத்தினதை மட்டுமே வெச்சு மொத்தமா பிரேம் பண்றாங்க” என்று அவர் அனத்த, கடந்த முறை அருணிற்கு ஆன விஷயம் இப்போது விஷாலுக்கும் நடந்தது. “என்ன சார்.. அவ்வளவு நேரம் பேசினோம்.. அப்புறமா உள்ளே போயிட்டு உங்க தரப்பை மீண்டும் சொல்றீங்க. அப்ப நாம பேசினது என்ன உபயோகம்?” என்கிற மாதிரி விசே மடக்க அடிபட்ட முகத்துடன் ‘ஸாரி’ சொன்னார் விஷால்.
விஷால் பாரபட்சம் காட்டியதாக பலரும் நம்பட்டும். ஆனால் ‘நான் அப்படி செய்யவில்லை’ என்று விஷால் உள்ளூற நம்புவது ஒருவேளை உண்மையாக இருந்தால்?... ராணவ்விற்கு அடிபட்ட மாதிரிதான் இதுவும். பலரும் சாட்சியம் சொல்வதால் அது உண்மையாகி விடாது.
ஒருவரே பிளேயராகவும் நடுவராகவும் இருக்க முடியுமா?
இது போன்ற சமயங்களில் சந்தேகத்தின் பலனை அளித்து “ஓகே..விஷால். மெஜாரிட்டியா சொல்றாங்க. ஆனா உங்களால மட்டும் ஒப்புக்க முடியல.. உங்க மனச்சாட்சிக்குத் தெரியும். வெளில இருந்து பார்க்கற மக்களுக்கும் தெரியும்..” என்று விட்டு விடுவதுதான் ஒருவகையில் சரியான அணுகுமுறையாக இருக்க முடியும். மாறாக ‘தீர்ப்பு எழுதப்பட்டாகி விட்டது. இனிமேல் அப்பீலுக்கு வாய்ப்பில்லை’ என்கிற மாதிரி விசே நெருக்கடி தருகிறார். விஷாலுக்கு மட்டுமல்ல, பலருக்கும் கூட இந்த அநீதி நிகழ்கிறது. கமலாக இருந்தால் இதை வாழைப்பழ ஊசியாக வலிக்காமல் அதே சமயத்தில் அழுத்தமாக குத்தி விடுவார்.
ஒருவர் கேப்டனாக இருக்கும் அதே சமயத்தில் டீம் மெ்பராகவும் களத்தில் இறங்கி ஆடுவது என்பது முரணாக இருக்கும் டூயல் ரோல். அப்போது அவர் சார்ந்திருக்கும் அணிக்குச் சார்பாகத்தான் மனம் தன்னிச்சையாக சாய்ந்து விடும். இந்த லாஜிக்கில் பார்த்தால் அன்ஷிதா டீமுடன் கை கோர்த்திருந்த விஷால், அந்தப் பக்கம் பாரபட்சம் காட்டியது இயல்பானது. (நியாயமானதல்ல). டாஸ்க் சமயத்தில் மட்டும் பிக் பாஸ் பொறுப்பை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒருபோதும் அவர் அப்படிச் செய்ய மாட்டார். ஒரு போட்டியின் விடையைக் கூட போட்டியாளரை வைத்தே அறிவிக்கச் சொல்வதை கவனித்திருக்கலாம். அப்படி கோர்த்து விட்டால்தான் அதிக கசமுசாக்கள் ஏற்படும் பிக் பாஸின் லாஜிக்.
அடுத்தபடியாக முத்துவின் வழக்கு. “உண்மையைச் சொல்லுங்க” என்று முத்துவை எழுப்பினார் விசே. “நான் விட்டுக்கொடுக்கவேயில்லை. கேப்டன் ஆயிடணும்னு உறுதியாக இருந்தேன். ஆனா அந்தச் சமயத்துல யோசனைகள் பல போயிட்டே இருந்ததுல கவனம் சிதறிட்டேன். ‘பவித்ரா நாலு முறையா ஆக முயற்சி செய்தா.’ன்னு என்னையே சமாதானம் பண்ணிக்கத்தான் சொன்னேன்’ என்று என்னதான் திறமையாக முத்து வாக்குமூலம் தந்தாலும் இந்த விஷயத்தில் வேறு ஏதோவொரு நோக்கத்தோடுதான் நடந்து கொண்டார் என்று படுகிறது.
