சிங்காரச் சென்னையை கட்டியெழுப்புவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
Beauty: கிளியோபாட்ரா, நூர்ஜஹான், எலிசபெத், டயானா... அரசிகளின் அழகு ரகசியங்கள்..!
அரசிகளின் அழகுக் குறிப்பு என்றாலே, நமக்கு கிளியோபாட்ராவும் அவருடைய கழுதைப்பால் குளியலும்தான் நினைவுக்கு வரும். இதைத் தாண்டி, கிளியோபாட்ரா உட்பட இன்னும் பல அரசிகளின் அழகு ரகசியங்களைச் சொல்கிறார் பியூட்டிஷியன் வசுந்தரா. நீங்களும் டிரை பண்ணிப் பாருங்களேன்.
ரோஜாப் பூ எண்ணெயும் கழுதைப்பாலும்...
இது எகிப்திய அரசி கிளியோபாட்ராவின் அழகு ரகசியங்களில் ஒன்று. குளிக்கும் தண்ணீரில் ரோஜாப்பூக்களில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெயையும் கழுதைப்பாலையும் கலந்து குளிப்பாராம். கழுதைப்பாலில் இருக்கிற லாக்டிக் ஆசிட்டும் ரோஸ் ஆயிலும் தலைமுடி, சருமம் இரண்டுக்கும் நல்லப் பொலிவைத் தரும். கழுதைப்பாலுக்குப் பதில் பாக்கெட் பாலை நாம் பயன்படுத்தலாம்.
உடம்பின் இறந்த செல்களை நீக்குவதற்குப் பொடித்த கடல் உப்பை ஆலிவ் ஆயிலுடன் கலந்து பயன்படுத்தியிருக்கிறார்.
தலைமுடிக்குத் தேனும் விளக்கெண்ணையும் கலந்து தடவியிருக்கிறார் கிளியோபாட்ரா. தேனுடன் விளக்கெண்ணெய் சேரும்போது முடியின் கறுப்பு நிறம் மாறாது. தேன், தலைமுடிக்கு நல்ல ஈரப்பதத்தைக் கொடுக்கும். விளக்கெண்ணெய் முடியை வலுவாக்கி, அறுந்து போகாமல் செய்யும்.
அழகுக்கு ஷியா பட்டர்...
நெஃப்ருதி, இவரும் எகிப்திய அரசி தான். அரேபியக் காடுகளில் கிடைக்கிற ஷியா விதைகளில் இருந்து எடுக்கப்படுவது தான் ஷியா வெண்ணெய். மாசுமருவே இல்லாத பளிங்கு சருமத்துக்கு அரசி நெஃப்ருதி, இந்த வெண்ணையைத்தான் பயன்படுத்தியிருக்கிறார். பெரிய பெரிய டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர்களில் இந்த வெண்ணெய் கிடைக்கும். கிடைக்காதவர்கள் பசு வெண்ணெய் வாங்கி உடம்பு முழுக்க தேய்த்து, அரைமணி நேரம் ஊறவைத்துக் குளிக்கலாம்.
ரோஜா, ரோஜா மட்டுமே...
நூர்ஜஹான். இந்த மொஹல் அரசி தன்னுடைய சரும அழகுக்கு நம்பியது ரோஜாக்களில் இருந்து எடுக்கப்பட்ட ஆயிலையும், ரோஜாப்பூக்கள் ஊறியத் தண்ணீரையும்தான். குளிக்கும் தண்ணீரில் ரோஜா இதழ்கள், சருமத்தில் தடவி ஊற வைக்க ரோஜா ஆயில் என நீங்களும் டிரை பண்ணலாம்.
பாதாம் எண்ணெயும் லிச்சிப் பழமும்...
