பீகார்: மனைவியைப் பழிவாங்கச் சாலை விதிகளை மீறிய நபர்; காரணம் கேட்டு அதிர்ச்சி அட...
Census: `NFSA பலன்கள் கிடைக்காமல் 14 கோடி பேர் தவிப்பு; மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது?' - சோனியா
ஒரு நாட்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது அந்நாட்டின் வளர்ச்சிக்கு மிக அவசியமானதாக இருக்கிறது. காரணம், நாட்டில் எவ்வளவு மக்கள் இருக்கின்றனர், ஆண் பெண் விகிதம் எப்படியிருக்கிறது, எவ்வளவு பேர் கல்வியறிவு பெற்றிருக்கின்றனர், எத்தனை பேர் வேலைவாய்ப்பின்றித் தவிக்கின்றனர், எத்தனை குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கின்றனர், நாட்டின் எதிர்காலமான இளம் தலைமுறையினர் எத்தனை பேர் இருக்கின்றனர் என்பதைக் கண்டறிய மக்கள்தொகை கணக்கெடுப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-07/ef48d429-e71d-4c0c-8fe5-522ea898e936/Collage_Maker_13_Jul_2022_08_13_PM.jpg)
நாட்டு மக்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்பதால், அனைவரையும் சென்றடையும் வகையிலான வளர்ச்சித் திட்டங்களை வகுக்கும் நோக்கில், 1951 முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில், கடைசியாகக் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது 2011-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பிறகு 2021-ல் நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு ,கொரோனா தொற்றால் நடத்தமுடியாமல் போனது.
ஆனால், நாட்டில் கொரோனா காலகட்டம் முடிந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், மோடி 2.0 அரசு சென்று 3.0 அரசு அமைந்து 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகும், இதுவரையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பற்றி மத்திய பா.ஜ.க அரசு வாய் திறக்காமல் இருக்கிறது. இந்த நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாததால் சுமார் 14 கோடி மக்கள், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பலன்களை இழந்துவருவதாகக் காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், மாநிலங்களவை எம்.பி-யுமான சோனியா காந்தி நாடாளுமன்றத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/uddt9vyw/Screenshot-2025-02-10-144621.png)
நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் உரையாற்றிய சோனியா காந்தி, ``நாட்டின் 140 கோடி மக்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதன் நோக்கமாக, 2013-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசு, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை (NFSA) அறிமுகப்படுத்தியது. இந்தச் சட்டம், கொரோனா காலத்தில் லட்சக்கணக்கான குடும்பங்களைப் பட்டினியிலிருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகித்தது.
இருப்பினும், இந்தச் சட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கான ஒதுக்கீடு, 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே இன்னும் தீர்மானிக்கப்படுகிறது. இதனால், NFSA திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த சுமார் 14 கோடி இந்தியர்கள் தங்களுக்கான சரியான பலன்களை இழக்கிறார்கள். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக, மக்கள்தொகை கணக்கெடுப்பு நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தாமதமாகியிருக்கிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2020-10/59c15946-3bf9-4d03-96eb-cd6b56dfd4ce/people_1550501_1920.jpg)
மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்பது குறித்து இன்னும் தெளிவு இல்லை. பட்ஜெட் ஒதுக்கீடுகளும், மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்த ஆண்டு நடத்தப்பட வாய்ப்பில்லை என்பதைக் காட்டுகிறது. எனவே, அரசு மக்கள்தொகை கணக்கெடுப்பை விரைவில் நடத்தி முடக்க முன்னுரிமை அளித்து, NFSA திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்தவர்கள் பலன்கள் பெறுவதை உறுதிசெய்வது அவசியம். உணவுப் பாதுகாப்பு என்பது ஒரு சலுகை அல்ல, அடிப்படை உரிமை." என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs