செய்திகள் :

BBTAMIL 8: DAY 40: மீண்டும் ஒரு டாஸ்க் பஞ்சாயத்து; இந்த வாரம் யார் வெளியேறுவார்?

post image

கிச்சன் டாஸ்க் பஞ்சாயத்து, நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க், பெஸ்ட் மற்றும் வொர்ஸ்ட் ஃபர்பார்மர் தேர்வு என்று இந்த எபிசோடு சற்று பரபரப்பாக நகர்ந்தது நல்ல விஷயம். வர்ஷினி  மற்றும் ராணவ்வை சுமாரான போட்டியாளர் என்று பலரும் பழிசொன்னது ஏற்கத்தக்கதல்ல. இந்த வாரத்தில் அவர்களிடம் முன்னேற்றம் தெரிகிறது. சீக்ரெட் டாஸ்க் பற்றி பிக் பாஸ் இன்னமும் பொதுவில் வெளியிடவில்லை. வீக்கெண்ட் சுவாரசியத்திற்காக வைத்திருக்கிறார்கள் போல.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 40


ஆண்களிடம் மளிகைப் பொருட்களின் இருப்பு குறைவாக இருக்கிறது. ஏனெனில் அவர்கள் சம்பாதித்ததே குறைவுதான். எனவே ஹாஸ்டல் மாணவர்கள் மாதிரி கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார்கள். “அரிசி ரொம்ப கம்மியா இருக்கு” என்று கிச்சன் இன்சார்ஜ் தீபக் கவலைப்பட்டுச் சொல்ல “ஒரு வேளை கஞ்சியா வெச்சு சமாளிச்சிடலாம்” என்று ஸ்போர்ட்டிவ்வாக சொல்லிக் கொண்டிருந்தார் முத்து. ‘ஒவ்வொரு அரிசியாக சாப்பிட்டால் ஒரு வாரத்திற்கு தாங்கலாம்’ என்கிற ரேஞ்சில் பரிதாபமான நிலைமையில் இருக்கிறது, பாய்ஸ் டீம். 

BBTAMIL 8: DAY 40

வறுமைக்கோட்டில் வாழும் ஆண்களைப் பார்த்து பெண்களுக்கும் பரிதாபம்தான். ஆனாலும் என்ன செய்ய? இது பிக் பாஸ் பேட்டர்ன் ஆயிற்றே? என்றாலும் அதைப் பார்த்து மனம் நெகிழ்ந்த சாச்சனா, அன்னபூரணியாக மாறி தங்களிடமிருந்த அரிசியை கொஞ்சம் எடுத்து ஆண்கள் அணிக்கு ரகசியமாக தானம் செய்தார். இதை ரஞ்சித் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தார். பாய்ஸ் டீம் தனக்கு ஊட்டி வளர்த்தால் சாச்சனா செய்த செஞ்சோற்றுக் கடன் தீர்க்கும் உதவி இது. 

ரகசியமாக செய்த இந்த விஷயத்தை பிறகு பெண்களிடம் வாக்குமூலமாக ஒப்புக் கொண்டார் சாச்சனா. “நல்ல விஷயம்தான் செஞ்சிருக்கே… ஆனா” என்று அவர்கள் இழுத்தார்கள். வீக்கெண்ட் விசாரணையில் இது ஒரு ‘ஹியூமன் இன்ட்ரஸ்ட் ஸ்டோரியாக’ நிச்சயம் மாறும்.

திருடனிமே சாவியைக் கொடுத்த கதையாகி விட்டது, ரயானுடையது. ஏற்கெனவே பெண்கள் அணி பக்கமே சுற்றிக் கொண்டிருப்பார். இப்போது பெண்கள் அணிக்குள்ளேயே அவர் சென்று வி்ட்டதால் ஜோதியில் இன்னமும் நன்றாக ஐக்கியமாகி விட்டார். சவுந்தர்யாவுடன் ஊடல் என்கிற அளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. எப்படியோ, இந்த சீசனில் லவ் டிராக் இல்லை என்கிற குறை நீங்கினால் சரி. 

