Dude: ``அவருக்கு உரிய மரியாதை கொடுக்கலைனா தப்பு!" - தன்னுடைய உதவியாளருக்கு பிரதீ...
BB Tamil 9 Day 9: சமையல் ஸ்ட்ரைக், கலவரம் செய்த பாரு; ரொமான்ஸ் வழக்குகள் வாங்கும் துஷார்!
“பேசிட்டே இருந்தா எப்படி, அடிச்சுக் காமி” என்கிற காமெடியைப் போலவே இதுவரை வாயால் சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்களை ‘பொம்மை’ டாஸ்க்கை இரண்டாவது வாரத்திலேயே ஆரம்பிப்பதன் மூலம் அடிதடி, ரத்தக் காயம் ஏற்படுகிறதா என்று பிக் பாஸ் எதிர்பார்க்கிறார் போல.
பீங்கான் பொருள் ஒன்று இரண்டு துண்டுகளாக வாயைப் பிளந்து உடைந்திருக்க, அந்தக் கேஸையும் பாரு மேல் எழுத ஆரம்பித்து விட்டார்கள். “நான் உடைக்கலை.. விசாரணை கமிஷன் வைங்க. ப்ரூவ் ஆனா குத்தத்தை ஏத்துக்கறேன்” என்று சுப்ரீம் கோர்ட் லாயருக்கே சவால் விடுவது போல சட்டம் பேசினார் பாரு.
‘என் மேலயா பழி போடறீங்க? … வெக்கறேன்டா உங்களுக்கு ஆப்பு’ என்று நினைத்துக் கொண்டாரோ என்னமோ, மம்மி சுட்டுக் கொடுக்கும் எக்ஸ்ட்ரா தோசைக்காக வந்து உட்காரும் கடைசி தம்பி மாதிரி, கிச்சன் மேடையில் ஏறி குத்த வைத்தார் பாரு.

“இது மாவு பிசையற இடம்.. இங்கயா வந்து உக்காருவாங்க. உனக்கு ஏதாவது இருக்கா… சூப்பர் டீலக்ஸ் ஆளுங்கன்னா கொம்பு இருக்கா?” என்று கனியக்கா எகிற, வீட்டு தல துஷார் வந்து இறங்கச் சொல்ல “நான் ஏன்..இறங்கணும்.. பத்து வரிகளுக்குள் இதற்கு விடை சொல்லு” என்று கேள்வித்தாள் மாதிரி கேட்டு இறங்காமல் அடம்பிடித்தார் பாரு. ‘முதுகுல தொங்கற வேதாளத்தைக் கூட கீழே இறக்கிடலாம்.. இதை இறக்க முடியாது போல’ என்று தெறித்து ஓடினார் துஷார்.
தன்னை எப்போதும் கார்னர் செய்யும் பாருவை பழிவாங்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் கெமி விடுவாரா?” ‘நான்தான் கிச்சன் இன்சார்ஜ். அவங்க இறங்காம சமைக்க மாட்டோம். ஸ்ட்ரைக்” என்று ‘போர்.. ஆம் .. போர்’ என்கிற பாணியில் பிக் பாஸ் வீட்டார் அனைவரும் கார்டன் ஏரியாவிற்கு சென்று வேலைநிறுத்தம் செய்யாதீர்கள்.
கம்ருதீன் வந்து பாருவை சமாதானம் செய்ய “நீங்க எல்லோரும் சொல்றதால அது சரின்னு ஆகிடாது. நீங்க எல்லோரும் ஏத்துக்கறதால அது தவறுன்னும் ஆகிடாது” என்று ஒரு மாதிரி குழப்பமாக பன்ச் வசனம் பேசினார் பாரு. பிறகு பெட்ரூமிற்குச் சென்று “நான்.. எங்க .. எப்படி இருக்க வேண்டிய தெரியுமா.. என் கெரகம்.. இந்த கரகாட்டக் கும்பல்ல வந்து மாட்டிக்கிட்டேன்’ என்கிற மாதிரி புலம்பிக் கொண்டிருந்தார்.

