CSK vs PBKS: `இனி துணிச்சலாகத்தான் பேட்டிங் செய்வோம்!' - மைக் ஹஸ்ஸி உறுதி
நாளை சென்னை சேப்பாக்கத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார் மைக் ஹஸ்ஸி. சென்னை அணியின் மனநிலை, திட்டங்கள், வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் என பல விஷயங்களைப் பற்றி அவர் பேசியிருக்கிறார்.
அவை பின்வருமாறு, "அடுத்து வரும் போட்டியில் இன்னும் அதிக வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்க முடிந்தால் அதை நிச்சயம் செய்வோம். ஏற்கெனவே ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே போன்ற இளம்வீரர்கள் வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். சாம் கரணுக்கு நம்பர் 3-ல் பேட் செய்ய வாய்ப்பு கொடுத்தோம். இந்த சீசனுக்கு அடுத்து வரும் சீசன்களுக்கும் பல திட்டங்களைத் தீட்ட விரும்புகிறோம். இந்த சீசனில் மீதமிருக்கும் போட்டிகளை வெல்வதே எங்கள் முதல் இலக்கு.

சில வீரர்கள் எதிர்பார்த்தளவுக்கு ஆட முடியாமல் போனது வருத்தம்தான். ஆனால், அணியிலிருந்து நீக்கப்பட்டாலும் மிகவும் பாசிட்டிவ் மனநிலையிலேயே அதை அணுகுகிறார்கள் ரச்சின், ஹூடா போன்ற வீரர்கள். அவர்களுக்கு இது ஏமாற்றமளித்திருக்கும்தான். ஆனால், அதற்காக அவர்கள் புலம்பவோ, ஆர்வம் இழக்கவோ இல்லை.
அவருக்குப் பதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தபோதும், தீபக் ஹூடா அவர்களுக்காக மகிழ்ச்சியையே வெளிப்படுத்தினார். அது அவரது குணத்தைக் காட்டுகிறது. தொடர்ந்து தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என பயிற்சியில் உழைக்கிறார். அப்படிதான் கடந்த போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
இன்னும் மேம்பட வேண்டும் என நாங்கள் நினைக்கும் ஒரு விஷயம் இளம்வீரர்களைக் கண்டறிவதுதான். இன்னும் அதில் அதிக முயற்சிகளை எடுக்கப்போகிறோம். அதற்கான திட்டமிடலும் இப்போதே ஆரம்பித்துவிட்டது.
கடைசி போட்டியில் எங்களால் ஒரு நல்ல ஸ்கோரை எட்ட முடியவில்லை என்றாலும், மிகவும் பாசிட்டிவ்வாக பேட்டிங் செய்தோம். நாங்கள் ஆட விரும்புவது அப்படிதான். இனியும் துணிச்சலாகவே ஆட நினைக்கிறோம். அதைச் சமர்த்தியமாகவும் பண்ண வேண்டும் என நினைக்கிறோம். சில ஆட்டங்களில் பேட்டர்கள் போதிய இன்டென்ட் இல்லாமல் ஆடினார்கள்.
அது கடந்த போட்டியில் நடக்கவில்லை. உண்மையிலேயே அது பார்க்க நன்றாக இருந்தது. ப்ரெவிஸ் சிறப்பாக ஆடினார். ஒரு நல்ல கேட்ச் அந்தப் போட்டியையே மாற்றிவிட்டது. அதுதான் முக்கிய வித்யாசமாக கடந்த போட்டியில் இருந்தது.
புதிய வீரர்கள் பலரும் வாய்ப்புகளைப் பெறுகின்றனர். ஐபிஎல் போன்றதொரு தொடரில் தங்களை நிரூபிக்க வேண்டுமென நினைக்கிறார்கள். இதைவிட என்ன உத்வேகம் தேவைப்படப்போகிறது." என்றவர் வைபவ் சூர்யவன்ஷி பற்றியும் பேசினார்.

"நேற்று அந்தச் சிறுவனின் ஆட்டம் வியக்கவைத்தது. இப்படியான வீரர்கள் ஆடும்போது ஒரு பந்தைக் கூட மிஸ் செய்துவிடக்கூடாது என தோன்றும். எங்களுக்குக் கில்கிறிஸ்ட் பேட்டிங் ஆட வரும்போது அப்படிதான் இருந்தது. இந்தச் சிறுவனும் அதே உணர்வை நேற்று தந்துவிட்டான்.
ரஷீத் கான் போன்ற உலகத்தரம் வாய்ந்த பௌலர்கள் கொண்ட எதிரணி என்றாலும் துணிச்சலாக வைபவ் ஆடிய விதம் மிகச்சிறப்பு. இந்த ஒரு போட்டியால் அவனின் வாழ்க்கையே மாறப்போகிறது. இந்த நேரத்தில் ராகுல் டிராவிட் போன்றவர்கள் உடனிருப்பது ரொம்பவே நல்ல விஷயம். இது போன்ற இன்னிங்ஸ் எல்லாப் போட்டிகளிலும் அமையாது. அதை உணர்ந்து அவரை வழிநடத்த அவரைப்போன்ற சீனியர்கள் தேவை." என்றார்.