உருவப்பட்ட கேப்டனின் கயிறுகள்

கேப்டனுக்கான அங்கியை அருண் எப்போதும் அணிந்திருக்க வேண்டும் என்பது விதி. ஸ்கூல் டாஸ்க்கில் VP என்கிற பந்தாவோடு அவர் கோட் அணிந்து கொண்டிருந்தார் என்பது ஓகே. ஆனால் டாஸ்க் முடிந்த பிறகும் வழக்கமான ஆடையில்தான் இருந்தார். பிக் பாஸ் சுட்டிக் காட்டிய பிறகு அணிந்து கொண்டார். இது குறித்து பொதுவில் வந்து புகார் சொன்ன மஞ்சரி “கேப்டனே ரூல்ஸை ஃபாலோ பண்ணலைன்னா எப்படி?” என்று  ஒரு கயிற்றை உருவினார். ‘கையெடுத்துக் கும்பிட்டேன்… பிக் பாஸ் சொன்னா போட்டுக்கறேன்’ என்று அருண் சொன்ன விளக்கமெல்லாம் செல்லுபடியாகாத காரணம். 

‘நான் மட்டும் தக்காளி தொக்கா.. நானும் ஒரு கயிறை உருவுவேன்’ என்று எழுந்து வந்த சவுந்தர்யா, “கேப்டன் சரியாவே ஃபனிஷ்மெண்ட் கொடுக்கலை.. தண்டனைகள் கடுமையானால்தான் குற்றங்கள் குறையும்’ என்று ஒரு கயிறை உருவ முயல, பெரும்பாலான போட்டியாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து “கேப்டன் தன் வேலையை சரியாகத்தான் செய்தார்’ என்று சொல்ல சவுந்தர்யாவிற்கு பல்புதான் கிடைத்தது. முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு போய் அமர்ந்தார். 

BBTAMIL 8: DAY 40

நாமினேஷன் ஃப்ரீ பாஸின் இரண்டாவது டாஸ்க் துவங்கியது. முதல் சுற்றில் பெண்கள் அணி ஏற்கெனவே வெற்றி பெற்றிருந்தது. இது மூளை சம்பந்தப்பட்ட டாஸ்க் என்பதால் ஆனந்தி, பவித்ரா, முத்து, அருண் ஆகிய இரு அணிகளும் சென்றன. தனித்தனியாக தரப்பட்டிருக்கும் பத்து வாக்கியங்களை சரியான ஆர்டரில் அடுக்க வேண்டும். இதில் நான்கு மதிப்பெண்கள் வித்தியாசத்தில் ஆண்கள் அணி வெற்றி. ‘வெற்றிவேல்.. வீரவேல்’.. என்று கத்தி இதைக் கொண்டாடியது பாய்ஸ் டீம். (கும்பலா சுத்துவோம். ஐயோ அம்மான்னு கத்துவோம்!)

மீண்டும் ஒரு டாஸ்க் பஞ்சாயத்து

காலையுணவு இல்லாத நிலையில் கஞ்சி, ஆம்லேட் என்று சிக்கனமாக லஞ்ச்சை தயார் செய்து கொண்டிருந்தது ஆண்கள் அணி. “அண்ணே.. தக்காளி இருந்தா கொடுங்கண்ணே.. நாலைஞ்சை போட்டா கொஞ்சமாவது நெறைவா இருக்கும்” என்று தீபக்கிடம் முத்து கெஞ்சி வாங்கிக் கொண்டிருந்த காட்சி பார்க்கவே பரிதாபமாக இருந்தது. 

பெண்கள் அணியிலிருந்து சமைப்பதற்காக ரயான் எல்லை தாண்ட வேண்டும். இதற்கான டாஸ்க்கை விஷால் கொடுத்தார். இடுப்பில் கை வைத்து நாணிக் கோணி நடக்க வேண்டும் என்பது அவர் கொடுத்த டாஸ்க். இது எல்லை தாண்டுபவர்களுக்கானதல்ல. சமைப்பவர்களைத் தவிர மற்ற அனைத்து பெண்களும் இதைச் செய்ய வேண்டுமாம். அதிலும் சமையல் முடிவது வரை அவர்கள் இந்த டாஸ்க்கில் இருக்க வேண்டுமாம். 

