Rain Alert: கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விட...
BB Tamil 9 Day 15: `ஃபீல் பண்ற அளவுக்கு அவன் ஒர்த் இல்ல' - தொடரும் அழுகை
பிக் பாஸ் வீட்டிற்குள் தீபாவளி கொண்டாட்டம் நடந்தது. நாமினேஷன் சடங்கு நடந்தது. பைசன் திரைப்படக் குழு பிரமோஷனிற்காக வந்தார்கள். அவ்வளவுதான்.
மறுபடியும் அதேதான். ‘அதுல ஒண்ணும் இல்ல. கீழே போட்ரு’ காமெடிதான். ஏதாவதொரு அதிரடி மாற்றம் செய்யாமல் இந்த சீசனில் சுவாரசியம் நிகழ வாய்ப்பில்லை.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 15
தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்கான பொருட்கள் ஸ்டோர் ரூம் வழியாக வந்தன. பிக் பாஸ் வீட்டின் காமிராக்களை திவாகர் பயன்படுத்திக் கொள்வதுபோல வேறு யாரும் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதில்லை. மணிக்கொருமுறை சோஷியல் மீடியா வீடியோக்களாக போட்டுக் கொண்டிருக்கிறார். உடல் முழுவதும் எண்ணைய் தடவி பாடி பில்டர் போல் அவர் போஸ் தந்ததை அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் பார்த்திருந்தால் மிரண்டு போயிருப்பார்.
துஷாரும் ஆதிரையும் ஓடிப் பிடித்து விளையாடியதில் ஆடம்பரமான பொருள் உடைந்து சிதறியது. துஷாரிடம் வழக்கம் போல் ரகசியம் பேசிய அராரோ, பிறகு தனிமையில் சென்று மூசுமூசுவென்று அழுதார். (இதையே ஒரு வேலையா வெச்சிருப்பாங்க போல!). அது கம்ருதீன் குறித்தா?! “இவ்ளோ ஃபீல் பண்ற அளவுக்கு அவன் ஒர்த் இல்ல” என்று சொல்லிக் கொண்டிருந்தார் ஆதிரை.
உடல் முழுவதும் எண்ணைய் தடவிக் கொண்டு கடல் கன்னி மாதிரி படுத்திருந்த திவாகரைப் பார்த்து “ஆமை ஒண்ணு கடல்ல இருந்து தப்பிச்சி வந்துடுச்சு” என்று கிண்டலடித்தார் வினோத். வறண்டு போயிருக்கும் பிக் பாஸ் வீட்டில் வினோத் செய்யும் காமெடிகள்தான் சிறிதாவது ஆறுதலைத் தருகின்றன. ஆதிரையை வெறுப்பேற்றுவதற்காகவோ, என்னவோ, பாருவிடம் நெருக்கம் காட்டுகிறார் கம்ருதீன். பாரு இதை சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார். (எதிரிக்கு எதிரி நண்பன் ஃபார்முலா!)
“ஏதாவது செஞ்சு இந்த சீசனை காப்பாத்துங்க” - பிக் பாஸ் கதறல்
சபையைக் கூட்டிய பிக் பாஸ், புதிய தலைவரான கனிக்கு வாழ்த்து சொல்லி ‘துஷார் பயதான் சொதப்பிட்டான். நீங்களாவது சிறப்பா பண்ணுங்கம்மா’ என்பது போல் சொல்லி ஆசிர்வாதம் செய்தார். “விக்ரம் கிட்ட இருந்து நிறைய காமெடி வரணும். எஃப்ஜே, வினோத் கிட்ட இருந்து நிறைய ஒரிஜனல் பாடல் வரணும். சபரி, பிரவீன் கிட்ட இருந்து நிறைய எண்டர்டெயின்மென்ட் வரணும்.. அதுக்கெல்லாம் நீங்கதான் பொறுப்பு” என்று கனியிடம் சொன்ன பிக் பாஸ் “திவாகரைப் பத்தி ஒண்ணுமே சொல்ல வேணாம்” என்றது குறும்பு. நடிப்பு அரக்கன், ஒவ்வொரு கணமும் நடிப்புக் கலையை கொட்டிக் கொண்டே இருப்பதால் அதுவே போதும் என்று பிக் பாஸ் நினைத்திருப்பார்.

