டொனால்டு டிரம்ப் வெற்றி அமெரிக்க நாடாளுமன்றத்தால் அங்கீகரிப்பு: ஜன.20 பதவியேற்பு...
Book Fair: "ஆண்கள் எழுதுவதால் 'His'tory; எனவே 'Her Stories பதிப்பகம்' என வைத்தோம்" - நிவேதிதா லூயிஸ்
பெண்களுக்காகப் பெண்களால் தொடங்கப்பட்ட பதிப்பகம்தான் Her Stories. தற்போது நடந்துகொண்டிருக்கும் 48வது சென்னை புத்தகக் காட்சியில் Her Stories அரங்குக்குச் சென்று எழுத்தாளர் நிவேதிதா லூயிஸிடம் பேசினோம்.
"கடந்த 2020 ஆம் ஆண்டு கோவிட் சமயத்தில் இந்த Her Storiesயை ஃபேஸ்புக் பக்கமாகத்தான் தொடங்கினோம். அதில் பெண்களைப் பற்றி, பெண்களின் வரலாறு பற்றிக் குறிப்பாக லாக்டவுன் காலத்தில் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளைப் பற்றியும் நிறைய பதிவுகள் எழுதிக்கொண்டிருந்தோம். அதற்குக் கீழே பெண்கள் அவர்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்களைப் பற்றி கமென்ட் செய்திருந்தனர். இதன்மூலம் பெண்களுக்கு ஒரு ஸ்பேஸ் உண்டானது. இதெல்லாம் வெறும் ஃபேஸ்புக்கோடு போய்விடக்கூடாது, இதையெல்லாம் ஆவணப்படுத்திவைக்க வேண்டும் என்று வலைத்தளம் ஒன்றை 2021 இல் தொடங்கினோம்.
இந்த வலைத்தளத்திற்குச் சில பெண் எழுத்தாளர்களைத் தொடர்பு கொண்டு பெண்ணியம் சார்ந்த கட்டுரைகளையும் தொடர்களையும் எழுதக் கேட்டிருந்தோம். Her stories என்ற பெயருக்குக் காரணமே காலந்தோறும் இங்கு வரலாறு என்பது ஆண்களால், ஆண் பார்வையில் எழுதப்பட்டிருக்கிறது. அது "His"tory ஆகவே இருந்து வருகிறது. அதனால் Her Stories எனப் பெயரிட்டு பெண்களின் கதைகளைச் சொல்ல ஒரு வெளி வேண்டும் என்பதுதான் இதன் தொடக்கப்புள்ளி.
நான், தோழர் வள்ளிதாசன் மற்றும் தோழர் சஹானா இணைந்து இதனை நடத்தி வருகிறோம். சாந்தி சண்முகம், ரமாதேவி உட்படப் பல புதிய எழுத்தாளர்கள் இந்த வலைத்தளத்தில் எழுதத் தொடங்கினர். பின் இந்த கட்டுரைகளை நிறைய பேருக்குச் சென்று சேர்க்க இவற்றைத் தொகுத்து புத்தகமாக வெளியிட முடிவெடுத்து ஜூன் 2022 முதல் முறையாக 7 புத்தகங்களை அப்போது மகளிர் நலத்துறை அமைச்சராக இருந்த கீதா ஜீவன் அவர்களை அழைத்து வெளியிட்டோம்.
இன்று 2025ல் 160க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டு இருக்கிறோம். இதில் இரண்டு புத்தகங்களைத் தவிர்த்து மற்ற எல்லாமே பெண்கள் எழுதிய புத்தகங்கள்தான். பயணக் கட்டுரை, பணிசார்ந்த அனுபவங்கள், அறிவியல் எனப் பல்வேறு தலைப்புகளில் புத்தகங்களை வெளியிட்டு வருகிறோம்" என்றார் அவர்.
புதிய வெளியீடுகளைப் பற்றிக் கேட்டதற்கு, "இந்த ஆண்டு குழந்தைகள் தினத்தையொட்டி குழந்தைகளுக்காக 15 நூல்களை வெளியிட்டுள்ளோம். இதில் சிறப்பு என்னவென்றால் 4½ வயதே ஆன கவின் எனும் சிறுவன் எழுதிய (சொன்ன) கதையும் இருக்கிறது.
இந்த ஆண்டு வெளியான நூல்கள்..
1. கற்கள் நட்சத்திரங்கள் - ரித்திகா என்பவர் ஒற்றைப் பெற்றோரின் மகளாகத் தான் சந்தித்த அனுபவங்களை எழுதியுள்ளார்.
2. காதலும் சில கேள்விகளும் - காதலில் இன்றுள்ள இளைஞர்களுக்கு இருக்கும் கேள்விகளையும் பதிலையும் வழங்கியிருக்கிறார் ராஜ சங்கீதன்.
3. ஹிதேரா - மலர்விழி. பெண்ணிய சார்புள்ள அறிவியல் புனைவு கதை.
4. தாயம் - மதுமிதா (மொழிபெயர்ப்பு கதைகள்)
5. சைனா டவுன் - மதுமிதா (மொழிபெயர்ப்பு கதைகள்)
6. அது ஒரு பிறைக்காலம் - ஜமீலா ராஸிக் (தமிழ் இஸ்லாமியப் பெண்களின் வாழ்வியல் மற்றும் பண்பாட்டு கட்டுரைகளின் தொகுப்பு)
7. அறிவதுவே - வெண்பா (அறிவியல் சார்ந்த கட்டுரைகள்)
எனப் பட்டியலிட்ட அவர், "இவைப் போக, தமிழ்நாட்டில் ஒரு பெண் எழுதியதில் அதிகம் விற்பனையான நூல்களில் முக்கியமான ஒன்று கீதா இளங்கோவன் எழுதிய 'துப்பட்டா போடுங்க தோழி'.
எளிமையான மொழியில் பெண்ணியத்தைச் சொல்கிற அந்த நூல் இது வரை 8000 பிரதிகள் தாண்டி விற்பனையாகி உள்ளது. இந்த நூலின் விலை 220 ரூபாய். ஆனால் இது இன்னும் நிறைய பேரிடம் சென்று சேர வேண்டும் என்பதால் இதனை 100 ரூபாய் பிரதியாக வெளியிட்டு இருக்கிறோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய நிவேதிதா லூயிஸ், "இன்னும் இரண்டு புத்தகங்கள் அடுத்த வாரம் வரவிருக்கிறது. ஒன்று நான் தொகுத்துள்ள 'பெயரற்றவர்களின் குரல்', 45 பெண்களும், 2 குயர் சமூகத்தினரும் தங்கள் வாழ்வை அதிகம் பாதித்த விஷயங்கள் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.
இந்த கட்டுரைகளில் 70 சதவீதம் சிறுவயதில் சந்தித்த பாலியல் கொடுமைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவை குறித்து வ. கீதா அவர்களுடனான என்னுடைய உரையாடல்களையும் தொகுத்திருக்கிறேன். இன்னொரு புத்தகம், கீதா இளங்கோவன் அவர்கள் எழுதிய கட்டுரைகள் மற்றும் பதிவுகளின் தொகுப்பு 'நோ ஆணி ப்ளீஸ்'. துப்பட்டா போடுங்க தோழி, முதல் பெண்கள், மற்றும் பாதை அமைத்தவர்கள் ஆகிய மூன்று புத்தகங்கள் வாசகர்கள் மத்தியில் அதிகம் விற்பனையாகிவருகின்றன" என்று தெரிவித்தார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...