டிரம்ப் 100 நாள்கள்! நூற்றுக்கு நூறு பெற்றாரா?
அமெரிக்காவின் 47ஆவது அதிபராகவும் இரண்டாவது முறையாகவும் டொனால்ட் டிரம்ப் பதவியேற்று, 100 நாள்கள் நிறைவடைந்த நிலையில், 100 நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியை மிக்சிகன் மாகாணத்தில் டிரம்ப் நடத்தினார்.
இந்த நிகழ்ச்சியின்போது, அமெரிக்காவின் பாதுகாப்பு, குடியுரிமை, பொருளாதாரத்தில் கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார். பல ஆண்டுகளாக, பொருள்களின் ஏற்றுமதியைவிட இறக்குமதியைத்தான் அமெரிக்கா அதிகம் மேற்கொள்கிறது. இந்த நிலையை மாற்ற விரும்புவதாகத்தான் டிரம்ப் கூறி வருகிறார்.
இருப்பினும், அமெரிக்காவின் பொருளாதாரம் குறித்த டிரம்ப்பின் கொள்கைக்கு வெறும் 37 சதவிகிதத்தினர் மட்டுமே ஆதரவு தெரிவிப்பதாகக் கருத்துக் கணிப்பு (Reuters-Ipsos) கூறுகிறது. இதுவரையில், டிரம்ப் மட்டுமே, நூறு நாள் ஆட்சியில் 50 சதவிகிதத்துக்கும் குறைவான ஆதரவை (41%) பெற்றுள்ளார்.
டிரம்ப்பின் இந்த நூறு நாள் ஆட்சியில் அவரின் செயல்பாடுகளும், அதனால் மக்கள் படும்பாடுகளும் (நேர்வினையோ எதிர்வினையோ) குறித்து...
அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற 100 நாள்களிலேயே, 140 நிர்வாக உத்தரவுகளை டிரம்ப் மேற்கொண்டார். ஆனால், முன்னாள் அதிபர் ஜோ பைடனின் ஒட்டுமொத்த நான்காண்டு ஆட்சிக் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட நிர்வாக உத்தரவுகளோ, வெறும் 162 மட்டுமே.
டிரம்ப் அதிபரான சில நாள்களில், மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என்று பெயர் மாற்றம் செய்தும், கனடாவை அமெரிக்காவின் 51 ஆவது மாகாணமாக மாற்றவிருப்பதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும், இந்த இரு நாடுகளும் டிரம்ப்பின் கருத்துகளுக்கு செவிகொடுக்காமல், தொடர்ந்து மறுப்பும் எதிர்ப்புமே தெரிவித்து வருகின்றனர்.
கனடாவின் புதிய பிரதமராக வெற்றிபெற்ற மார்க் கார்னி, ''கனடா மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, அதன் மூலம் நாட்டை சொந்தமாக்கிக் கொள்ள விரும்பும் டிரம்ப்பின் விரும்பம் ஒருபோதும் நிறைவேறாது என்பதை இந்தத் தோ்தல் முடிவு காட்டியுள்ளது'' என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவின் பொருளாதாரத்தை மேல்நோக்கி நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபடுவதாகத் தெரிவித்த டிரம்ப், அமெரிக்காவின் மீது ஏனைய நாடுகள் அதிகளவில் வரி விதிப்பதாகக் குற்றஞ்சாட்டி, பிற நாடுகளின் மீது பரஸ்பர வரி விதிப்பதாக அறிவித்தார்.
கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளினால்தான் அமெரிக்காவுக்குள் போதைப் பொருள்களும் குற்றவாளிகளும் நுழைவதாக டிரம்ப் குற்றஞ்சாட்டி, ஆட்சியின் முதல் நாளிலேயே அந்த நாடுகளின் மீதும் கூடுதல் வரிகளை வீசினார். இருப்பினும், இந்த வரிவிதிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.
இந்த வரிவிதிப்பு காலகட்டத்தில், கரடியின் ஆதிக்கத்துடன் பங்குச் சந்தைகள், ரத்தக் களரியாகக் காணப்பட்டன. இதன் காரணமாக, உள்ளூர் தொழிலதிபர் முதல் செவ்வாய்க் கிரக தொழிலதிபர் வரையில் பாதிக்கப்பட்டனர்.
இந்த நூறு நாள் ஆட்சியில் அமெரிக்க பங்குச் சந்தைகளான எஸ் & பி - 7.9 சதவிகிதமும், நாஸ்டாக் - 12.1 சதவிகிதமும், டௌ ஜோன்ஸ் - 8.9 சதவிகிதமும் இறக்கத்தைக் கண்டுள்ளன.

அமெரிக்காவுக்குள் குடியேற்றத்தைச் சிறிதும் விரும்பாத டிரம்ப், நாட்டில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடுகடத்தும் பணியில் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். டிரம்ப்பின் முந்தைய ஆட்சிக்காலத்தில் இருந்தே, குடியேற்றத்துக்கு எதிரான அவரின் கருத்துகளுக்கு போப் பிரான்சிஸ் எதிர்க்கருத்து தெரிவித்து வந்தார்.
இதன் விளைவாகவோ என்னவோ தெரியவில்லை, சட்டவிரோதமாகக் குடியேறியவர்களின் கைகால்களை சங்கிலியால் கட்டி, அவரவர் நாடுகளுக்கு ராணுவ விமானங்களில் அனுப்பி வைத்தார்.
டிரம்ப் நிர்வாகத்தின் இந்தச் செயல்பாடுகளுக்கு பல நாடுகளும் கண்டனம் தெரிவித்தாலும், அதனை அமெரிக்க அரசு மாற்றிக் கொள்வதுபோல தெரியவில்லை. இதுவரையில், ஒரு லட்சத்து முப்பதாயிரத்துக்கும் (1,30,000+) மேற்பட்டோரை டிரம்ப் அரசு நாடுகடத்தியதாகக் கூறுகிறது.
தற்காலிக விசாவில் இருப்பவர்களோ சட்டவிரோதமாகக் குடியேறியவர்களோ, அமெரிக்காவில் பிறக்கும் அவர்களின் குழந்தைகளுக்கு பிறப்புரிமை குடியுரிமை வழங்கப்படாது என்று டிரம்ப் அறிவித்தாலும், அந்தச் சட்டத்தினை அமெரிக்க நீதிமன்றம் தற்போது நிறுத்தி வைத்துள்ளது.

அதுமட்டுமின்றி, நாட்டில் இருபாலர் மட்டுமே என்ற கருத்துடன், மூன்றாம் பாலித்தனவர்களுக்கான எதிரான நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டார்.
அடுத்தபடியாக, அமெரிக்க அரசின் செலவினங்களைக் குறைப்பதிலும் கவனம் செலுத்துவதாக டிரம்ப் கூறியதன் விளைவாக, அனைத்து அரசுத் துறைகளிலும் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலைகளை இழந்ததுதான் மிச்சம்.
மேலும், பின்தங்கிய நாடுகளுக்கு அளித்து வந்த நிதியுதவியும் நிறுத்தப்பட்டமையால், (அமெரிக்காவின் புண்ணியத்தால்) வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களும் சங்கடத்துக்கு ஆளாகினர்.
நாட்டின் செலவினத்தைக் குறைக்கும் நடவடிக்கையின் மூலம் 2 டிரில்லியன் டாலர் சேமிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. அதில் 8 சதவிகிதமான 160 பில்லியன் டாலர், இந்த நூறு நாள் ஆட்சியில் சேமிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் குடியேற வேண்டுமென்றால், 5 மில்லியன் டாலர் முதலீட்டுடன்தான் உள்ளே வர வேண்டும் என்று டிரம்ப் கூறியது, குடியேற்றத்தைக் குறைப்பதாகவும் இருக்கலாம்; பொருளாதாரத்தை உயர்த்துவதாகவும்கூட இருக்கலாம்.
இஸ்ரேல் போரில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை, அமெரிக்க நாட்டுக்கு எதிரான நடவடிக்கையாக முத்திரையிட்டார். அவ்வாறு போராடுவார்களெனில், அமெரிக்க மாணவர்களென்றால் - அவர்களின் கல்வி நிறுத்தப்படும்; வெளிநாட்டு மாணவர்களென்றால் - அவர்களும் நாடுகடத்தப்படுபவர்களின் பட்டியலில் சேர்க்கப்படுவர்.
ரஷியா - உக்ரைன் போரை நிறுத்தி விடுவதாக, தேர்தல் பிரசாரத்திலிருந்தே டிரம்ப் கூறினாலும், அதற்கேற்றவாறே தீவிர நடவடிக்கையிலும் ஈடுபடுவதுபோலத்தான் தெரிகிறது. போர்நிறுத்தம் தொடர்பாக, பிப்ரவரி மாதம் உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கியுடன் டிரம்ப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இதன்போது, இருவருக்கும் இடையில் சிறு சலசலப்பு ஏற்பட்டதும், லோக்கல் இன்ஸ்டா செய்தி ஊடகங்கள் முதல் சர்வதேச செய்தி ஊடகங்கள் வரையில், டிரம்ப் - ஸெலென்ஸ்கி இருவரையும் தங்கள் முன்பக்கத்தில் வைத்து சம்பாதித்துக் கொண்டனர்.
ஸெலென்ஸ்கிக்கு எதிராக டிரம்ப் மாறும் நிலை ஏற்படலாம் என்று சில செய்தி ஊடகங்கள் சம்பாதித்த நிலையில், டிரம்ப்பின் கடந்த வார அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது. ஆம், ரஷியாவின் நடவடிக்கை தனக்கு சரியாகப்படவில்லை என்று கடந்த வாரம் டிரம்ப் கூறியதன் விளைவாக, அவரின் எண்ணங்கள் எப்போது எப்படி இருக்கும் என்று அறிவதும் குதிரைக் கொம்புதான் என்று அதே செய்தி ஊடகங்கள் கூறின.

எதுவாயினும், அமெரிக்காவின் வளர்ச்சிக்கு உழைத்து வருவதாக, பல்வேறு நடவடிக்கைகளை டிரம்ப் மேற்கொண்டாலும், அவையனைத்துக்கும் யாரேனும் ஒருதரப்பினர் விமர்சனங்களை அள்ளி, தெளித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
மற்ற நாடுகளுக்கிடையே அமெரிக்காவின் மதிப்பை உயர்த்துவதாக நினைத்து டிரம்ப் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், அவரது நாட்டையே அதலபாதாளத்துக்கு தள்ளாமல் இருந்தால் சரிதான்! என்றும் மறுதரப்பினர்.
நூறு நாள் ஆட்சியில் 41% சதவிகித ஆதரவைப் பெற்ற அதிபர் டிரம்ப், இனிவரும் ஆட்சிக்காலத்தில் எவ்வளவு மதிப்பெண்கள் (ஆதரவு) பெறுகிறார் என்பதைப் பொறுத்திருந்து காண்போம்.