இந்த சீசனில் எந்த சுவாரசியமும் நிகழவில்லை என்பது பிக் பாஸிற்கே தெரிந்திருக்கிறது. “ஏதாவது செய்ங்கய்யா…” என்று காலில் விழாத குறையாக போட்டியாளர்களிடம் அதிகாரமாக கெஞ்சுகிறார். “ஏன் சிலர் பேரை மட்டும் சொன்னேன்னு பார்க்கறீங்களா.. ஏன்னா.. மத்தவங்க யாருமே என்ன செய்றீங்கன்னு எனக்கும் புரியலை.. மக்களுக்கும் புரியல..” என்று பிக் பாஸ் சொன்னது அக்மார்க் வாக்குமூலம்.
தலைவர் ஆனதும் சுடச் சுட அணிகளைப் பிரித்தார் கனி. சூப்பர் வீடு அலார்ம் சத்தம் கேட்ட அரை மணி நேரத்துக்குள்ள வெளியே வரணும் என்றார். அப்பதான் ஏதாவது சம்பவங்கள் நடக்கும். தூங்கிக்கிட்டே இருந்தா எப்படி நடக்கும்? சிறப்பு ஆலோசகர் பதவி விக்ரமிற்கு தரப்பட்டது. இரு வீட்டாருக்கும் சிறப்பு தூதுவராக அவர் இருப்பார்.
நடிப்பு அரக்கனுக்கு தீனி போட ஹாலிவுட்டால் மட்டுமே முடியும்
பிக் பாஸ் உசுப்பிவிட்டதால் ஏதாவது கலை நிகழ்ச்சி நடத்தலாம் என்று சூப்பர் வீடு முடிவு செய்தது நல்ல விஷயம். ஆனால் ஆரம்பத்திலேயே சண்டை. வியன்னா சொல்லிக்கொடுத்த வசனத்தை ரீப்பீட்டாக சொல்ல மறுத்த திவாகர் “ஒரு நடிப்பு அரக்கனுக்கு தீனி போடும் தகுதியோ திறமையோ உனக்கு கிடையாது. என்னையெல்லாம் ஹாண்டில் பண்ண நோலனால் மட்டுமே முடியும்” என்று கெத்தாக நடிக்க மறுக்க, அதற்கும் மனம் புண்பட்டு அழுதார் வியன்னா. “உனக்கு நடிக்கத் தெரியலைன்னு சொல்லு. பாவம் தங்கத்த அழ வெக்கற” என்று திவாகரை வெறுப்பேற்றினார் வினோத்.

இரண்டு வீடுகளில் பிக் பாஸ் வீடுதான் அதிகமாக கன்டென்ட் தருகிறது என்று பார்வையாளர்கள் பதில் அளித்திருக்கிறார்களாம்.
பிக் பாஸ் வீட்டிலிருந்து இரண்டு பேர் சூப்பர் வீட்டிற்குச் செல்லவேண்டிய நேரம். எஃப்ஜே, சபரி ஆகிய இருவரும் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சூப்பர் வீட்டிலிருந்து பிக் பாஸ் வீட்டிற்கு எந்த இருவர் செல்லலாம் என்பதை இவர்கள்தான் முடிவு செய்வார்கள். அதற்கு ஒரு டாஸ்க்கில் ஜெயிக்கவேண்டும். காமா சோமா என்று நடந்த டாஸ்க்கில் பிக் பாஸ் வீடு வென்றதால், பாரு மற்றும் வியன்னாவை நாடு கடத்த முடிவு செய்தார்கள். சபரிக்கும் பாருவிற்கும் இடையே ஒரு பனிப்போர் நடந்து கொண்டிருப்பதால் ‘என்னை பழி வாங்கிட்டல்ல’ என்று வெளியே ஜாலியாக திட்டினாலும் உள்ளுக்குள் குமைந்திருப்பார் பாரு.