முத்துவிற்கு மட்டும் செக்மேட் வைத்தாரா பிக் பாஸ்?
“டாஸ்க்குன்னு வந்தா முத்து தீயா வேலை செய்வாரு. இதை நம்ப முடியலை.” என்றே பலரும் கருத்து சொன்னார்கள். “அவர் டிஸ்டிராக்ட் ஆன மாதிரிதான் தெரியுது” என்று சவுந்தர்யா ஆரம்பிக்க “அப்ப முத்து சொல்றது உண்மையா?” என்று விசே மடக்க “அவர் மனச்சாட்சிக்குத்தான் தெரியும்” என்று எஸ்கேப் ஆனார் சவுண்டு. “இந்த ஆட்டத்தின் மீது மரியாதையோ பயமோ இருந்தால் இப்படி செஞ்சிருக்க மாட்டீங்க.. நீங்க எழுந்துக்கும் போது எத்தனை பேர் கைதட்டறாங்க பார்த்தீங்களா.. அத்தனை மதிப்பையும் உடைக்கறீங்க. தப்பு செஞ்சது நீங்க. ஆனா தண்டனை பவித்ராவிற்கு” என்று முத்துவை காட்டமாக எச்சரித்தார் விசே.
மறுபடியும் அதையேதான் சொல்ல வேண்டியிருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் எத்தனையோ விதமான பாரபட்சங்களும் தியாக டிராமாக்களும் நடக்கின்றன. உதாரணத்திற்கு ஜெப்ரிக்கு கிடைத்த NFP பற்றி சொல்லலாம். பிக் பாஸ் எப்படி வரைமுறையின்றி விதம் விதமாக டாஸக்குகளை அமைக்கிறாரோ, அவற்றை எதிர்கொள்ளும் ஸ்பேஸை போட்டியாளர்களுக்கும் தர வேண்டும்.
தான் தோற்க வேண்டும் என்பதற்காக முத்து இதை நிச்சயம் செய்திருக்க மாட்டார். பவித்ராவிற்கு விட்டுத்தருவதின் மூலம் பாராட்டு மைலேஜ் கிடைக்கும் என்று கணக்குப் போட்டிருக்கலாம். தான் கேப்டன் ஆனால் தன் மீது கொலைவெறியுடன் பாய்வார்கள் என்பதால் தப்பிக்க நினைத்திருக்கலாம். தான் மக்களால் எப்படியும் காப்பாற்றப்படுவோம் என்கிற தன்னம்பிக்கை காரணமாக கேப்டன் பதவியை உதறியிருக்கலாம். அல்லது கட்டக் கடைசியாக முத்துவே சொல்வது போல உண்மையாகவே அந்தச் சமயத்தில் கவனம் சிதறியிருக்கலாம். மற்ற நேரங்களில் கள்ள மௌனமாக இருந்து விட்டு முத்து விஷயத்தில் மட்டும் மிகையாக எதிர்வினை செய்திருப்பது பிக் பாஸின் ‘ஸட்ராட்டஜி’ என்றுதான் சொல்ல வேண்டும்.
ரஞ்சித் நல்லவரா, கெட்டவரா - தெரியலையேப்பா….
அடுத்தபடியாக எவிக்ஷன் கார்டை சரக்கென்று உருவி காட்டினார் விசே. அது ‘ரஞ்சித்’. “முத்து எதை வேணா பண்ணிட்டுப் போகட்டும். ஆனா என் பேரையும் இழுத்து விட்டாரு. அதுதான் வலிக்குது’ என்று பவித்ரா புலம்பியது நியாயமான அனத்தல். “அன்ஷிதாவை எனக்குப் பிடிக்காது. ஆனா டாஸ்க்குன்னு வந்தா விளையாடுவேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தார் மஞ்சரி. ரஞ்சித்தின் வெளியேற்றத்திற்கு யாரும் வெளிப்படையாக கலங்கவில்லை. ‘பாவம்ப்பா. நல்ல மனுஷன்’ என்கிற பெருமூச்சு மட்டுமே இருந்தது.