BBTAMIL 8: DAY 40

இந்த அராஜகமான டாஸ்க்கை பெண்கள் அணி கடுமையாக எதிர்த்தது. ‘இந்த பாடி வேங்வேஜ் பெண்களை இழிவுப்படுத்துவது போல் இருக்கிறது. எனவே செய்ய முடியாது” என்று எதிர்த்தார் ஆனந்தி. மஞ்சரியும் இதே காரணத்திற்காக ஒப்புக் கொள்ளவில்லை.  “கொஞ்ச நேரம் டாஸ்க்குன்னா ஓகே.. சமைக்கற வரைக்கும், அதிலயும் மத்தவங்க செய்யணும்னு சொன்னா என்னா கதை” என்கிற காரணத்திற்காகவும் பெண்கள் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் ‘பசி வந்தால் பத்தும் போகும்’ என்பதால், சவுந்தர்யா, ஜாக்குலின் உள்ளி்ட்டவர்கள் இந்த டாஸ்க்கை செய்ய ஒப்புக் கொண்டனர். ‘இடுப்புல கை வெச்சிக்கிட்டு அப்படியே படுத்துட்டு பேசிட்டிருக்க வேண்டியதுதான்.. என்ன இப்ப?” என்பது அவர்களின் வாதம். 

ஆனால் சாச்சனா இதை ஒப்புக் கொள்ளவில்லை. ‘இப்படியே போனா இதைப் பழக்கமாக்கிடுவாங்க.. சமைக்கறதுக்கு ரெண்டு மணி நேரமாவும். அது வரைக்கும் டாஸ்க்ன்றதெல்லாம் ரொம்பவே ஓவர்” என்று அவர் பொங்க, சாச்சனாவிற்கும் சவுந்தர்யாவிற்கும் இடையே முட்டிக் கொண்டது. ‘கீச்கீச்’சென்று சாச்சனா கத்தியதைப் பொறுக்க முடியாமல் காதைப் பொத்திக் கொண்டார் சவுந்தர்யா. பிறகு, “இனிமே என்னை பெயர் சொல்லி கூப்பிடக்கூடாது. அக்கான்னுதான் கூப்பிடணும்” என்று சாச்சனாவிடம் கோபத்துடன் கறாராக சொன்னார். (சுனிதா சொன்னதற்கு நேர்மாறு!).

பசி நேரத்திலும் உக்கிரமான சண்டை


‘‘மற்றவர்களுக்காக குரல் கொடுப்பதாகச் சொல்லும் நீங்கள், சாச்சனா போராடிய போது ஏன் ஆதரவு தரவில்லை?” என்று கடந்த வார விசாரணையில் விஜய்சேதுபதி மடக்கியது, ஜாக்குலினின் மைண்டில் வந்திருக்க வேண்டும். எனவே ‘இப்படிப் பண்ணாத தப்பு சவுந்தர்யா’ என்று ஜாக் சொல்ல, ஜாக்கிற்கும் சவுண்டிற்கும் சண்டை என்பதாக திசை மாறியது. பசியிலும் எனர்ஜி குறையாமல் சண்டை போட ஒரு தனியான திராணி வேண்டும்.


பெண்கள் இப்படியே பொதுவில் சளசளவென சண்டை போட்டுக் கொண்டிருக்க ஆண்கள் அணியோ கும்மாளத்தில் நடனமாடிக் கொண்டிருந்தது. (பசி நேரத்திலும் ஆட்டம் அடங்குதா.. பாரேன்!) “வாங்க.. நம்ம ரூமல் போய் பேசலாம்’ என்று பெண்கள் கிளம்ப “என்னைக் கணக்குலயே எடுத்துக்க மாட்டீங்களா.. நான் என்ன தக்காளி தொக்கா” என்று தனிநபர் போராட்டத்தை ஆரம்பித்தார் பவித்ரா. தன்னுடைய உழைப்பு கணக்கிலேயே எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்கிற நிரந்தரமான குறை பவித்ராவிடம் இருக்கிறது. ‘யம்மா.. நீ வேற புதுசா கௌப்பாத.. வாடி தங்கம்… பசி… உயிர் போகுது’ என்று அவரை இழுத்துச் சென்றார்கள். 