“பாரு.. இதனால உன் பேருதான் வெளிய தப்பா தெரியும். பார்த்துக்க” என்று கம்ருதீன் சொல்ல ‘அதெல்லாம் மக்கள் பார்த்துப்பாங்கன்னு சொல்லு’ என்று கூட இருந்த திவாகர் பாருவிடம் ஏற்றிக் கொடுக்க “ஏன் அவளைத் தூண்டி விடறே.. சும்மா இருடா உருண்டை” என்று வழக்கம் போல் கம்ருதீன் வார்த்தையை விட இருவரும் சண்டையிட்டுக் கொண்டார்கள்.
கிச்சன் மேடையில் பாரு குத்த வைத்த குற்றத்தை விசாரிப்பதற்காக பஞ்சாயத்து கூடியது. பாரு மன்னிப்பு கேட்டே ஆகணும் என்று பிக் பாஸ் வீடு கோரஸாக கூவ ‘இங்க மன்னிப்பு கேட்கணும்ன்னு ஆரம்பிச்சா, லைவ் ஃபுல்லா எல்லோருமே மன்னிப்பு கேட்கும் காட்சியைத்தான் மக்கள் பார்க்க முடியும். அந்த அளவுக்கு தப்பு பண்ணாதவன் எவனும் இல்ல” என்று மல்லுக்கட்டினார் பாரு.
“எதுல வேணா அலப்பறை கொடுங்க. சாப்பாடு விஷயத்துல மட்டும் ராவடி பண்ணாதீங்க. அப்புறம் நான் திருப்பியும் மயக்கம் போடுவேன்’ என்று ரம்யா எச்சரிக்கை தந்தார். உணவு விஷயத்தை வைத்து கார்னர் செய்ததால் வேறு வழியில்லாமல் இறங்கி வந்த பாரு “நான் என்னமோ தப்பு செய்து விட்ட மாதிரியும், நீங்கள் எல்லோரும் சரியாகச் சொல்கிற மாதிரியும் ஒரு தோற்றம் தெரிவதால் மன்னிப்பு கேட்பதில் எனக்கொன்றும் பிரச்சினை இல்லை” என்று ‘நம்மவர்’ கமல் மாதிரி சாமர்த்தியமாக மன்னிப்பு கேட்டார்.
‘எனக்கு சாப்பாடு வேண்டாம்’ என்று கோபித்துக் கொண்டு போன பாரு ஒருவேளை சாப்பிடாமல் போய் விடுவாரோ என்று பார்த்தால்.. இல்லை. “டேய்.. சபரி.. ஸ்டவுல்ல ஒரு பர்னர் சும்மாதானே இருக்கு.. அதுல எனக்கு நூடுல்ஸ் செஞ்சு கொடு.. எனக்கும் பசிக்கும்ல” என்று கேட்க “ரெண்டே நிமிஷம் இரு. அப்புறம் பண்றேன்” என்று சபரி சொல்ல “நூடுல்ஸை ரெண்டே நிமிஷத்துல பண்ணிடலாம். முதல்ல பண்ணு” என்று அடம்பிடித்து வாங்கி ரசித்து சாப்பிட்டார் பாரு.