நாமினேஷனில் இருந்து எஸ்கேப் ஆன பாரு
அடுத்ததாக ‘நாமினேஷன் ஃப்ரீ பாஸ் யாருக்கு?’ என்று முடிவு செய்யப்பட வேண்டிய நேரம். சூப்பர் வீட்டில் இருப்பவர்கள் இதற்காக சற்று நேரம் அடித்துக் கொண்டு திவாகர் மற்றும் எஃப்ஜேவை தேர்ந்தெடுத்தார்கள். (திவாகர் எல்லாம் மக்கள் ஆதரவில் ஃபைனல் வரை வந்து விட மாட்டாரா?’ அவருக்கு எதற்கு பாஸ்?!)
நாமினேஷன் சடங்கு துவங்கியது. இதில் கன்னா பின்னாவென்று பரஸ்பரம் குத்திக் கொண்டதில் பட்டியல் வெளியானது.

ஆதிரை, துஷார், கலை, பிரவீன், சுபிக்ஷா, ரம்யா, வியன்னா மற்றும் அரோரா ஆகியோர் இந்த வாரம் நாமினேஷனில் இருப்பார்கள். “என்னது.. நான் எஸ்கேப்பா?... என்னாலேயே நம்ப முடியலை” என்று துள்ளிக் குதித்தார் பாரு.
சாதிய ஆட்டத்திற்கு இடையே ஒரு கபடி ஆட்டம் - பைசன்
பைசன் காளமாடன் திரைப்படக் குழு உள்ளே வந்தது. ஹீரோ துருவ் விக்ரம், ஹீரோயின் அனுபமா, ரஷிதா, இசையமைப்பாளர் நிவாஸ் பிரசன்னா, நடிகர் அருவி மதன் ஆகியோர் உள்ளே வந்தார்கள். ரஷிதாவிடம் பட்லர் இங்கிலீஷில் பேசி இன்ஸ்பயர் செய்ய முயன்றார் திவாகர். அதைப் பார்த்து வினோத்தும் அதே போல் முயல “எனக்கு தமிழ் நல்லா தெரியும்’ என்றார் ரஷிதா. “ஒரு குச்சி..’என்று வினோத் ஆரம்பிக்க “நான் கொச்சி இல்ல” என்று ரஷிதா சொல்ல “ஒரு குச்சி.. ஒரு குல்பி..ன்னு பாட்டு இருக்கு” என்று வினோத் சொல்ல ஒரு எல்லை தாண்டிய மொழி காமெடி.

துருவ் பிக் பாஸ் சீசன் 3-ன் ரசிகர் போலிருக்கிறது. ‘துருவ் இதுவரைக்கும் பேசவே இல்லையே?” என்று பிக் பாஸ் விசாரிக்க, சாண்டி பாணியில் ‘ஸாரி குருநாதா” என்றார். “இந்தப் படத்திற்காக திருநெல்வேலியில் இரண்டரை வருடங்கள் வாழ்ந்தேன். ஆடு, மாடு மேய்க்கறது. ஏர் பூட்டி உழறது.. கபடி ஆட்டம்ன்னு நிறைய உழைச்சேன்” என்றார் துருவ். “எந்த விஷயத்திற்காக ரொம்ப கஷ்டப்பட்டீங்க?” என்று நிருபர் போல் பாரு கேட்க “எதுவும் கஷ்டம் கிடையாது. எல்லாமே கத்துக்கறதுக்கான பயிற்சிதான்” என்று துருவ் சொன்னது நல்ல பதில்.
பிறகு பைசன் திரைப்படத்தின் டிரைய்லர் வெளியிடப்பட்டது. சாதிய அரசியல் மற்றும் பகைமைகளில் இருந்து தப்பித்து தன் இலக்கை நோக்கி ஓடிக் கொண்டேயிருக்கும் ஒரு சாமானிய கிராமத்து இளைஞனின் பயணத்தை இந்தப் படம் விவரிக்கிறது. விளையாட்டிற்குள்ளும் அரசியல் கலந்திருக்கும் கொடுமையை விவரிக்கும் இன்னொரு தமிழ்த் திரைப்படம்.
பிக் பாஸ் வீட்டோடு இணைந்து பைசன் டீம் பட்டாசு கொளுத்தி தீபாவளியைக் கொண்டாட எபிஸோட் நிறைவு.