BBTAMIL 8: DAY 40

“ரொம்ப நேரத்துக்கு இழுக்கற டாஸ்க்குன்னா பண்ண முடியாதுன்னு சொல்லிடலாம்..” என்று தர்ஷிகா தீர்மானமாகச் சொல்ல, மற்ற பெண்களும் அதை ஆமோதித்தார்கள். இந்தத் தகவல் கேப்டனுக்குச் சொல்லப்பட்டு ஆண்கள் அணிக்கும் சென்றது. அவர்களும் இதை ஒப்புக் கொண்டார்கள். 

சாச்சனாவிடம் ஏற்பட்ட சண்டை காரணமாக முகத்தைத் தூக்கிக் கொண்டு வந்து தனியாக அமர்ந்தார் சவுந்தர்யா. பக்கத்தில் ரயான்.  “நீ என் கையைப் பிடிச்சிட்டு இழுத்திட்டு வந்தியே.. அது ஓகேவா.. மத்தவங்க ஏதாவது சொன்னா.. அவங்க பிரவோக் ஆகற மாதிரி கொடூரமா எக்ஸ்பிரஷன் தர்றியே.. அதெல்லாம் சரியா..” என்று சரியான கேள்விகளாக கேட்டுக் கொண்டிருந்தார் ரயான். ஒருவரிடம் நட்பாக இருந்தாலும் தவறைச் சுட்டிக் காட்டுவது ஒரு நல்ல பழக்கம். 

நாமினேஷன் ப்ரீ பாஸை தட்டித் தூக்கிய பாய்ஸ் டீம்


மளிகைப் பொருட்கள் இல்லை என்பதால் கஞ்சியை குடித்து விட்டு பசியை மறைத்து விறைப்பாக உலவிக் கொண்டிருந்தது, ஆண்கள் அணி “அவங்களைப் பார்த்தாலே பாவமா இருக்கு. ஏதாச்சும் பண்ணுங்க’ என்று பெண்கள் பிக் பாஸிடம் கெஞ்சிய காட்சி நன்று. சவுந்தர்யாவும் சாச்சனாவும் பரஸ்பரம் பேசி தற்காலிகமான சமாதானத்திற்கு வந்தார்கள். 


நாமினேஷன் ஃப்ரீ பாஸின் மூன்றாவது சுற்று. இதுதான் வெற்றியைத் தீர்மானிக்கப் போகிறது.  bottle flip task. ஒரு தண்ணீர் பாட்டிலை தூக்கிப் போட்டு அது நேராக நிற்கும்படி செய்ய வேண்டும். பாட்டில் கவிழ்ந்து விழுந்தால் ஒரு கிளாஸ் ‘விநோத திரவம்’ குடிக்கும் தண்டனையை ஏற்க வேண்டும். பரபரப்பான இந்தப் போட்டி ஆரம்பித்தது. ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் சளைக்காமல் ஈடு கொடுத்து ஆடினார்கள். யார் ஜெயிப்பார்கள் என்கிற சஸ்பென்ஸ்.

போட்டியின் இறுதிப் பகுதியில் வந்த சிவக்குமாரும் பவித்ராவும் சொதப்ப ஆரம்பித்தார்கள். அவர்கள் எத்தனை முறை போட்டாலும் பாட்டில் நிமிரவில்லை. விளைவு, அவர்கள் ஒவ்வொரு தோல்விக்கும் ஒரு கிளாஸ் விநோத திரவத்தைக் குடித்து வாந்தியெடுக்கும் அளவிற்குச் சென்றது. பிரவுன் கலர்  திரவம் இரண்டு ஜாரும் தீர்ந்து போகுமளவிற்கு இது தொடர்ந்தது. எனவே ஆட்டத்தை நிறுத்தி ஜொமோட்டோவில் ஆர்டர் செய்து பச்சைக்கலர் திரவத்தை வரவழைத்தார் பிக் பாஸ். 