சீன அரசி யங் யஹான் தன்னுடைய முகத்தை பளிச்சென பராமரிப்பதற்கு, வெந்நீரில் கொஞ்சம் பாதாம் எண்ணெயும் , தேனும் கலந்து கழுவி வந்திருக்கிறார். மொத்த உடம்புக்கும் விட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் அடங்கிய லிச்சிப் பழங்களை அரைத்துத் தடவி, ஊற வைத்துக் குளித்து வந்திருக்கிறார்.
கற்களும் அழகாக்கும்!
சீன அரசிகளில் ஒருவரான டவுஹர் சிக்சி, ஜேடு கற்களால் செய்யப்பட்ட உருளையை வைத்து தினமும் முகத்தில் மசாஜ் செய்து கொள்வாராம். இது ரத்த ஓட்டத்தைத் தூண்டி, முகத்தைப் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ளும். இந்த அழகு சிகிச்சையை தற்போது கிறிஸ்டல் தெரபி என்ற பெயரில் பியூட்டிஷியன்கள் செய்து வருகிறோம். முகத்தில் அரோமா எண்ணெய்களைத் தடவி விட்டு ஜேடு ரோலரை முகத்தின் மேலே உருட்டி மசாஜ் செய்வோம். முகத்துக்கு நல்லக் குளிர்ச்சியைத் தரும் ஜேடு கற்கள். ஆனால், உங்கள் சருமத்துக்கு எந்தக் கல் பொருந்துகிறதோ, அதை பியூட்டிஷியனிடன் கேட்டுத் தெரிந்துகொண்டு அந்தக் கல்லால் மசாஜ் செய்துகொள்ளுங்கள்.
கொஞ்சம் பிராண்டியும் , முட்டையின் மஞ்சள் கருவும்...
ஆஸ்திரியாவின் அரசி எலிசபெத். அழகுக்காக அதிகம் மெனக்கெட்ட அரசிகளில் ஒருவர். இவரை சிஸி என்றும் அழைத்திருக்கிறார்கள். தினமும் ஆலிவ் ஆயில் விட்ட வெந்நீர்க்குளியல், முகத்துக்கு வயலட் வினிகர் ஸ்பிரே (புத்தம் புதிதாகப் பறித்த வயலட் பூக்களின் சாறு, ஆப்பிள் பழத்தில் எடுக்கப்பட்ட வினிகர், சுத்தமான தண்ணீர் சேர்க்கப்பட்ட கலவை), சுத்தமான தேன் விட்டு அரைத்த ஸ்ட்ராபெர்ரி பழங்களினால் ஃபேஸ்பேக் என்று அழகுக்கு அழகு சேர்த்திருக்கிறார். தேனடையில் இருந்து எடுக்கப்பட்ட மெழுகு, பாதாம் எண்ணெய், ரோஜாக்கள் ஊற வைத்த தண்ணீர், கோகோ வெண்ணெய் இவை நான்கையும் கலந்து கோல்டு க்ரீமாக பயன்படுத்தியிருக்கிறார். சிஸிக்கு முழங்கால் தொடுகிற அளவுக்குக் கூந்தல் இருந்ததால், பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை cognac என்ற பிராண்டியில் முட்டையின் மஞ்சள் கருவைக் கலந்து தலையில் ஊறவைத்துக் குளித்திருக்கிறார்.
ரோஸ் ஆயிலும் அவகேடோவும்...
இங்கிலாந்து அரசக் குடும்பத்தின் மருமகளும் இளவரசியுமான டயானாவின் அழகு எல்லோரும் அறிந்தது. தினமும் இரண்டு முறை சி.டி.எம். செய்வது இவருடைய வழக்கம். மற்றபடி, டயானாவைப் போலவே அவருடைய அழகு ரகசியமும் ரொம்ப சிம்பிளானது. ரோஸ் ஆயிலுடன் அவகேடா பழத்தைக் கலந்து, ஃபேஸ் பேக்காக பயன்படுத்துவது இவருடைய வழக்கம். வாசனைக்கு ரோஜா அல்லது மல்லிகை சென்ட்தான் இவருடைய ஃபேவரிட்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...