எல்லாமே ரொமான்ஸ் வழக்குகள். “கம்ருதீனுக்கு என் மேல லவ் போல. அவன் இங்க வந்ததே எனக்காகத்தான். ஒரு மாதிரியா பேசறான். லவ் டிராக் டிரை பண்றான். எனக்கு ஓகே இல்ல. ஆனா இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமா இருக்கு’ என்று காலை சொகுசாக நீட்டிக் கொண்டே அரோரா சொல்ல ‘வட போயிடுமோ’ என்கிற பீதியை முகத்தில் மறைத்துக் கொண்டு பாவமாக தலையாட்டினார் துஷார்.
இதைப் போலவே சிறிது நேரத்தில் துஷாரிடம் வந்த ஆதிரை “FJ வை முன்னாடியே தெரியும். பிக் பாஸ் வர்றதுக்கு ரெண்டு நாள் முன்னாடிதான் தற்செயலா ஒரு மால்ல பார்த்தோம்.. எனக்கு ஃபீலிங்கா இருக்கு” என்று சொல்ல ‘என்னைப் பார்த்தா காதல் தூதுவன் மாதிரியே இருக்கா.. அது ஏண்டி எங் கிட்டயே வந்து சொல்றீங்க. நான் பேசாம பாரு கிட்ட போயி பேசிட்டு இருக்கேன்’ என்கிற மாதிரி முகத்தை வைத்துக் கொண்டார் துஷார்.

‘நாங்க இங்க சோத்துக்கே சிங்கியடிச்சிட்டு இருக்கோம்.. உங்களுக்கு சொகுசா உணவு கேக்குதா?’ என்று சூப்பர் வீட்டின் லக்ஸரி உணவை ஒரு கண்ணாடி தொட்டிக்குள் ஒளித்து வைத்தார் கனி. “எப்பூடி.. கலக்கிட்டம்ல” என்று அவர் தற்பெருமையடித்துக் கொண்ட போது காரக்குழம்பிற்குள் ஒரு கலவர பூமியே இருப்பது தெரிய வந்தது.
போட்டியாளர்கள் 18 நபர்கள் இருக்கும் நிலையில் 17 ஸ்லாட்கள் மட்டும் இருக்கும். பஸ்ஸர் அடித்ததும் ஓடி வந்து முகமூடியை எடுத்து ஸ்லாட்டில் வைக்க வேண்டும்.
பிக் பாஸ் வீட்டார் மற்றவர்கள் முகமூடியை எடுக்கலாம். ஆனால் தன்னுடைய சொந்த முகமூடியை எடுக்க முடியாது. சொந்த முகமூடியை எடுக்கலாம் என்கிற சிறப்புச் சலுகை சூப்பர் வீட்டிற்கு உண்டு. பிக் பாஸ் வீடு ஜெயித்தால் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் கிடைக்கும். சூப்பர் டீலக்ஸ் வீட்டில் இருந்து நான்கு போ் நாமினேஷனில் செல்வார்கள்.
“இது க்ரூப் டாஸ்க். சூப்பர் வீட்டை அடிச்சு காலி பண்றோம்.. அவங்களை நாமினேஷன்ல போக வெக்கறோம்” என்று கனியக்கா தலைமையில் பிக் பாஸ் வீடு சபதம் ஏற்றுக் கொண்டது. அவர்களின் மெயின் டார்கெட் யார் என்பது யூகிப்பது பெரிய சிரமமில்லை. பார்வதி. அவரின் கிரைம் ரெக்கார்டு அப்படி.