குமட்டலை அடக்க முடியாமல் பவித்ராவின் கண்முழி பிதுங்கியதால் பிக் பாஸே பயந்து போய் ‘நீங்க இருங்க.. அடுத்த நபர் வாங்க’ என்று ஆட்களை மாற்றி விட்டார். கிடைத்த கேப்பில் கார்டன் ஏரியாவில் வாந்தியெடுத்த பவித்ரா ‘எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது?” என்று அழ ஆரம்பிக்க “கமான்.. கமான்.. உன்னால முடியும்டா தங்கம்.. நீ ஜெயிக்கலைன்னா.. வேற யாரு ஜெயிப்பா?” என்று உத்வேகமூட்டினார் ஜாக்குலின்.

BBTAMIL 8: DAY 40

பிரேக் முடித்து வந்தாலும் சிவக்குமார் மற்றும் பவித்ராவால் பாட்டிலை நிமிர்த்தி விழ வைக்க முடியவில்லை. பந்தை குழியில் தள்ளும் டாஸ்க்கிலும் இதே இருவர்தான் முன்னர் சொதப்பினார்கள் என்பது வரலாறு. அவர்கள் தொடர்ந்து  ஜூஸ் குடித்து அவஸ்தைப்பட, இன்னொருமுறை ஜொமோட்டா செலவா?’என்று பயந்த பிக் பாஸ், “அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும். வேற யாராவது டிரை பண்ணுங்க” என்று சொல்லி விட முத்துவும் தர்ஷிகாவும் பிராக்ஸியாக வந்தார்கள். மீண்டும் ஆட்டம் பரபரப்பானது. யார் ஜெயிப்பார் என்கிற சஸ்பென்ஸ். தர்ஷிகாவிற்கு குமட்டிக் கொண்டு வந்தது. என்றாலும் சமாளித்துக் கொண்டார். இறுதியில் முத்து பாட்டிலை சரியாக நிமிர்த்தி விட, ஆண்கள் அணி வெற்றி. ‘வெற்றி வேல்.. வீர வேல்..என்று கோஷம் எழுப்பினார்கள்.

ஆண்கள் அணி இதில் வெற்றி பெற்றதுக்கு ஒரு ரகசியம் இருக்கலாம் என்று தோன்றுகிறது. அவர்களுக்கு இருந்த கடுமையான பசியில், அது வேப்பம் ஜூஸாக இருந்தாலும் பரவாயில்லை என்று அதிகமாக குடித்ததால் எனர்ஜி வந்து விட்டது போல. ‘யாரைக் காப்பாற்றுவது?’ என்று ஆண்கள் அணியில் நடந்த சாத்வீகமான உரையாடலில் தீபக்கும் ரஞ்சித்தும் சமமான புள்ளிகள் பெற இறுதியில் தீபக் காப்பாற்றப்பட்டார். (சோறு முக்கியம் குமாரு!).

ராணவ்விற்கு உபதேசம் செய்த ‘தல’ ஜெப்ரி


“டாஸ்க் பஞ்சாயத்தை கேப்டன் சீக்கிரம் முடிச்சிருக்கலாம். எனக்குப் பசி தாங்கலை” என்கிற காரணத்தைச் சொல்லி கேப்டனின் ஒரு கயிறை உருவினார் ஆனந்தி. சென்சிட்டிவ் காரணம் என்பதால் இதை அருணும் ஒப்புக் கொண்டார். 

இந்த வாரம் சிறப்பாக பங்கேற்றவர்கள் என்கிற தேர்வில் விஷாலும் மஞ்சரியும் தேர்வானார்கள். இவர்கள் அடுத்த வாரத்திற்கான கேப்டன் போட்டியில் மோதுவார்கள். பெண்கள் அணியில் ரியாவிற்கும் மஞ்சரிக்கும் சமமான புள்ளிகள் கிடைத்திருந்தது. மறுவாக்கெடுப்பில் மஞ்சரி தேர்வானார். வர்ஷினியின் பெயரை ஒருவரும் சொல்லவில்லை. அவர் சுமாரான போட்டியாளராக இருந்தாலும் பிரின்சிபல் ரோலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பித்திருந்தார். 

