Ind v Eng : '13 மாதங்களுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் ஷமி' - அறிவிக்கப்பட்ட இந்த...
Book Fair: அஸ்ஸாம் எழுத்தாளர், இஸ்ரேல் சிறுகதை, இரானிய கவிதை.. செந்தில் ஜெகன்நாதனின் பரிந்துரை என்ன?
இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் 48 வது புத்தகக் காட்சியில், இளம் எழுத்தாளர் செந்தில் ஜெகன்நாதனைத் தொடர்பு கொண்டோம். புத்தகக் கண்காட்சியின் அனுபவங்கள் குறித்துக் கேட்டோம் .
"எங்களைப் போன்ற புதிய எழுத்தாளர்களுக்கும், எழுத வேண்டும் என்று ஆவல் உள்ளவர்களுக்கும் இதுபோன்ற கண்காட்சிகள் மிகப்பெரிய அனுபவங்களைக் கொடுக்கின்றன. பல்வேறு படைப்புலக மேதைகளை நேரில் காணவும், ஆலோசனைகளைப் பெறவும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது" என்று கூறினார்.
அவரின் படைப்புகள் குறித்துக் கேட்டதற்கு, அவரின் முதல் சிறுகதை தொகுப்பான மழைக்கண் பரவலான கவனத்தை ஈர்த்ததாகவும், 'கதைகளில் பேசும் குழந்தைகள்' என்ற குழந்தைகள் நூல் வயது வித்தியாசம் இல்லாமல் வாசகர்களைச் சென்றடைந்ததாகவும் கூறினார்.
தாம் நேசிக்கும் எழுத்தாளர்கள் முன்னிலையில் இந்த புத்தகக் கண்காட்சியில் வெளியிட்ட அவரின் படைப்பான 'அனாகத நாதம்' கண்டிப்பாக வாசகர்களைக் கவரும் என்று நம்பிக்கையுடன் பேசினார்.
கடந்த ஆண்டில் படித்துப் பிரமித்த நூல்கள் குறித்துக் கேட்டோம். அவ்வை டி.கே சண்முகம் எழுதிய 'எனது நாடக வாழ்க்கை', டென்சுலா ஆவ் என்ற அஸ்ஸாமிய பெண் எழுத்தாளர் எழுதிய 'என் தலைக்கு மேல் சரக்கொன்றை' என்ற சிறுகதை நூல், எட்கர் கீரத் என்ற இஸ்ரேல் எழுத்தாளரின் 'அவன் பறந்து போய் விட்டான்' ( மொழிபெயர்ப்பு சிறுகதை நூல்), எஸ். முத்தையா எழுதிய 'சென்னை மறு கண்டுபிடிப்பு', 'சிப்பியின் வயிற்றில் முத்து' என்ற மொழிபெயர்ப்பு நாவல் போன்றவற்றை தெரிவித்தார்.
தாங்கள் பரிந்துரைக்கும் நூல்கள் என்னென்ன என்று கேட்டோம் . தயக்கமே இல்லாமல் சட்டெனக் கூறினார்.
எஸ்.ராமகிருஷ்ணனின் 'கதா விலாசம்', ஜா.தீபா எழுதிய 'மேதைகளின் குரல்கள்', கவிஞர் மோகனரங்கனின் மொழிபெயர்ப்பு நூலான 'பாயக் காத்திருக்கும் ஓநாய்' என்ற அப்பாஸ் கியரோஸ்தமி கவிதைகள், கிளாசிக் நாவல் வகையில் எம்.கோபாலகிருஷ்ணன் எழுதிய 'மணல் கடிகை', தியோடர் பாஸ்கரன் எழுதிய 'கல் மேல் நடந்த காலம்' மற்றும் என். ஸ்ரீராம் எழுதிய 'இரவோடி' என்ற நாவல் ஆகிய நூல்களைக் கண்டிப்பாகப் பரிந்துரைப்பேன் என்றார்.