ஆர்ஜி கர் பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் பிரதமர் தலையிட கோரிக்கை!
Bengaluru: சிறுமிக்கு கட்டாய திருமணம்; வர மறுத்ததால் தூக்கிச்சென்ற மணமகன்... போக்சோவில் கைது
நாட்டில் வடமாநிலங்களில் இன்னும் குழந்தை திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களில் அதிக அளவில் நடக்கும் சிறார் திருமணங்கள் வெளிச்சத்திற்கு வருவதில்லை. நேற்று பெங்களூருவில், சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகில் உள்ள மலைக்கிராமத்தில் 7-வது வகுப்பு வரை படித்துவிட்டு மேற்கொண்டு படிக்காத நிலையில், 14 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.
அதே பகுதியில் உள்ள கழிகுத்தை என்ற மலைப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் என்ற 29 வயது கூலித்தொழிலாளிக்கு, அந்த 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொடுத்துவிட்டனர். திருமணத்திற்கு அந்த சிறுமி மறுத்தும் பெற்றோர் அதை கேட்கவில்லை.
இத்திருமணம் பெங்களூருவில் நடந்தது. திருமணம் முடிந்த பிறகு 14 வயது சிறுமி தனது கணவருடன் பெற்றோர் வீட்டிற்கு வந்தார். பெற்றோர் வீட்டிற்கு வந்த பிறகு தனது கணவருடன் அவரது வீட்டிற்கு செல்ல மறுத்தார். பெற்றோர் எவ்வளவோ எடுத்துச் சொன்னார்கள். ஆனால் கேட்கவில்லை. இதனால் மாதேஷ் 14 வயது மனைவியை தனது இரு கையிலும் தூக்கிச்சென்றார்.
அச்சிறுமியின் கூக்குரல் பற்றி யாரும் கவலைப்பட்டதாக தெரிய வில்லை. மாதேஷுடன் அவரது சகோதரர் மற்றும் உறவினர்கள் வந்தனர். மாதேஷ் அப்பெண்ணை வயல்வெளியில் தூக்கிச்சென்றதை அங்கு நின்றவர்கள் தங்களது மொபைலில் வீடியோ எடுத்தனர்.

சிலர் அதனை தங்களது சோசியல் மீடியாவிலும் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மைனர் சிறுமியின் பாட்டி கொடுத்த புகாரின் அடிப்படையில் மாதேஷ் மற்றும் அவரது சகோதரர் மல்லேஷ் மற்றும் மைனர் சிறுமியின் தந்தை, தாயார் நாகம்மா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மைனர் சிறுமி தற்போது தனது பாட்டி வீட்டில் இருக்கிறார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டு சிறை மற்றும் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும். பெண்களுக்கு 18 வயதுக்கு குறைவான வயதில் திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும்.