சென்னை விமான நிலையத்தில் உயர் பாதுகாப்பு எச்சரிக்கை! பயணிகளுக்கு அறிவுரை...
Director Bala: ``வன்முறை என்பது எனது இரத்தத்தில் இருக்கிறது!'' - இயக்குநர் பாலா
அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் "வணங்கான்" திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இத்திரைப்படத்தின் 'நன்றி தெரிவிக்கும் விழா நேற்றைய தினம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அருண் விஜய் பேசுகையில், "மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய திரை உலக பயணத்தில் 'வணங்கான்' திரைப்படம் ஒரு மைல்கல் திரைப்படமாக அமைந்ததற்கு இயக்குநர் பாலா சாருக்கு நன்றி. ஒரு நடிகனாக, படம் முழுவதும் பேசாமல் மக்கள் மனதில் இடம்பெற முடியும் என்ற நம்பிக்கையை எனக்கு கொடுத்து, என் மேல் நம்பிக்கை வைத்து, இந்த படத்தை தயாரித்ததற்கு நன்றி. எனது நடிப்பையும் இந்த திரைப்படத்தையும் பற்றி இன்று அனைவரும் பாராட்டுகிறார்கள் என்றால் அதற்கு முழு காரணமும் பாலா சார் தான்.
அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் நடிக்கும் செயல்முறை மிகவும் நல்ல அனுபவமாக இருந்தது. செய்கை மொழியை கற்றுக் கொண்ட விதம், உடல் மொழியை மாற்றிக் கொண்ட விதம், எனது கதாபாத்திரத்திற்குள் என்னை ஆழமாக கொண்டு சென்ற விதம் என இவை அனைத்தையும் பாலா சார் வழிகாட்டுதல் இல்லாமல் என்னால் செய்திருக்க முடியாது. இந்த எல்லா பாராட்டுகளும் பாலா சாருக்கே போய் சேரும். என்னுடைய வாழ்க்கையில் இது போன்ற மற்றொரு படத்தை மறுபடியும் நடிக்க முடியுமா? என எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் இது போன்ற ஒரு படத்தை பாலா சாரினால் மட்டுமே கொடுக்க முடியும்." எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் பாலா பேசுகையில், "வன்முறை என்பது எனது இரத்தத்தில் இருக்கிறது. திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர், சென்னை போன்ற பல இடங்களை இப்போதைய திரைப்படங்கள் கதைக்களமாக கொண்டு எடுக்கப்படுகின்றன. அதனால் தான் கன்னியாகுமரியை கதைக்களமாகக் கொண்டு இத்திரைப்படத்தை எடுத்தேன்.
இத்திரைப்படத்தின் நேரம் 2 மணி நேரம் 5 நிமிடம். இந்த திரைப்படத்தில் செகண்ட் ஆப் காட்சிகள் மிகவும் வேகமாக செல்லும். அதனால் இந்த திரைப்படத்தை பார்க்கும் பொழுது மிகவும் சிறிய படம் போல தெரிகிறது. இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் நிகழ்வு சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவம். அதனை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. பேசிப் பேசிதான் திரைப்படத்தின் கதையை புரிய வைக்க முடியும் என நினைக்கும் இந்த காலத்தில், பேசாமலும் கதையை புரிய வைக்க முடியும் என காட்டுவதற்காக எடுத்த ஒரு முயற்சி தான் இந்த திரைப்படம். குற்றம் செய்பவர்களுக்கு இத்திரைப்படத்தில் காட்டிய தண்டனையை விட இன்னும் கூடுதலான தண்டனை வழங்க வேண்டும் என்பது எனது ஆசை. " என்றவர், ``குற்றப் பரம்பரை கதையை நான் திரைப்படமாக எடுக்கப் போவதில்லை.
மாற்றுத்திறனாளிகளின் உலகத்தை காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற திரைப்படங்களை எடுக்கிறேன். அவர்களை சும்மா பார்த்துவிட்டு, பரிதாபப்பட்டுவிட்டு ஒதுங்கி விடக்கூடாது. நமக்குள் தான் அவர்களும் வாழ்கிறார்கள். நம்மை நம்பி தான் அவர்களும் வாழ்கிறார்கள். அதைக் காட்ட வேண்டியது நம்முடைய கடமை." எனக் கூறினார்.