இந்த சிறப்பான தேர்வு என்பதில் ஒரு நெருடலும் இருக்கிறது. மாணவர்களுக்கு தரப்பட்ட சீக்ரெட் டாஸ்க் பற்றி இன்னமும் பிக் பாஸ் ஏதும் சொல்லவில்லை. மாணவர்கள் செய்த ரகளை காரணமாக சிலர் அவர்களைத் தேர்வு செய்யாமல் இருந்திருக்கலாம். இந்த விஷயத்தை பொதுவில் சொல்லி விட்ட பிறகு ‘சிறந்த போட்டியாளர்’ தேர்வு நடந்திருக்க வேண்டும். எனில் ராணவ்விற்கு கூட சில வாக்குகள் கிடைத்திருக்கலாம். முடிவுகள் மாறியிருக்கலாம்.

BBTAMIL 8: DAY 40

அடுத்ததாக ‘சுமாரான போட்டியாளர்’ தேர்வு. ‘எப்படியும் என் பேரைத்தான் சொல்லப் போறீங்க’ என்று வர்ஷினி சொன்னபடி அவர் பெயரையே பலரும் குத்தினார்கள். இதைப் போலவே ஆண்கள் அணிக்கு கிடைத்த பலியாடு ராணவ். இருவருமே தங்களை டிஃபெண்ட் செய்யாமல் உறைந்த புன்னகையுடன் அமர்ந்திருந்தார்கள். 

ராணவ்வின் பெயரைச் சொன்ன ஜெப்ரி “டாஸ்க்லாம் ஒழுங்கா விளையாடணும். சூதானமா இருக்கணும்.. நம்ம இடத்தை நாமதான் எடுத்துக்கணும்.. யாரும் வந்து தரமாட்டாங்க. புரியுதா தம்பி..” என்று நீளமாக அட்வைஸ் செய்ய ‘சரி…தல’ என்று பிக் பாஸ் குறுக்கிட்டது சுவாரசியமான காட்சி. ஆண்கள் வெடித்து சிரித்தார்கள். ‘இந்தப் பிள்ளைப் பூச்சிக்கெல்லாம்’ என்கிற மாதிரி அமர்ந்திருந்தார் ராணவ். 

இந்த வாரம் யார் வெளியேறுவார்?


இருவருக்குமான தண்டனை என்ன? ‘சாப்பாடு. தண்ணி..” என்று பிக் பாஸ் நிதானமாக ஆரம்பிக்க ‘ஏற்கெனவே நாங்க பசில இருக்கோம் பாஸூ” என்று ஆண்கள் அலறினார்கள். சாப்பிடக்கூடாது என்கிற தண்டனையை பிக் பாஸ் தந்து விடுவாரோ என்று அனைவரும் அஞ்ச, பிக் பாஸ் அப்படியொன்றும் கல் நெஞ்சுக்காரர் இல்லை. ‘சாப்பாடு, தண்ணீர் போன்றவற்றை அனைவருக்கும் இவர்கள் சர்வ் செய்ய வேண்டும்’ என்று சொன்னதும்தான் எல்லோருக்கும் மூச்சு வந்தது. நேற்று வரைக்கும் பிரின்சிபல் மேடமாக கெத்தாக சுற்றிக் கொண்டிருந்த வர்ஷினி, இன்று பெண்கள் அணிக்கு சப்பாத்தி தட்டுக்களை தூக்கிக் கொண்டு வந்தார். (காலம் எவ்ள வேகமா சுத்துது பார்த்தீங்களா?!)


