Disney cruise: நடுக்கடலில் விழுந்த 5 வயது மகள்; சட்டென குதித்த தந்தையின் வீரச் செயல்| Viral Video
டிஸ்னி க்ரூஸ் லைன் கப்பல் அமெரிக்கா, சிங்கப்பூர், நியூசிலாந்து, கனடா உள்ளிட்ட பல பகுதிகளில் கொண்டாட்ட கப்பல் சுற்றுலாப் பயணத்தை நடத்தி வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவில் பல பகுதிகளில் இந்தக் கப்பல் சுற்றுலாப் பயணம் பிரபலமாக இருக்கிறது.
இந்தக் கப்பலில் டிஸ்னி கதாபாத்திரங்களின் அணி வகுப்புகள், பார்ட்டிகள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடுவதற்கான பல அட்வன்சர் ஆக்டிவிட்டீஸ்கள் இருக்கின்றன. இதில் இரண்டுபேருக்கு 1 லட்சம் முதல் 4 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

11 மாடிகள் சுமார் 171 அடி உயரம் கொண்ட இந்த ராட்சத கப்பலை நடுக்கலில் பார்ப்பதற்கே மிகப் பிரமாண்டமாக இருக்கும். அதுவும் அந்தக் கப்பல் மேலிருந்து நடுக்கடலைப் பார்த்தால் ஈரக்குலையே நடுங்கிப் போய்விடும். அங்கிருந்து எட்டிக் கூட பார்க்க யாருக்கும் மனம் வராது. கடலின் பரந்து விரிந்த ராட்சத காட்சி அப்படியிருக்கும்.
அப்படியான நடுநடுங்க வைக்கும் சூழலில் தனது 5 வயது மகளைக் காப்பாற்ற குதித்திருக்கிறார் அவரது தந்தை. கப்பலில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது குழந்தை, திடீரென கப்பலின் 4வது மாடியில் இருந்து தவறி நடுக்கடலில் விழுந்திருக்கிறார். இதைக் கண்ட அந்தக் குழந்தையின் தந்தை மறுகணமே கடலில் குதித்து தன் மகளை நீந்திக் கண்டுபிடித்து இறுக்கமாக அணைத்துக் கொண்டிருக்கிறார்.
கப்பலில் இருந்த அவசர மீட்புக் குழுவினர் உடனே விரைந்து நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மகள், தந்தை இருவரையும் உயிருடன் மீட்டிருக்கின்றனர். நல்வேளையாக இருவரும் உயிர்தப்பியிருக்கின்றனர். இது கேட்பதற்கு அசாத்தியக் கதையாக இருக்கலாம். நீங்களே இந்த வீடியோவைப் பாருங்கள்....
NEW: Father jumps overboard to save his 5-year-old daughter, who fell off a Disney cruise ship from the 4th deck into the ocean.
— Collin Rugg (@CollinRugg) June 30, 2025
The ship was heading back to South Florida when the intense rescue was made.
"The ship was moving quickly, so quickly, it's crazy how quickly the… pic.twitter.com/PTGmAzZJ7O
இதுகுறித்து கப்பலில் இருந்த பயணிகள், "மகள் விழுந்ததும், தந்தையும் கடலில் குதித்துவிட்டார். கப்பல் வேகவேகமாகப் போய்கொண்டிருந்தது. நொடிகளில் இருவரும் கடலில் ஒரு சிறு புள்ளியைப் போல் தெரிய ஆரம்பித்துவிட்டனர். எங்கள் எல்லோருக்கும் அதைப் பார்ப்பதற்கே நடுக்கமும், அச்சமும் வந்தவிட்டது. நல்வேளையாக மீட்புப் படையினர் சரியான நேரத்தில் விரைந்து இருவரையும் மீட்டுவிட்டனர்." என்று கூறியிருக்கின்றனர். இதுதொடர்பான வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மகள் விழுந்ததும் தந்தை குதித்தது பேரன்பினால் வந்த துணிச்சல். ஆனால், அதுவே பெரும் ஆபத்தாகவும் மாறியிருக்கக்கூடும். ஆபத்து என்றால் மீட்புப் படையினை அழைத்து உதவி கேட்பதே சிறந்தது என்று நெட்டிசன்கள் கூறி, தந்தையின் வீரச் செயலைப் பகிர்ந்து வருகின்றனர்.