மேடைக்கு வந்தார் ரஞ்சித். முன்பே தகவல் சொல்லி அழைத்து வந்திருப்பார்கள் போலிருக்கிறது. பார்வையாளர்கள் மத்தியில் ரஞ்சித்தின் மனைவி நிர்மலா ராமன் அமர்ந்திருக்க, அதைப் பார்த்து இனிமையான ஜெர்க்கை அடைந்தார் ரஞசித். இருவரும் பார்வையாலேயே பேசிக் கொண்டதும் கண்கலங்கியதும் ‘க்யூட்’ ஆன காட்சி.
“ஒரு வொர்க்ஷாப் போயிட்டு வந்த மாதிரி இருக்கு. 75 நாட்களுக்கும் மேல இருந்தது ஒரு கனவு மாதிரி இருக்கு. வயது முன்னே பின்னே இருந்தாலும் உள்ளே இருந்தவங்க பாரபட்சம் இல்லாம பழகினாங்க. பாசம் காட்டினாங்க. குறுகிய காலத்தில் ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கேன். வெளில ஆயிரம் வசதிகளோட வாழ்ந்துட்டு அதில் இருந்து விலகி வேறு மனிதர்களோடு வாழ வேண்டிய சூழல் வித்தியாசமான அனுபவமா இருந்தது. ‘காலம் போயிடுச்சு’ன்னு இப்ப தோணுது” என்று ஆத்மார்த்தமாக பேசினார் ரஞ்சித். ‘டைம் இல்ல-ன்ற செய்தியை மட்டும் உள்ளே சொல்லிடுங்க சார்” என்று அவரை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார் விசே.
“உங்க ஆற்றலுக்கு முன்னாடி நான் ஒரு மாணவன். நான் தோத்து வெளியே போறேன்னு நெனக்கலை. உங்க அன்பையெல்லாம் சேமிச்சிட்டு போறேன். நேரம் இல்ல கண்ணா.. நெருப்பா விளையாடுங்க. அதை நம்பித்தான் உங்க வீட்ல அனுப்பி வெச்சிருப்பாங்க. வெற்றிக்காக காத்துட்டு இருப்பாங்க. அவங்க நம்பிக்கையை காப்பாத்துங்க” என்று மூத்தோராக மாறி அறிவுரை சொன்னார் ரஞ்சித்.
ரஞ்சித்திற்கு விடை கொடுத்து அனுப்பினார் விசே. பிறகு வீட்டிற்குள் வந்து ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ பாணியில் விஷாலிடம் ‘ஐ லவ் யூ மேன்’ என்று ஆறுதல் மருந்து போட்டார். “முத்து.. இந்த மாதிரி கெஞ்சாதீங்க. பார்க்க நல்லால்லை” என்று அவருக்கும் ஆறுதல் சொல்லி விட்டு விடைபெற்றார்.
“ஹப்பாடா.. இப்பத்தான் நிம்மதியா இருக்கு” என்று விஷால் பெருமூச்சு விட, அன்ஷிதா ஒருவகையான மனஉளைச்சலால் தவித்துக் கொண்டிருக்கும் காட்சியோடு எபிசோடு நிறைந்தது. விஷால் அன்ஷிதாவிடம் பாசம் காட்டுகிறார் என்கிற புகார் வேறு மாதிரியாக வெளியே சென்று விடும் என்று அவர் கவலை கொள்கிறாரா?!
போட்டியாளர்களின் எண்ணிக்கை குறையக் குறைய ஆட்டத்தின் அடர்த்தி அதிகமாகும். ‘அடுத்த வாரம் டாஸ்குகள் கடுமையாக இருக்கும். தயாரா இருங்க’ என்று விசேவும் டிப்ஸ் தந்து விட்டுச் சென்றிருக்கிறார். இனி என்னவாகும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.