ஆண்கள் அணி பசியால் வாடுவதைக் கண்டு பரிதாபப்பட்ட பிக் பாஸ், ஆப்பிள், வெங்காயம், தக்காளி என்று சில பொருட்களை அனுப்ப “தெய்வமே.. நன்றி தெய்வமே…” என்று கண்கசிந்து நன்றி சொன்னது பாய்ஸ் டீம். பெண்கள் அணியும் ஹாப்பி. இனி அவர்கள் குற்றவுணர்ச்சியின்றி சாப்பிடலாம். ஆட்டிற்கு இலை தழையைப் போட்டால்தானே பிரியாணி செய்ய முடியும் என்பது பிக் பாஸின் கணக்கு. 

BBTAMIL 8: DAY 40

இன்று பஞ்சாயத்து நாள். இந்த வார இறுதியை விஜய்சேதுபதி விறுவிறுப்பாக்குவார் என்று வழக்கம் போல் எதிர்பார்ப்போம். அப்படித்தானே?

இந்த வாரம் வெளியேறபோகும் போட்டியாளராக (டபுள் எவிக்ஷனாகவும் இருக்கலாம் என்கிறார்கள்!)  யாரைக் கருதுகிறீர்கள்? கமெண்ட்டில் வந்து சொல்லுங்க மக்களே!..

Siragadikka Aasai : `அது கனவு மாதிரிதான் இருந்தது!' - நெகிழும் பாக்யலட்சுமி

சிறக்கடிக்க ஆசை தொடர் 500 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது.இந்த வெற்றியைக் கொண்டாட `சிறக்கடிக்க ஆசை' குடும்பத்தினர் அனைவரையும் ஒருங்கிணைத்தோம். இயக்குநர், ஒளிப்பதிவாளர் என கொண்டாட்டத்தில் கலந்து... மேலும் பார்க்க

Super Singer Junior 10: நாளை சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 ஆரம்பம்; நடுவர்கள் யார் தெரியுமா?

சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிகழ்ச்சி நாளை (நவம்பர் 16) தொடங்கவிருக்கிறது.2006 முதல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் தற்போது இசைத... மேலும் பார்க்க

BB Tamil 8: பெண்களுக்கு ஆண்கள் அணி கொடுக்கும் டாஸ்க்; எதிர்க்கும் ஆனந்தி; ஆதரிக்கும் சவுந்தர்யா

பிக் பாஸ் 8-ன் 40 வது நாளுக்கான புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் நடந்துகொண்டிருக்கிறது. இந்த டாஸ்க் தொடங்கியதிலிருந்தே போட்டியாளர்களுக்குள் பிரச்னைதான். இந்... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 39: காதல் வதந்தியால் வெடித்த சண்டை; தீபக் செய்த தரமான காமெடி சம்பவம்

ஸ்கூல் டாஸ்க்கை வைத்து எத்தனையோ சுவாரசியங்களை நிகழ்த்தியிருக்கலாம். அதிலும் நகைச்சுவையுணர்வு கொண்ட விஷால், முத்து போன்றவர்கள் அடித்து பட்டையைக் கிளப்பியிருக்கலாம். ஆனால் உப்புச்சப்பற்ற எபிசோடாக இது கட... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 8: `சேஃப் கேம் விளையாடுறது விஜய் சேதுபதிதான்!' - ப்ரியா ராமன் ஓப்பன் டாக்

`ஸ்கூல் - ஸ்டுடண்ட்ஸ் - ஸ்டாஃப்' என பிக் பாஸ் வீடு அதிரடி கலவரமாக போய்க் கொண்டிருக்கிறது.ரஞ்சித்தும் தற்போது தனது ஆட்டத்தை தொடங்கிவிட்டார். மற்ற போட்டியாளர்களும் ரஞ்சித்தின் மனநிலையை புரிந்துகொண்டனர்.... மேலும் பார்க்க

கார்த்திகை தீபம் : ``தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீங்க!'' - விமர்சனங்களுக்கு அர்த்திகாவின் பதில்!

ஜீ தமிழ் சீரியலில்நம்பர் 1 இடத்தைப் பிடித்திருந்த தொடர் `கார்த்திகை தீபம்'. தற்போது இந்தத் தொடரின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் முதல் பாகத்தில் நடித்திருந்த நடிகை அர்த்திகாஇரண்டாம் ப... மேலும் பார்க்க