ஆட்டம் ஆரம்பித்தது. பஸ்ஸர் அடித்ததும் ரணகளமாக ஓடி மாஸ்க்கை தூக்கினார்கள். பாருவின் மாஸ்க்கை குறிவைத்து ஓடிய சபரி அதைச் சிறப்பாக செயல்படுத்தினார். மாஸ்க்கை பரஸ்பரம் தூக்கிப் போட்டு கண்ணாமூச்சி ஆடினார்கள். ‘என் மாஸ்க்கை வைக்க விடமாட்டீங்கள்ல’ என்று கத்திக் கொண்டிருந்தார் பாரு.
“மாஸ்க்கை பாஸ் பண்ணக்கூடாது. மாஸ்க்கை எடுத்தவர் மட்டுமே வைக்க வேண்டும். எனவே இந்தச் சுற்று கேன்சல்” என்று சொல்லி ஆட்டத்தைக் கலைத்தார் பிக் பாஸ்.
எனவே ஆட்டம் மீண்டும் ஆரம்பிக்க வினோத் காலில் அடி. இந்த முறையும் பார்வதியின் மாஸ்க்கை எடுத்து வைத்துக் கொண்டு ஆட்டம் காட்டினார் சபரி. இதனால் காண்டான பார்வதி சகட்டு மேனிக்கு அனைவரையும் திட்டிக் கொண்டிருந்தார். “நீங்க வெச்சா நாங்களும் வெக்கறோம்.. டீல் ஓகேவா?” என்று இரு வீட்டாரும் அவரவர்களின் வசதிக்கு ஏற்ப காய் நகர்த்த இறுதியில் கெமியின் இடம் பறிபோனது. கெமி ஆட்டத்தில் இருந்து அவுட்.
‘யார்.. எவரோட மாஸ்க்கை எடுத்தீங்க?” என்று பிக் பாஸ் கேட்க “என் மாஸ்க்கை நான் எடுத்து வெச்சுட்டேன்” என்று திவாகர் சொல்ல ‘த்தூ.. இதெல்லாம் ஒரு பொழப்பு’ என்கிற மாதிரி கீழே துப்பினார் கம்ருதீன். இதை பார்வதி ஆட்சேபிக்க எஃப்ஜே உள்ளே வர “நீ இதுல வராதே’ என்று பாரு எகிற அடுத்த சண்டை ஆரம்பித்து எஃப்ஜே கோபித்துக் கொண்டு வெளியே போனார். துஷாரும் மற்றவர்களும் அவரைச் சமாதானப்படுத்தி அழைத்து வந்தார்கள்.

அடுத்த சுற்றிலும் பாருவின் மாஸ்க்கை டார்கெட் செய்து வெற்றிகரமாக கைப்பற்றினார் சபரி. “நான் ஆடக்கூடாது.. அதானடா” என்று கொலைவெறியுடன் கத்தினார் பாரு. இறுதியில் பாருவை வெளியேற்றி கொண்டாடி மகிழ்ந்தது பிக் பாஸ் வீடு.
“ஏண்டா.. அது என்ன எப்பப் பாரு என் மாஸ்க்கை டாப் ஸ்லாட்ல கரெக்ட்டா வெக்கற.. அப்பதான் ஹைட்டா இருக்கற சபரி எடுப்பான்னுதானே.. நீயெல்லாம் ஒரு தலை.. Biased தல.. எடுப்பார் கைப்புள்ள.. உன் க்வாலிஃபிகேஷன் என்ன.. மத்தவங்க பேச்சை கேட்டு ஆடுற.. நீயெல்லாம் ஒரு தலையா.. ச்சை..” என்றெல்லாம்

“நீ அதிகமா கோபப்படறே.. உன் பேருதான் வெளில கெடும். அமைதியா இருடா” என்று எஃப்ஜேவை சபரியும் கனியும் சமாதானப்படுத்தினார்கள். டாஸ்க்கின் போது பாரு செய்த வில்லங்கமான காரியத்தை எஃப்ஜே விளக்கி கண்கலங்க, சபரி அவரை கட்டியணைத்து சமாதானப்படுத்தினார்.
“கிச்சன்ல வடிச்சுக் கொட்டறது என்னமோ நான்தான். ஆனா கடைசி நேரத்துல வர்ற சபரி, கரண்டியை கையில எடுத்துக்கிட்டு என்னமோ அவன்தான் மொத்த சமையலையும் செஞ்ச மாதிரி சீன் போடறான்” என்று கலையரசன் அனத்த “ஹாங்.. அப்படிச் சொல்லு..” என்கிற மாதிரி பின்பாட்டு பாடினார் பாரு.
முகமூடி டாஸ்க் நாளையும் தொடருமாம். ‘கைப்புள்ள கிளம்பிட்டான். எத்தனை தலை உருளப் போகுதோ’ மோமெண்ட்.